கனவு இல்லம் திட்டம் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

Viduthalai

சென்னை, ஜூன் 29- ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழ்நாடு அரசு சாா்பில் நேற்று (28.6.2025) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண் டிலும் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உறுதி செய்கிறது. இத்திட்டத்தில் கடந்த நான்கு நிதியாண்டுகளில் சராசரியாக 66.91 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 77.37 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாற்றுத் திறனாளி களுக்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் 1.12 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 1.16 லட்சம் பேருக்கும் வேலை வழங்கப்பட்டது.

ஊரக நூலகங்கள் புதுப்பிப்பு

கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நிதியாண்டுகளில் 10 ஆயிரத்து 187 கிராம ஊராட்சிகளில் 69 ஆயிரத்து 760 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதேபோன்று, ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 7 ஆயிரத்து 924 நூலகங்கள் ரூ.176.02 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகள் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், இதுவரை 3,900 ஏரிகளில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

கனவு இல்லம் திட்டம்

குடிசையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளு டன் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இரு நிதியாண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டு 72 ஆயிரத்து 81 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. சமத்துவபுரம் திட்டத்தின் கீழ், எட்டு இடங்களில் புதிய சமத்துவபுரங்கள் அனுமதிக்கப்பட்டு 800 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

அனைத்து ஊரக குடும்பங்களும் கழிப்பறை வசதி பெறுவதை நோக்கமாகக் கொண்டு 4 ஆண்டுகளில் 3.38 லட்சம் தனிநபா் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் சிறப்புத் திட்டத்தின்படி, 4 ஆண்டுகளில் இதுவரை 1.11 கோடி வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 13.80 லட்சம் வீடுகளுக்கான குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *