உங்கள் கிராமமாகிய இத்திருமங்கலத் திலுள்ள அக்கிரகார வீதியில் (பார்ப்பனர் சேரி) தாழ்த்தப்பட்டோர் போக உரிமை கிடையாது என்றிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த 1947-ஆம் ஆண்டிலும், அதுவும். அரசியலார் இவைகளை ஒழிக்கும் முறையில் சட்டம் செய்திருந்தும், இந்த ஊர்ஆரியர்கள் பகிரங்கமாக இவ்வளவு மனிதத் தன்மையற்று நடந்து வருகிறார்களென்றால் இந்த ஜாதி ஆணவத்தை எதற்கு ஒப்பிடுவது?
சுயமரியாதை – திராவிடர் இயக்கம் கிளச்சியால் ரயில்வே ஸ்டேஷன்களிலுள்ள ஜாதி வித்தியாசத் தடைகளும், ஓட்டல் களிலுள்ள ஜாதி வேறுபாடு முறை வழக்கங்களும் அறவே ஒழிந்து விட்டன.
ஆனால் இம்மாதிரியான கிராமங்களில் ஆரியர் ஜாதிக்காரர்கள் என்று கூறப்படுவோர், தாழ்த்தப்பட்டோருக்குச் செய்யும் வஞ்சத்தை உடனடியாக ஒழித்துத் தீரவேண்டுவது நாட்டின் நலன் கருதுவோர் அனைவரின் கடமையாகும்.
இவ்விதக் கொடுமைகளை எல்லாம் இனி எங்கிருந்தாலும் திராவிடர் இயக்கத்திற்குத் தெரிவியுங்கள். இவைகளை எல்லாம் முதலில் ஓர் மாநாட்டின் மூலம் அரசியலாருக்கு எடுத்து கூறுவோம் ஆவன செய்யவேண்டி.
அதற்கும் இன்றைய அரசிய லாரின் அலட்சியமே நமக்குப் பதிலாயிருக்குமானால், அரசியலாரின் 144 தடைகளையும் வேண்டு மானால் இந்த விஷயத்தில் மீறியாவது மனித உரிமையைப் பெறுவோம்.
சுருங்கக் கூறுகிறேன், “தாழ்த்தப் பட்டோரை யார் அடிமைப் படுத்தினாலும் அதைத் திராவிடர் இயக்கம் எதிர்த்துப் போராடும்” என்று.
இம்மாதிரியான காரியங்களில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பஞ்சாயத்தாரும் மற்றவர்களும் அக்கறை எடுத்து எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.
4.7.1947இல் திருமங்கலத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு
(விடுதலை 5-7-1947)