சென்னை, ஜூலை.3– இமய மலையை கூட அசைத்துவிடலாம். ஆனால், திராவிட இயக்கத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்று வைகோ தெரி வித்துள்ளார்.
முதலமைச்சருடன் சந்திப்பு
ம.தி.மு.க. கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நேற்று முன்தினம் (1.7.2025) நடைபெற்றது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ‘தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே போகாது’ என தெரிவித்தார்.இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, வைகோ நேற்று (2.7.2025) சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திராவிட இயக்கம்
தி.மு.க. அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் நான் விமர்சனம் செய்தது கிடையாது. விமர்சனத்தை வைக்கவும் மாட்டேன். தி.மு.க.வுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்று கலைஞருக்கு உறுதி அளித்தேன்.
இந்துதுவா சக்திகளும், ஸநாதன சக்திகளும் பா.ஜனதாவின் புகை நிழலில் இருந்து கொண்டு திராவிட இயக்கத்தை தகர்க்க வேண்டும், அழித்திட வேண்டும் என நினைக்கிறார்கள். இமயமலையை கூட அசைத்துவிடலாம். ஆனால், திராவிட இயக்கத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.
தி.மு.க. வெற்றி பெறும்
2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக என்னுடைய கண்டனத்தை நான் மோடியிடமும், அமித்ஷாவிடமும் பதிவு செய்தேன். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின்போது போராட்டமும் நடத்தினேன். நாங்கள், நாடாளுமன்றத்தில் உள்ள காவல் நிலையத்தில் அடைக் கப்பட்டோம்.நாம் லட்சியத்திற்காக வாழ வேண்டும்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில்,தி.மு.க.கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதில், தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி ஆட்சி என்பது எங்கள் நோக்கம் கிடையாது. தமிழ்நாட்டு மக்களும் அதை ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.