சென்னை, ஜூன் 2 விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குடன் தமிழ்நாடு அமைச்சர், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சி வெற்றி அடைந்துள்ளது. 1,052 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் ஜவுளிப் பூங்கா மூலம் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் ஜவுளிப் பூங்கா மூலம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளிப் பூங்காவுக்காக 13 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. 2026 செப்டம்பருக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். ஜவுளி பூங்காவில் பணியாற்றவுள்ள தொழிலாளர்களுக்காக 10,000 படுக்கைகள் வசதி கொண்ட விடுதி அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.