புத்தக அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை

viduthalai
8 Min Read

‘‘பெரியாரின் செல்லப் பிள்ளை’’ அமைச்சருடைய தாத்தா அன்பில் தர்மலிங்கம்; அமைச்சருடைய அப்பா பொய்யாமொழி ‘‘பெரியாரின் கொள்கைப் பிள்ளை!’’
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெரியாரின் பேரன் என்று சொன்னாலும்,
கொள்கைப் பிள்ளையாக வளர்ந்ததினுடைய விளைவுதான் – ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ புத்தகம்!

சென்னை, ஜூலை 2- ‘‘பெரியாரின் செல்லப் பிள்ளை’’ அமைச்சருடைய தாத்தா அன்பில் தர்மலிங்கம்.  அமைச்சருடைய அப்பா பொய்யாமொழி ‘‘பெரியாரின் கொள்கைப் பிள்ளை’’ – நல்ல பிள்ளை.  அமைச்சரோ, பெரியாரின் பேரன் என்று சொன்னாலும், கொள்கைப் பிள்ளையாக வளர்ந்ததினுடைய விளைவுதான் – ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தேசிய கல்விக் கொள்கை
2020 எனும் மதயானை’’

கடந்த 29.6.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய புத்தகத்தின் மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பான ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’  என்ற நூலின்  அறிமுக விழாவிற்குத் தலைமை தாங்கி, புத்தகத்தினை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடியது, ‘திராவிட மாடல்’ ஆட்சி!

வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில், இந்நாள் அமைந்துள்ளது.  இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடியது, ‘திராவிட மாடல்’ ஆட்சி! அது மற்றவர்களுக்கும் ‘ரோல் மாடல்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஓர் உணர்ச்சியை, ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கிய நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்டதுதான் ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ என்ற அற்புதமான நூலாகும்.

மனுநீதி கல்விக் கொள்கைதானே தவிர, அது தேசியத்திற்குச் சம்பந்தப்பட்டது கிடையாது

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயராலே இருக்கக்கூடியது மனுநீதி கல்விக் கொள்கைதானே தவிர, அது தேசியத்திற்குச் சம்பந்தப்பட்டது கிடை யாது.

எனவே, அதனை ஆரியக் கல்விக் கொள்கை என்று சொல்லலாம். அண்மைக்காலமாக, தேசியம் என்பதற்கே ஆரியம் என்ற வார்த்தைதான் சமமானதாக வந்து கொண்டிருக்கின்றது.

‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மத யானை’’ என்ற அருமையான புத்தகம் இன்றைக்கு ஆய்வு செய்யப்படக் கூடிய  வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

அன்றைக்கு இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். அறிஞர்களையெல்லாம் அழைத்து, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, சமூகநீதியில் ஆழமான நம்பிக்கைப் படைத்த நீதிபதி அவர்களையும், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவரும், சமூகநீதியில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவருமான திக்விஜய் சிங் அவர்களையும், மயில்சாமி அண்ணாதுரை அவர்களையும் அழைத்து, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் மிகச் சிறப்பாக அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மற்றவர்களோடு போட்டிப் போடக் கூடிய அளவிற்கு நாம் உயர்ந்திருக்கின்றோம்!

அந்தப் புத்தகம், நூலகப் பதிப்பகம் போன்றும், பரிசுப் பதிப்பகம் போன்றும் இருந்தது. மற்றவர்களோடு போட்டிப் போடக் கூடிய அளவிற்கு நாம் உயர்ந்திருக்கின்றோம்.

அப்போது நான் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி, அந்தப் புத்தகம், தமிழ், ஆங்கிலத்திலும் இன்றைக்கு மக்கள் பதிப்பாக இங்கே வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு தோழரும் இந்தப் புத்தகத்தை வாங்குவ தோடு, நாடு முழுவதும் பரப்பவேண்டும்.

எனவே, மற்ற மொழிக்காரர்களுக்கு நம்முடைய நிலைப்பாடு என்னவென்று தெரியவேண்டும்.

இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கப் போகின்ற புத்தகமாகும் இது.

புயல் வேகத்தில் செய்து முடித்தார் நம்முடைய அமைச்சர்!

தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இது போதும். ஆனால், அறிவியல் கூறும் நல்லுலகத்திற்கு ஆங்கிலப் பதிப்பாகத்தான் வரவேண்டும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான பணியை, புயல் வேகத்தில் செய்து முடித்தார் நம்முடைய அமைச்சர்.

நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மிகக் குறுகிய நாள்களிலேயே வெளியிடக்கூடிய வாய்ப்பைக் கொடுத்த நம்முடைய ஒப்பற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வரலாற்றில்,இதுவரையில் யாரும் செய்யாத, செயற்கரிய செயலை செய்துள்ளார். இந்தக் கொள்கையை இவ்வளவு தூரம் பரப்பக் கூடிய அளவிற்கு, எதிரிகளின் வாயை அடக்கக் கூடிய அளவிற்கு, எதிரிகள் திணறக் கூடிய அளவிற்கு, வெறும் மேடை பேச்சு அல்லாமல் – ஆதாரப்பூர்வமான சான்றாவணங்களோடு இந்த நூல் வெளிவந்திருக்கின்றது.

எதைச் சொன்னாலும், ஆதாரத்தோடுதான் சொல்வோம்!

என்னை உங்களுக்கெல்லாம் தெரியும்; திராவிடர் கழகத்தைப்பற்றியும் உங்களுக்கெல்லாம் தெரியும். பெரியார் இயக்கத்தைப்பற்றியும் உங்களுக்கெல்லாம் தெரியும். எதைச் சொன்னாலும், ஆதாரத்தோடுதான் சொல்வோம்.

ஒப்பற்ற மானமிகு சுயமரியாதைக்காரர், கலைஞர் தேர்ந்தெடுத்த தலைப்பு!

நம்முடைய அமைச்சர் எழுதிய புத்தகத்திற்குத் தேர்ந்தெடுத்த தலைப்பு இருக்கிறதே, அது யாருடைய தலைப்பு?

எந்த நூற்றாண்டும் கண்டிராத அளவிற்கு வரலாறு படைத்த, செயல்திறம் மிக்க, ஒப்பற்ற மானமிகு சுயமரியாதைக்காரர், கலைஞர் தேர்ந்தெடுத்த தலைப்பு.

அவர் சொன்ன வார்த்தையிலிருந்துதான், இந்தப் புத்தகத் தலைப்பைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அப்படிப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அருமை நண்பரும், தோழருமான நமது அமைச்சர் – அவர்களைப் பொறுத்து, மூன்றாவது தலைமுறையை நான் சந்திக்கின்றேன்.

இந்நிகழ்விற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; எந்தக் கொம்பனாலும் திராவிடத்தை அசைக்க முடியாது.

கருப்பு சட்டை என்பது
நியாயம் கேட்கின்ற உடையாகும்!

இங்கே கூடியிருப்பது இளைஞர்கள் கூட்டம். இந்த இளைஞர்களுக்கு எல்லாம் தலைமை தாங்கு கின்றவர்களைப் பார்த்தீர்கள் என்றால், கருப்புச் சட்டை அணிந்து இரண்டு பக்கமும் அமர்ந்திருப்பவர்கள்தான்.

‘விடாது கருப்பு’ என்று சொல்லக்கூடிய அளவில், கருப்புச் சட்டை என்பது நியாயம் கேட்கின்ற உடையாகும். கருப்புடை அணிந்துகொண்டுதான், நீதிமன்றத்திற்கு  வழக்குரைஞர்கள் செல்வார்கள். நியாயம் கேட்பது கருப்புச் சட்டை. அதனால்தான், கல்வி அமைச்சரும் அந்த உடையில் வந்திருக்கின்றார்.

ஆகவே, தடை எதுவென்றாலும், மத யானையைப் பிடித்து அடக்கக் கூடிய மிகப்பெரிய கூட்டம், இந்தக் கூட்டம்.

வயதை வைத்து இளமையை எடைப் போடக்கூடாது; செயலை வைத்துத்தான் இளமையை எடைப் போடவேண்டும்!

இளைஞர்கள் கூட்டம் என்று சொல்கிறாரே, இவர் வயதானவராக இருக்கிறாரே, இவரும் தன்னை ‘‘இளைஞர்’’ என்று சொல்கிறாரே என்று சிலர் நினைக்கலாம். நாங்கள் எல்லாம்கூட இளைஞர்கள்தான். வயதை வைத்து இளமையை எடைப் போடக்கூடாது; செயலை வைத்துத்தான் இளமையை எடைப் போடவேண்டும். போராட்டத்திற்கு யார் யார் என்றைக்கும் தயாராக இருக்கிறார்களோ, அவர்கள் அத்துணை பேரும் இளைஞர்கள்தான் – சீரிளமைத் திறம் வாய்ந்த தமிழ் போல.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், ஆசிரியர்கள் கோரிக்கை வைப்பது அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நானும் ஓர் ஆசிரியர் என்ற முறையில், அவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.

‘மக்கள் நெஞ்சில்
மலிவுப் பதிப்பு!’’

அது என்ன கோரிக்கை என்றால், நீங்கள் எழுதிய புத்தகம்  ஆதாரச் செறிவுடன்  மிக ஆழமானதாக இருக்கிறது; அட்டையும் மிகவும் அழகாக இருக்கிறது. விலையும் அதிகமாக இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ‘‘மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு’’ என்று சொன்னார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

மக்கள் மத்தியில் இந்நூல் பரவவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பரவவேண்டும் என்பதற்காக, இந்தப் புத்தகத்தினை மலிவுப் பதிப்பாக வெளியிட்டால், நன்றாக இருக்கும் என்று சொல்லி சில நாள்கள்தான் ஆகின்றன.

எனக்கு எல்லையில்லாத
ஒரு போனஸ் மகிழ்ச்சி!

உடனே வௌயீயிட்டு விழாவிற்குரிய ஏற்பாட்டினை மிக அற்புதமாக செய்திருக்கின்றார். அதைவிட எனக்கு எல்லையில்லாத ஒரு போனஸ் மகிழ்ச்சி என்னவென்றால், நான் சொன்னபடியே ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்.

‘‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’’ என்று தொடங்கினார்.

அண்ணாதான், இருமொழிக் கொள்கையை எடுத்துச் சொன்னார். இங்கே மும்மொழிக்கு வேலையே இல்லை.  தமிழ் – ஆங்கிலம் போதும்.

ஆகவேதான், ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ இந்த நூலின் தலைப்பின்படி கலைஞர் சொன்ன உவமை என்பது மிகவும் ஆழமானதாகும்.

கலைஞர் சொல்கின்ற உவமை போன்று, வேறு யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால், ஈரோட்டு குருகுலத்தில் பயிற்சி எடுத்தவர் அவர்.

மதம் பிடித்தால் யானையைக் கட்டுப்படுத்த முடியாது!

யானை மிகவும் பெரியதுதான். ஆனால், அதனுடைய சக்தி எப்போது ஆபத்தாக வரும் என்றால், மதம் பிடித்தால், அந்த யானையைக் கட்டுப்படுத்த முடியாது.

மத யானையால் ஒரு பெரிய ஆபத்து எதுவென்று சொன்னால், தனக்கு நாள்தோறும் உணவு அளித்து, தன்னை குளிக்க வைத்து, எல்லா வகையிலும் தன்னைப் பராமரித்துக் கொண்டிருக்கின்ற யானைப் பாகனையே தூக்கி அடித்துவிடும்.

இன்றைக்கு அதுபோன்றுதான், யார் ஓட்டுப் போட்டார்களோ (மக்கள்) அவர்களையே தூக்கிப் போடுகின்ற அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.

மத யானைக்கு இங்கே இடமில்லை!

எனவேதான், மத யானைக்கு இங்கே இடமில்லை; மத யானையை நாம் மாற்றவேண்டும். மத யானையை விரட்டிடவேண்டும்; மத யானையை அடக்க வேண்டும் என்ற உதாரணத்தை வைத்துக் கொண்டு, அந்தக் கல்விக் கொள்கையைப்பற்றி மிக ஆழமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை அன்பில் அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கின்றார் அமைச்சர் அவர்கள்.

திராவிட இயக்கத்தில் அன்பில் அவர்களுக்கு ஒரு தனித் தகுதி என்னவென்றால், அவர் ‘‘பெரியாரின் செல்லப் பிள்ளை’’ என்பதுதான்.

கொள்கைப் பிள்ளையாக வளர்ந்ததினுடைய விளைவுதான்!

இப்போது அந்த உறவின் தொடர்ச்சி எப்படி வளர்ந்திருக்கின்றது என்பதற்கு அடையாளம் சொல்லவேண்டுமானால், ‘‘பெரியாரின் செல்லப் பிள்ளை’’ இவருடைய தாத்தா அன்பில் தர்மலிங்கம். இவருடைய அப்பா பொய்யாமொழி அவர்கள், ‘‘பெரியாரின் கொள்கைப் பிள்ளை’’ – நல்ல பிள்ளை.

இவர், பெரியாரின் பேரன் என்று சொன்னாலும், கொள்கைப் பிள்ளையாக வளர்ந்ததினுடைய விளைவுதான் – இதுபோன்ற புத்தகங்களை எழுதி யிருக்கிறார்.

அமைச்சர்கள் புத்தகம் எழுதுவதில்லை. இந்தக் கொள்கையைப்பற்றி யாரும் இவரிடம் விவாதம் செய்ய முடியாது. வேண்டுமானால், இன எதிரிகள் இவரிடம் விவாதம் செய்து பார்க்கட்டும்.

மும்மொழிக் கொள்கையைப்பற்றி விவாதிக்கப் போகிறீர்களா? வாருங்கள். ஏனென்றால், அவ்வளவு சரக்கு இவரிடம் இருக்கிறது. இது சாதாரண சரக்கு அல்ல. காஞ்சிபுரம், ஈரோடு இரண்டும் கலந்து தயாரிக்கப்பட்ட சரக்கு. அதில் திருவாரூரும் சேர்ந்திருக்கிறது. இப்போது கடலூர் அதைப்பற்றி பேசுகிறது.

மக்கள் மத்தியில் பரவவேண்டும்!

மிகப்பெரிய அளவிற்குத் தகவல் அடங்கிய ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ புத்தகம் மக்கள் மத்தியில் பரவவேண்டும்.

இந்தப் புத்தகம் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு, இன்றைக்கு வெளியிடப்பட்டு இருக்கின்றது. எல்லா இடங்களிலும் அமைச்சர் பங்கேற்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அமைச்சர் பங்கேற்றால், மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், அமைச்சருக்குப் பல பணிகள் இருக்கும்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *