திருச்சி, ஜூன் 29- பன்னாட்டு போதைப்பொருள் ஒழிப்பு நாளான 26.06.2025 அன்று காலை 11 மணியளவில் விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்து உரையாற்றினார்.
அவர் தமது உரையில் போதை பழக்கத்திற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக, மாணவ சமுதாயம் சீர்கெட்டு வருவதாகவும் உரையாற்றி, நலவாழ்வுத் துறையில் இருக்கக்கூடிய மருந்தாளுநர்கள் போதையில்லாத சமுதாயத்தை உருவாக்க சரியான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விழிப்புணர்வு நாடகம்
அதனைத் தொடர்ந்து .திருச்சி மாவட்ட மனநல மய்ய உளவியலாளர் கீதா பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டயப் படிப்பு மாணவர்கள் நிகழ்த்திக் காட்டிய மொழியில்லா நாடகத்தினைக் கொண்டு போதை ஒழிப்பு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், திருச்சி மாவட்ட மனநல மருத்துவருமான மருத்துவர் பி.டி.கிருஷ்ணமூர்த்தி இன்றைய இளம் தலைமுறைகள் போதை பழக்கத்திற்கு எவ்வாறு அடிமையாகின்றனர் என்பதனையும் அவ்வாறு அடிமையாவதற்கான குடும்பம் மற்றும் சமூகக் காரணங்களையும் மாணவர்களின் மத்தியில் விளக்கினார்.
மகிழ்ச்சி என்பதனை அடைய நம்மைச் சுற்றி பல வழிகள் இருக்கின்றன. தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்வதை மகிழ்ச்சியாக கருதினார். ஆனால் இன்று இளம் வயதினர் எவருக்கும் அடங்காமல், நினைத்ததை செய்வதையே மகிழ்ச்சியாக கருதுகின்றனர். ஏழ்மை, தோல்வி போன்றவைகள் ஏற்பட்டால் நமக்கு மட்டும் ஏன் என்று சிந்தித்து, வாழ்வை பாதிக்கும் போதை பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெற்றோர், ஆசிரியர், உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கடமை என்பதனை குறிப்பிட்டு போதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
மனநல ஆரோக்கியம்
மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையின் உளவியலாளர் காட்சன் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை மாணவர்களுக்கு விளக்கியதோடு அதற்கான பயிற்சியினையும் செய்து காட்டினார். மேலும் மனம் ஆரோக்கியம் பெற நல்ல புத்தகங்கள், இசை, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, மனதை ஒருமுகப்படுத்தல் போன்றவற்றை செய்வதோடு மனம் விட்டுப் பேசக்கூடியவர்களாக திகழ வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ.ஜெசிமா பேகம் வரவேற்புரையாற்றினார். மருந்தாக்கவியல் துறைப் பேராசிரியர் எஸ். பிரிதர்ஷினி நன்றி கூறினார்.
விழிப்புணர்வுப் பேரணி
முன்னதாக காலை 9 மணியளவில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குடிபோதை மாற்று மறுவாழ்வு மய்யம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் நடத்திய விழிப்புணர்வுப் பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் அ.ஜெசிமா பேகம் மற்றும் பேராசிரியர்கள் டி.கோகிலவாணி, ர.தினேஷ், செல்வி கே. ரெத்தினா, ஆர்.ஷக்தி மற்றும் செல்வி என். கீர்த்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
1000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணியை திருச்சி மாவட்ட போதைப்பொருள் ஒழிப்புத் துறையின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் துவங்கி இரயில் நிலைய சந்திப்பில் நிறைவுற்றது. இதில் நமது பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் 120 பேர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.