கருநாடக மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், முக்கிய அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக, ‘தன்வந்திரி’ மந்திரத்தை 20 முறை உச்சரித்துவிட்டுத்தான் அறுவைச் சிகிச்சையைத் தொடங்குவார்களாம்!
‘தன்வந்திரி’ மந்திரம் என்பது தேவர்களுக்கு, ‘தன்வந்திரி’ என்ற மருத்துவ தேவனால் வழங்கப்பட்டதாம்.
இந்த மந்திரத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே உச்சரிக்கவேண்டும் என்று, யக்வல்கிய உபநிடதம் மந்திர உச்சாடன விதிமுறைகளில் உள்ளதாகக் கூறுகிறது.
இதன்படி, பார்ப்பனரல்லாத வேறு யாரும் இந்தக் குழுவில் இருந்து அறுவைச் சிகிச்சை செய்ய நேர்ந்தால், அறுவைச் சிகிச்சை தோல்வியில் முடிந்துவிட்டால், யார்மீது பழி போடுவார்கள்?
இந்த 21 ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சத்தைத் தொடும் ஒரு காலகட்டத்தில், அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதற்குமுன் ‘தன்வந்திரி’ மந்திரத்தை 20 முறை உச்சரித்து விட்டுத்தான் அறுவைச் சிகிச்சையை செய்யவேண்டுமாம் (‘தன்வந்திரி’ மந்திரத்தை பார்ப்பனர்கள் மட்டும்தான் உச்சரிக்க வேண்டும் என்பதைக் கவனிக்கவும்) இது ஏதோ ஏட்டில் அல்ல, நடைமுறையில் உள்ளது என்றால், இந்த நாட்டுக் குடிமகன் என்று சொல்லுவதற்கே நாம் வெட்கப்பட வேண்டாமா?
தன்வந்திரி மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருக்குமேயானால், அறுவை சிகிச்சை எதற்கு? வெறும் மந்திரத்தைச் சொன்ன அளவிலேயே நோயிலிருந்து குணமாகிவிடும் என்று சொல்லும் துணிவு உண்டா?
யார் இந்த தன்வந்திரியாம்?
திருப்பாற்கடலைக் கடைந்தபோது (அந்தக் கடல் எங்கே இருக்கிறது என்று கேட்டுவிடாதீர்கள்!) அமுத கலசத்துடன் தோன்றியவராம் – இவர் மருத்துவத்தின் கடவுளாம்!
ஆயுர்வேத மருத்துவத்தின் தோற்றத்திற்கு இவர்தான் காரணமாம்!
‘‘மாட்டு மூத்திரம் குடித்தால் நோய் தீரும்’’ என்று கூறும் படித்த மே(ல்)தாவிகள், மாட்டு மூத்திரம்கூட தன்வந்திரியின் அருள் சுரப்பி என்பார்களோ?
– மயிலாடன்