புதுடில்லி, ஜூன் 25 மராட்டிய சட்டசபை தேர்தல் தொடர்பாக ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் விளக்கம் அளித்தநிலையில், ராகுல்காந்தி மீண்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார்.
அவர் தனது’எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி பெற்ற நாக்பூர் தென் மேற்கு சட்டமன்றத் தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் 29 ஆயிரத்து 219 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது.
எனவே,மராட்டிய மாநில முதலமைச் சரின் சொந்தத் தொகுதியிலேயே 5 மாதங்களில் வாக்காளர் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் வாக்களித்ததாக வாக்குச்சாவடி அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். உறுதிப்படுத்தப்படாத முகவரியை கொண்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்களித்ததை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் செய்தது என்ன? அமைதியாகவோ அல்லது உடந்தையாகவோ இருந்தது.
இவையெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த முறைகேடுகள் அல்ல. இவை ஓட்டுத் திருட்டு. இதை மூடி மறைப்பதே ஒரு ஒப்புதல் போன்றதுதான்.
எனவேதான், எந்திரத்தால் வாசிக் கத்தக்க டிஜிட்டல் வாக்காளர் பட்டியலையும், கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் உடனடியாக வெளியிடு மாறு கோரி வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.