‘ஓர் அணியில் தமிழ்நாடு’ – தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சென்னையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தார்

Viduthalai

சென்னை, ஜூலை 4  ‘ஓரணியில் தமிழ்நாடு’ கட்சி உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்புக்காக, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பொதுமக்களைச் சந்தித்து அரசின் திட்டங்களை விளக்கியதுடன், உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டனர்.

‘ஓரணியில் தமிழ்நாடு’

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் திமுக 7-ஆவது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இதற்காக பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது.

இதற்காக ‘ஓரணியில் தமிழ் நாடு’ என்ற முன்னெடுப்பை, ஜூன் மாதம் மதுரையில் நடை பெற்ற பொதுக்குழுவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் தார். அதன்படி, ஜூலை 1-ஆம் தேதி ‘ஓரணியில் தமிழ்நாடு’ செயல்திட்டத்தை முதலமைச் சர் தொடங்கி வைத்தார். அதன் பின், 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் திமுக கட்சிரீதியாக உள்ள 76 மவட்டங்களிலும் பொதுக்கூட் டங்கள் நடத்தப்பட்டன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து, நேற்று (3.7.2025) வீடுவீடாகச் சென்று ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்வு தொடங்கியது. இந்த சந்திப்பின் மூலம் வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் பேரை கட்சியில் சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வீடுவீடாகச் சென்று பொது மக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, 6 கேள்விகள் அடங்கிய படிவத்தை பொதுமக்களிடம் அளித்து, அதற்கு பொதுமக்கள் அளிக்கும் பதிலை நேரில் கேட்டறிந்தார்.

குறிப்பாக ‘எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?’ என பொதுமக்களிடம் முதலமைச்சர் கேட்டு அதற்கான பதிலைப் பெற்றார். இதுபோன்று அடுத்தடுத்த கேள்விகளுக்கும் மக்களிடம் இருந்து பதிலை பெற்று கள நிலவரத்தை அறிந்து கொண்டார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, சாதி மதம் அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும். இதற்காக அடுத்த 45 நாட்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்த போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் மாவட்டச் செய லாளர்கள், நிர்வா கிகள் தங்கள் பகுதியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களிடம் வீடுவீடாகச் சென்று படிவத்தை அளித்து அதில் உள்ள கேள்விகளுக்கு பதிலைப் பெற்று, உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *