இதுதான் சமூகநீதி!

4 Min Read

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (வயது 24). பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த இவர், 10ஆம் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இளம்வயது திருமணம், குழந்தை பராமரிப்பு காரணமாக உயர்கல்வி செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போதைய கல்வியாண்டில் தமிழ் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அரசு கல்லூரி கல்வி இயக்குநரகம் விதிகளின்படி 16 நாள்கள் வயது முதிர்வு காரணமாக கல்லூரியில் சேர்க்க முடியாது என்று மறுத்துள்ளனர்.

இதனால் பழங்குடியின பெண் வித்யா   விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுவில், ‘இளங்கலை தமிழ் முடித்து, முதுகலை தமிழ் படித்து, தமிழில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்ற விரும்புகிறேன். 24 வயது முடிந்து 16 நாள்கள் ஆகிறது. இதைக் காரணம் காட்டி கல்லூரியில் சேர அனுமதி மறுக்கின்றனர். விளிம்பு நிலையில் வாழும் பழங்குடி மக்களின் படிப்பறிவு விகிதம் 54.3 சதவீதம். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எனக்குத் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆவன செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பழங்குடியின பெண் வித்யா கல்லூரியில் சேர்வதற்கான நடவடிக்கை எடுத்து அவர் விரும்பிய திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இளங்கலை முதலாமாண்டு சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பழங்குடியின பெண் வித்யா நன்றி தெரிவித்துள்ளார்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில் இது போன்ற – சமூகநீதிக் கண்ணோட்டத்துடனான செயல்பாடுகள் நாளும் வளர்ந்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இது போன்ற ஆக்கப் பூர்வமான ஆட்சியின் செயல்பாடுகள் தான் – உயர்ஜாதி ஆணவக் கூட்டத்திற்கு – இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது அடங்கா ஆத்திரமும், எரிச்சலும் கொப்பளிப்பதற்குக் காரணமாகும்.

சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, JEE அட்வான்ஸ்டு 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஷ்வரி. கடுமையான ஏழ்மை நிலையிலும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் 417ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ராஜேஷ்வரியின் இந்த வெற்றி, அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அவரது கனவுகளை அடைய வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது போன்ற உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் எண்ணற்ற மாணவர்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டாக, உந்துசக்தியாகத் திகழ்கிறார்.

அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை எழுதி தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ராஜேஷ்வரி தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவரின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ் வழிக்கல்வி, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மூலம் இத்தகைய தேர்வில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கிறார் ராஜேஷ்வரி. இது அவர் கடந்து வந்த வரலாறு!

கருமந்துறையில் உள்ள பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்ததாக அவர் கூறுகிறார். “மெயின் தேர்வில் வெற்றி பெற்றால் என்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றால் தான் அய்.அய்.டி. போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எங்களின் ஆசிரியர்கள் கூறினார்கள். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டேன்,” என்றார் ராஜேஷ்வரி.

‘‘கல்வி என்பது உயர் ஜாதியினருக்கே’’ என்னும் ஏக போக உரிமையை உடைத்தது தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமுமேயாகும்.

அதுவும் பெண்கள் – பெண்களிலும் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர்கள் படித்துக் கரை ஏறுவது என்பது சாதாரணமானதல்ல. முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் சமுதாயத்துக்கு அளித்த  உள் ஒதுக்கீடு இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கத் தக்கதாகும்.

‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தி வரும் நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் சமூகநீதிக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இவை கண் குளிரும் எடுத்துக் காட்டுகளாகும்.

‘‘தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை’’ என்றார் நமது புரட்சிக் கவிஞர் – இதோ இப்பொழுது நம் கண்முன் காணுகிறோம் மகிழ்ச்சி – வாழ்த்துகள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *