அறிவியல் மனப்பான்மையாக ஆக்கவேண்டும் என்பதே திராவிடக் கருத்தியல்! புத்தக அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை

viduthalai
9 Min Read

நம்முடைய கல்விக் கொள்கை ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்பதுதான்!
‘‘இன்னாருக்கு இதுதான்’’, ‘‘படிக்காதே’’ என்று சொல்வதுதான் ஆரியக் கல்விக் கொள்கை!
கல்வியை காவி மயமாக்கவேண்டும் என்பது ஆரியக் கருத்தியல்;

Contents
‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’பானையிலிருந்து பிறந்ததுதான், திராவிட மாணவர் கழகம்!கொள்கைப் போர் நடத்தக்கூடிய இளைஞர்களைத் தயாரிக்கக்கூடிய மாணவர் பாசறைஆதாயத்திற்காக அல்ல; ஆதாரத்திற்காகத்தான்!!ஆரிய மதம்தான், ‘‘படிக்காதே’’ என்று சொல்லிற்று!‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு இருக்கின்ற முதுகெலும்பு, வேறு எந்த ஆட்சிக்கும் கிடையாது!ஓர் இனத்தை, ஒரு கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சாரம்!புதிய தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கியது யார்?திராவிடக் கருத்தியல்!எல்லாவற்றிலும் ‘‘ஒரே, ஒரே’’தான்!ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 11 துணை அமைப்புகள்!மறைமலையடிகளார்!முதலமைச்சர் அண்ணாவின் உறுதி!அண்ணா ஆட்சியின் வழியில் அயராது உழைப்போம்!‘‘எல்லோருக்கும் எல்லாம்!’’திராவிட இயக்கம் வளர்ந்த காரணத்தினால்…

சென்னை, ஜூலை 3- கல்வியை காவி மயமாக்கவேண்டும் என்று சொல்வது ஆரியக் கருத்தியலாகும். கல்வியை, அறிவியல் மனப்பான்மையாக ஆக்கவேண்டும் என்பதுதான் திராவிடக் கருத்தியலாகும். நம்முடைய கல்விக் கொள்கை என்பது ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்பதுதான்.  ஆனால், ‘‘இன்னாருக்கு இதுதான்’’, ‘‘படிக்காதே’’ என்று சொல்வதுதான் ஆரியக் கல்விக் கொள்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தேசிய கல்விக் கொள்கை
2020 எனும் மதயானை’’

கடந்த 29.6.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய புத்தகத்தின் மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பான ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’  என்ற நூலின்  அறிமுக விழாவிற்குத் தலைமை தாங்கி, புத்தகத்தினை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியைச் சேர்ந்த நம்முடைய இராஜீவ் காந்தி போன்றவர்கள், சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பானையிலிருந்து பிறந்ததுதான், திராவிட மாணவர் கழகம்!

திராவிடர் கழகம் தாய்க்கழகம்; திராவிட மாணவர் கழகத்திலிருந்துதான் திராவிடர்  கழகம் தோன்றியது. எப்படி வந்தது என்றால், பானையில் இருந்து பிறந்ததுதான், திராவிட மாணவர் கழகம்.

பானையில் இருந்து பிறந்ததா? என்று நினைக்கலாம். குடந்தைக் கல்லூரியில், இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைத்திருந்தார்கள். ஒரு பானை, பார்ப்பன மாணவர்களுக்கு, உயர்ஜாதிக்கார மாணவர்களுக்கு மட்டும். இன்னொரு பானை, மற்ற ஜாதிக்காரர்கள், கீழ்ஜாதிக்கார மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக மட்டும் என்று வைத்தி ருந்தார்கள்.

அதைக் கேள்விப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டு இரண்டு பானைகளையும் தூக்கிப் போட்டு உடைத்து, ஒரே பானையாக வைக்கப்பட்ட திலிருந்து பிறந்ததுதான் திராவிட மாணவர் கழகம்.

திராவிட மாணவர்கள் நினைத்தால், ஓர் ஆட்சியைக் கொண்டு வர முடியும் என்ப தைத்தான் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தின் மூலமாக செயல்படுத்திக் காட்டினார்கள்.

கொள்கைப் போர் நடத்தக்கூடிய இளைஞர்களைத் தயாரிக்கக்கூடிய மாணவர் பாசறை

இது வெறும் அணியல்ல; ஆடம்பரம் அல்ல.  இது ஒன்றும் பெருமிதம் அல்ல. கொள்கைப் போர் நடத்தக்கூடிய இளைஞர்களைத் தயாரிக்கக்கூடிய மாண வர் பாசறையாகும்.

கலைஞராகட்டும், நானாகட்டும் எல்லோருமே மாணவர்களாக ஈரோட்டு குருகுலத்தில்  பயிற்சி பெற்றுதானே இந்தக் கொள்கைக்கு வந்தோம்.

இன்றைக்கு இங்கே புத்தகத்தை அறிமுகப்படுத்தி சிறப்பாகப் பேசுகிறோம். இந்தக் கொள்கையைப் பரப்புகின்றோம். அதேபோல, அப்படிப்பட்ட அற்புதமான மாணவர்கள்,  இந்தப் புத்தகத்தைப் பரப்பவேண்டும் என்பதும் விற்பனைக்காக அல்ல.

ஆதாயத்திற்காக அல்ல; ஆதாரத்திற்காகத்தான்!!

திராவிட இயக்கம் புத்தகத்தை வெளியிடுவது என்பது ஆதாயத்திற்காக அல்ல தோழர்களே! ஆதாரத்திற்கா கத்தான்!

இதோ இந்தக் கருத்து இங்கே இருக்கிறது என்று மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரத்தோடு சிறப்பாகச் சொல்கிறோம்.

இவ்வளவு காலம் நாம் போராடி, பல நூற்றாண்டு களாக நம்மைப் படிக்கக் கூடாதவர்களாக ஆக்கி வைத்திருந்தார்கள். படிக்க முடியாதவர்கள் அல்ல; படிக்கக் கூடாதவர்கள். இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வி அறிவைக் கொடுக்கக்கூடாது என்பதுதான் மனுநீதி.

ஆரிய மதம்தான், ‘‘படிக்காதே’’ என்று சொல்லிற்று!

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஓர் அற்புதமான கருத்தைச் சொல்கிறார், ‘‘நான், பல வெளிநாடுகளில் படித்தேன். ஆனால், உலக நாடுகளில், எந்த நாட்டிலும் எந்த மதமும் எல்லோரும் படியுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறது. ஆனால், உன்னுடைய மதம், உன்னுடைய ஸநாதனம், உன்னுடைய வைதீக மதம், உன்னுடைய வேதம், உன்னுடைய ஆரிய மதம்தான், ‘‘படிக்காதே’’ என்று சொல்லிற்று. அப்படியும் மீறி படித்தால், நாக்கை அறு; காதால் கேட்டால், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் எல்லாம் இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தின் உள்ளே இருக்கிறது.

எந்த ஓர் அரசுக்கும், எந்த ஒரு கல்வி அமைச்சருக்கும்  இவற்றையெல்லாம் துணிவாகச் சொல்லக்கூடிய துணிச்சல் இருக்காது.

‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு
இருக்கின்ற முதுகெலும்பு,
வேறு எந்த ஆட்சிக்கும் கிடையாது!

காரணம், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு இருக்கின்ற முதுகெலும்பு, வேறு எந்த ஆட்சிக்கும் கிடையாது. இது கொள்கைப் பாசறைக்கு உரிய வர்களால் உருவான ஆட்சி.

மாவட்டந்தோறும் இந்தப் புத்தகத்தினுடைய அறிமுக விழாவினை நடத்தவேண்டும். அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இளைஞர்களை, மாணவர்களை, பெற்றோரை அழைத்து அமர வைத்து, ‘‘தேசிய கல்விக் கொள்கை’’ப்படி நாளைக்கு அமுலானால் என்னாகும்? இப்போது இருக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்களே, இந்த ஆட்சியைப் போக்கடிக்கவேண்டும் என்று சொல்கிறார்களே, அதற்குச் சில  அடமானக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் ஒத்து ஊதுகிறார்களே, அதற்காக அங்கே சென்று சர ணாகதி அடைந்திருக்கிறார்களே, அதனால் என்னாகும்?

எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை –

மக்களுக்கு அல்லவா நட்டம் – எதிர்காலத் தலைமுறையினருக்கு அல்லவா நட்டம்!

இந்தத் திராவிட இயக்கம் இல்லாவிட்டால், என்னாகும்’’ என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

ஓர் இனத்தை, ஒரு கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சாரம்!

அது வெறும் அரசியல் பிரச்சாரம் அல்ல. அந்தப் பிரச்சாரம் என்பது, ஒரு சமுதாயத்தை, ஓர் இனத்தை, ஒரு கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சாரமாகும்.

ஆகவேதான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான நகரங்களில், ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ புத்தகத்தினை அறிமுகப்படுத்தி, புதிய கல்விக் கொள்கை நாட்டை எவ்வளவு நாசப்படுத்தும் என்பதை விளக்கிச் சொல்லவேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை என்பதில், கல்விக் கொள்கையே இல்லை.

புதிய தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கியது யார்?

ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்!

எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், கல்விக் கொள்கையை, கல்வி அறிஞர்கள் உருவாக்குவார்கள். அதை அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுபவர்கள் செயல்படுத்துவார்கள்.

ஆனால், நம்முடைய நாட்டில், அதுபோன்ற நிலை இல்லை. இந்தத் தேசியக் கல்விக் கொள்கை என்பது யாரால் தயாரிக்கப்பட்டது என்கிற ரகசியத்தை உடைத்துக் காட்டியிருக்கிறார் நம்முடைய அமைச்சர் அவர்கள். புள்ளி விவரத்தோடு சொல்லியிருக்கிறார்.

தேசியக் கல்விக் கொள்கையின் பின்னணியில் முக்கியமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். ஆரியம்தான்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நிறைவு – இந்த ஆண்டு.

அதை அழகாகச் சொன்னார் அமைச்சர் அவர்கள்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் உருவாக்கப்பட்டது.

‘‘ஆங்கிலம் பேசினால் வெட்கப்படவேண்டும்; நாங்கள் ஆங்கிலம் பேசாமல், ஹிந்தி மொழியில்தான் பேசுவோம்’’ என்றெல்லாம் அமித்ஷாக்கள் சொல்லலாம்.

அவர் இருக்கின்ற கட்சிக்கும் (பா.ஜ.க.), அந்தக் கட்சிக்கு உத்தரவுப் போடும் இயக்கத்திற்கும்
(ஆர்.எஸ்.எஸ்.) மூன்று எழுத்து ஆங்கிலம்தான்.

அந்த இயக்கத்தினுடைய பெயரே ஆர்.எஸ்.எஸ்.தான். இது ஆங்கிலம் இல்லையா?

அவாள் சொன்னால் மட்டும் சரி; இவாள் சொன்னால் மட்டும் சரியில்லை என்பதுதானா உங்கள் அளவுகோல்?

அதனால்தான் சொன்னார், ஒரு குலத்துக்கு ஒரு நீதி – அதுதான் மனுநீதி.

அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் நிறைய செய்திகள் உள்ளன. தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவில், கல்வியறிஞர்கள் கிடையாது.

கும்பகோணத்திலிருந்து சென்றவர்தான் அந்தக் குழுவில் இடம் பெற்றார்.

தமிழ்நாட்டில் ஓர் ஆளுநர் இருக்கிறார். துணை வேந்தர் என்று சொன்னால், அவர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறாரா? என்ற தகுதிதான் மிக முக்கியமாக இருக்கிறது. இதுதான் இந்தியா முழுவதும்.

திராவிடக் கருத்தியல்!

எனவே, கல்வியை காவி மயமாக்கவேண்டும் என்று சொல்வது ஆரியக் கருத்தியலாகும். கல்வியை, அறிவியல் மனப்பான்மையாக ஆக்கவேண்டும் என்பதுதான் திராவிடக் கருத்தியலாகும்.

சமஸ்கிருதத்தை இன்றைக்குத் தூக்கிப் பிடிக்கி றார்களே, ஏன்?

இந்தப் புத்தகத்தில்  14 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆதா ரத்தோடு சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியா யத்தைப்பற்றியும் ஒவ்வொரு நாள்  ‘பிரசங்கம்’ செய்ய லாம். பழைய காலத்தில், ‘பாரத பிரசங்கத்தினை’’ 18 நாள்கள் செய்வார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சினுடைய துணை அமைப்புகளாக கல்வித் துறையில் பல அமைப்புகளை வைத்திருக்கி றார்கள். அதனுடைய ஒரு பிரிவுதான் அரசியல் பிரிவான பா.ஜ.க.

இளைஞர்கள் இந்த ஆபத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். மத யானை எப்படிப்பட்டது?

எல்லாவற்றிலும் ‘‘ஒரே, ஒரே’’தான்!

ஒரே மதம் – வைதீக மதம், ஹிந்து மதம்

ஒரே மொழி – சமஸ்கிருதம்

ஒரே கலாச்சாரம் – சமஸ்கிருதக் கலாச்சாரம்.

மதச்சார்பற்ற நாடாக இருக்கக்கூடாது. இது சமத்துவ நாடாக இருக்கக்கூடாது. நேற்று வரையில் இதைத்தான் சொல்லுகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், தெளிவாக ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

ஏனென்றால், இந்தக் கொள்கை தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் இந்தக் கொள்கைகள் – ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு உரியது ஆகும்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி).

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்று சொல்வ தற்கு வாயில் நுழைகிறதா? ஆங்கிலத்தையே விரும்பாத வர்கள்கூட என்ன சொல்கிறார்கள்,  ஏபிவிபி என்றுதான் சொல்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்
11 துணை அமைப்புகள்!

  1. அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்
  2. வித்யா பாரதி – அகில பாரதிய ஷிக்‌ஷா சன்ஸ்தான்
  3. சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ்
  4. அகில பாரதிய இதிகாஸ் சங்களன் யோஜனா
  5. சமஸ்கிருத பாரதி
  6. விஞ்ஞான் பாரதி
  7. அகில பாரதிய சாகித்ய பரிஷத்
  8. சிக்‌ஷா பச்சாவோ அந்தோலன்
  9. அகில பாரதீய ராஷ்டிரிய ஷைக் ஷிக் மகாசங்
  10. சன்ஸ்கார் பாரதி
  11. பாரதிய சிக்‌ஷன் மண்டல்

மறைமலையடிகளார்!

மறைமலையடிகளார்தான் சொன்னார், ‘‘ரொம்ப நேரம் சமஸ்கிருதத்தில் பேசினால், அடிவயிறு வலிக்க ஆரம்பிக்கும். மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும்’’  என்று.

அண்ணா அவர்கள் முதலமைச்சரானபோது, அது பாடத் திட்டமாக இருந்தது. அண்ணா அவர்களிடம் சென்று புகார் செய்தார்கள்; ‘‘பார்த்தீங்களா, திராவிட ஆட்சி வந்தவுடன், சமஸ்கிருதத்தைப்பற்றி இவ்வளவு மோசமாக எழுதியிருக்கிறார்களே?’’ என்று.

‘‘இதை நாங்கள் யாரும் எழுதவில்லை. மறைமலை யடிகளார் எழுதியது. தமிழ்மொழியைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர் அவர்’’ என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

இந்த நிகழ்வெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது; இந்த நிகழ்வுகள் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அவர்களெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

முதலமைச்சர் அண்ணாவின் உறுதி!

அண்ணா வழி என்பதற்கு உதாரணம் என்ன?

அண்ணாவைப் பார்த்து, ‘‘ஆகா, நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்; கண்ணியமானவர். எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டத்திலிருந்து அதை நீக்கவேண்டும்’’ என்று கேட்டார்கள்.

அண்ணா அதற்குப் பதில் சொன்னார், ‘‘அது சமஸ்கிருதம்பற்றி மறைமலையடிகளார் எழுதியது; அறிவியல் பூர்வமானது; மொழியியல் பூர்வமானது. அதனை நாங்கள் பாடத்திலிருந்து எடுக்கமாட்டோம்’’ என்று  அண்ணா அவர்கள் உறுதியாக இருந்தார்.

அண்ணா ஆட்சியின் வழியில்
அயராது உழைப்போம்!

அன்றைக்கு அண்ணா நடத்திய அந்த ஆட்சியின் வழியில் அயராது உழைப்போம் என்று இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான முறையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்புகளின் பெயர்க ளைப் நான் படித்தால், தூரமாக அமர்ந்து கேட்பவர், ‘‘வீரமணி நல்லாதானே இருந்தார், அவருக்கு என்னாயிற்று?’’ என்ற சந்தேகம்தான வரும்.

அப்படிப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம்.

‘‘தேசியக் கல்விக் கொள்கை 2020’’ தயாரிப்புக் குழுவில், ஒரே ஒரு கல்வி நிபுணர்தான்.

இந்த விவரங்கள் எல்லாவற்றையும், இந்தப் புத்தகத்தில் மிகத் தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் நம்முடைய அமைச்சர் அவர்கள்.

‘‘எல்லோருக்கும் எல்லாம்!’’

நம்முடைய கல்விக் கொள்கை என்பது ‘‘எல்லோ ருக்கும் எல்லாம்’’ என்பதுதான்.

ஆனால், ‘‘இன்னாருக்கு இதுதான்’’, ‘‘படிக்காதே’’ என்று சொல்வதுதான் அவர்களுடைய கல்விக் கொள்கை.

உலகத்தில் எந்த மதம், எந்த நாடு, படிக்கக் கூடாது என்று சொல்கிறது? எந்த மதம் படித்தால், தண்டனை கொடுக்கிறது. பெண்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லுவது இந்த ஹிந்து மதம்தானே – ஆரிய மதம்தானே!

தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில், இந்தியாவில், தமிழ்நாட்டில் படித்தவர்களின் சதவிகிதம் எவ்வளவு தெரியுமா? 6 சதவிகிதம்தான்.

நூற்றுக்கு 6 பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அவர்கள் எல்லாம்கூட பட்டதாரிகள் இல்லை. மாறாக, ரேகை வைக்காமல், அவர்களுக்குக் கையெழுத்து மட்டும்தான் போடத் தெரியும்.

திராவிட இயக்கம் வளர்ந்த காரணத்தினால்…

அப்படிப்பட்ட நிலையில் இருந்த தமிழ்நாட்டில், திராவிட இயக்கம் வளர்ந்த காரணத்தினால், உலக நாடுகளோடு போட்டிப் போடக்கூடிய அளவிற்குக் கல்வியில் சாதனை செய்த ஓர் ஆட்சியும், அந்த ஆட்சியின் முதலமைச்சரும், அவரால் தயார்படுத்தப்பட்ட ஓர் அமைச்சரும் இன்றைக்கு இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *