திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேரோட் டத்தின் போது ஜாதிய ரீதியிலான பனியன்கள், கைப்பட்டைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் இவ்விழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடை பெற்று வருகிறது. கோயில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8-ஆம் தேதி நடைபெற வுள்ளது. இதற்காக தேர்களை தயார் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்களுக்குச் சாரம் கட்டுதல், முகப்பில் மரக்குதிரை பொம்மைகளை பொருத்துதல், அலங்கார வேலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும், வீதிகளிலும், சந்நிதி, ராஜகோபுரம் நுழை வாயில்களிலும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தேரோட்டத்தை முன் னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் கடந்த3ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களை சேர்ந்த 1,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேரோட்டத் தின்போது 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் தொடக்கம் முதல் இறுதி வரை வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படும். தேரோட்டம் நடைபெறும் நாளில் 4 ரத வீதிகளிலும் வாகனங்களை நிறுத்தவோ, இயக்கவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்படும்.
தேரோட்டத்தின்போது ஜாதிய ரீதியிலான பனியன்கள், கைப்பட்டைகளை அணிந்து வருவது, ரிப்பன்களை கட்டிவருவது, பதாகைகளை வைப்பது, முழக்கங்களை எழுப்புவது, தேரின் மீது ஜாதி ரீதியிலான கொடிகளை பறக்கவிடுவது போன்ற எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதியில்லை. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக செய்வதற்கு ஏதுவாக ‘மே அய் ஹெல்ப் யூ’ உதவி மய்யம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மய்யத்தில் தொலைப்பேசி எண்கள் மூலம் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அவசர தேவைக்கும், பொதுமக்கள் 24 மணி நேரமும் 94981 01726 மற்றும் 100 (காவல் உதவி எண்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
அரசு என்பது வந்து விட்டால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியம் தான்.
மக்களைக் காப்பாற்றுபவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும், காவல்துறை, துப்பாக்கி, மோப்ப நாய் சகிதமாக ஏற்பாடு செய்வது எல்லாம் ஒரு நகை முரண்தான்! ஆனாலும் அரசின் கடமைகளைச் செய்ய வேண்டியது அவசியமே!
ஜாதி அடையாளங்கள், ஜாதி சங்கங்களுக்கான பதாகைகள், ஜாதியைக் குறிக்கும் படியான குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளைக் கட்டி வருதல், மதம் சார்ந்த முழக்கங்கள் – இவற்றை அரசு தடை செய்திருப்பது போற்றுதற்குரியது!
எந்த வகையிலும் ஜாதிக்குத் துணை போவது கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் (காவல்துறையின்) இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
இதையும் அரசியல் படுத்த மாட்டார்கள் என்றும் எதிர் பார்க்கிறோம்
இதுதான் மக்களுக்கும் நன்மை செய்வதும் கூட. நிகழ்ச்சி மத சார்பானது – ஆனால் ஆட்சி யின் கொள்கையோ மத சார்பற்றது! அதற்கு ஒத் துழைக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.