தமிழ்நாட்டுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த உலக வங்கி
தமிழ்நாட்டிற்கு ரூ.1.185 கோடி நிதி வழங்க உலக வங்கி அனுமதியளித்துள்ளது. தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சியும், 18,000 மகளிருக்கு சுய தொழில் தொடங்குவதற்கான பல்வேறு பயிற்சிகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டங்கள் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன.
பத்மசிறீ விருது பெற்ற துறவி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
பத்மசிறீ விருது பெற்ற துறவி கார்திக் மகாராஜ் மீது மேற்கு வங்க காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது. தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் இந்த சம்பவம் நடத்த நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததால் புகார் அளிக்கவில்லை என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
சோசியலிசம் தேவையில்லையாம் ஒன்றிய அமைச்சர் சவுகான்
இந்தியாவுக்கு சோசியலிசம் தேவையில்லை, மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தின் மய்யக்கரு அல்ல. ஆகவே, இது குறித்து விவாதிக்க வேண்டுமென ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அண்மையில் பேசிய
ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர், சோசியலிசம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் அவசர நிலைக்கு பின்பே சேர்க்கப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சவுகான் பேச்சு உள்ளது.
தனி நபர் வருமானத்தில்
மிகவும் பின்தங்கிய இந்தியா!
தனிநபர் வருமானத்தில் முன்னணியில் உள்ள டாப் 50 நாடுகளின் பட்டியலை Visual Capitalist இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில் லக்சம்பர்க் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு ரூ.1.20 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அயர்லாந்து 2, சுவிட்சர்லாந்து 3, சிங்கப்பூர் 6, அமெரிக்கா 7ஆவது இடத்திலும் உள்ளன. உலக சராசரி தனிநபர் வருவாய் ரூ.12.15 லட்சம். ஆனால், இந்தியாவின் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு 2.45 லட்சம் மட்டுமே.
தட்கல் முன்பதிவு…
ரயில்வே புது முடிவு!
தட்கல் முன்பதிவு டிக்கெட் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், ரயில்வே துறை சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அய்ஆர்சிடிசி செயலியில், ஆதார் சரிபார்த்தல் முடித்தவர்கள் மட்டுமே இனி தட்கல் முன்பதிவு செய்ய முடியும். இந்நிலையில், சரிபார்த்தல் பட்டியலில், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டையும் சேர்க்க பரிசீலிக்கப்படுகிறது. உடனே டிஜிலாக்கரில் அந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து விடுங்கள்.
வெளிநாட்டில் குவியவுள்ள
2.19 லட்சம் கோடி இந்திய பணம்
இந்தியாவிலிருந்து 2.19 லட்சம் கோடி சொத்துகளுடன் 3,500 பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023 ஆண்டு 5,100 பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், 2024இல் இது 4,100 ஆக சரிந்தது. தற்போது அதனை காட்டிலும் குறைந்துள்ளது. கடந்த 2014-2024 வரை நாட்டில் 72 சதவீதம் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.