சேலம், ஜூன் 26 கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒரு போதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் கூறினார்.
சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கான இலச் சினையை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று (24.6.2025) நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மாநாடு இலச்சினையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கட்சியின் 26-ஆவதுமாநிலமாநாடு சேலத்தில் ஆகஸ்ட் 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி.ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகா ரத்தைக் கைப்பற்றுவோம் என்று அமித்ஷா கூறுகிறார். இதற்கு கருத்து கூறாமல், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மவுனமாக இருக்கிறார். பாஜக கூட்டணிநிர்பந் தத்தால் உருவாக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தேர்தலுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். வகுப்புவாத சக்திகள் கால் ஊன்றக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு காலம் நீடித்தது கிடையாது. திமுக தலைமையிலான கூட்டணிக் கொள்கை ரீதியிலானது. எனவே, இக்கூட்டணி ஒருபோதும் உடை யாது. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் எம்.பி.சுப்பராயன், சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.