பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல்
பாடங்களுக்குக் கடும் போட்டி நிலவும்!
சென்னை, ஜூலை 7- பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று (7.7.2025) தொடங்க உள்ள நிலையில், நடப்பாண்டிலும், செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல், தரவு அறிவியல் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காண்பிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு படிப்பு
பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் மத்தியில் குறைந்தே காணப்பட்டது. பெரும்பாலான பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான இடங்கள் காலியாகவே இருந்தன.
இந்த சூழலில், உலகளவில் தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. இதன் காரணமாக, பொறியியல் படிப்பிலும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதிக கட்-ஆப் மதிப்பெண்
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் வேலைவாய்ப்புகள் செழித்து இருப்பதால், மாணவர்களுக்கும் அந்த படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காண்பித்தனர். இதன்காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மீண்டும் துளிர்த்திருக்கிறது.
பொறியியல் தரவரிசையில் அதிக கட்-ஆப் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களின் முதல் தேர்வாக செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பொறியியல் படிப்புகளே இருந்து வருகிறது.
“மாணவர்களின் முதன்மைத் தேர்வாக உள்ள இந்த படிப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் கோரி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப் பித்ததாகவும், சில கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கலந்தாய்வு தொடக்கம்
இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை இணைய வழி கலந்தாய்வு இன்று (7.7.2025) தொடங்குகிறது. முதல் நாளில், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவர்களுக்கான 7.5சதவீத உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு (மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு, ஜூலை 14ஆம் தேதி தொடங்கும்.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறும்போது:-
பொறியியல் கலந்தாய்வை பொறுத்த வரையில் கடந்த ஆண்டைப் போலவே, நடப்பாண்டும் போட்டி அதிகம் காணப்படும். செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் படிப்புகள் மாணவர்களின் பிரதான தேர்வாக இருக்கும். அதேநேரம், கடந்த ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு எலக்ட்ரானிக் கம்யூனி கேஷன் பொறியியல் படிப்பை மாணவர்கள் அதிகளவு தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தொடர்ந்து நிகழும் வேலைவாய்ப்புகள் இதற்கு காரணமாக இருக்கலாம். கட்-ஆப் மதிப்பெண் அதிகம் என்பதால், மாணவர்கள் அதிகளவிலான படிப்புகளை கலந்தாய்வில் தேர்வு செய்ய வேண்டும். சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.