சென்னை, ஜூன் 20 பொதுமக்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவைகளை எளிதாக பெறுவதற்காக, நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட் டுள்ளது.
தொலைதூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகளை எளிதாக பெறுவதற்காக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், கடவுச்சீட்டு நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை ஒன்றிய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் கடவுச்சீட்டு சேவை திட்டத்தின் இணை செயலாளரும், தலைமை கடவுச்சீட்டு அதிகாரியுமான கே.ஜெ. சிறீனிவாசா தொடங்கி வைத்தார். விழாவுக்கு, சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி எஸ். விஜயகுமார் தலைமை வகித்தார்.
இதுகுறித்து, கடவுச்சீட்டு அதிகாரிகள் கூறிய தாவது:
தற்போதுள்ள கடவுச்சீட்டு சேவை மய்யங்கள் மற்றும் அஞ்சல் அலுவலக சேவை மய்யங்கள் தவிர, கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலில் கடவுச்சீட்டு சேவைகளை வழங்குவதே இந்த வேன் சேவையின் நோக்கமாகும். கடவுச்சீட்டு சேவைகளைப் பெற மக்கள் இனி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை.
இணைய வழியில் பதிவு
இந்த வேன் முதலில் தாம்பரத்தில் நிறுத்தப்படும். பின்னர், கடவுச்சீட்டு பெறுவதற்கான கால வரம்புகள் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லும். கடவுச்சீட்டு சேவா போர்ட்டல் மூலம், சேவைகளைப் பெற இணைய வழியில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர்களின்
ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை ஜூன் 20 ஆசிரியர்களின் ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரங்கள் வருமாறு:
ஓய்வூதிய பலன்கள் வழங்கு வதில் தாமதம் இருந்துவருவதாக தெரிகிறது. இந்த கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போதுவெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் மீது தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை ஏதுமில்லை என்ற நிலையில் அவர்களுக்கு உடனே 30 நாட்களுக்குள் அனைத்து பலன்களும் வழங்க வேண்டும்.
தணிக்கைத் தடைகள் காரணமாக ஓய்வு பெற்றவர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய பலன்களை நிறுத்தி வைக்கக்கூடாது. ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பிற இனங்களில் நிலுவை ஏதேனும் இருந்தால் அதன் அடிப்படை யில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கிடையேயான
திருக்குறள் பேச்சு – கட்டுரைப் போட்டிகள்!
சென்னை, ஜூன் 20 இந்தியாவில் நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் சிறீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகிய சிறீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 24 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த இருக்கிறது.
இப்போட்டிகள், 12 மய்யங்களில் நடத்தப்படும். சென்னையில், ஜூலை 12 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.அய். ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஜூலை 19 அன்று கிழக்கு தாம்பரத்திலுள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. சென்னை தவிர, ஜூலை 13 வேலூரிலும், ஜூலை 20 புதுச்சேரியிலும், ஜூலை 26 சேலத்திலும், ஜூலை 27 திருச்சியிலும், ஆகஸ்ட் 2 மதுரையிலும், ஆகஸ்ட் 3 நெல்லையிலும், ஆகஸ்ட் 9 தஞ்சாவூரிலும், ஆகஸ்ட் 10 திருவாரூரிலும், ஆகஸ்ட் 23 கோவையிலும், ஆகஸ்ட் 24 ஈரோட்டிலும் நடைபெறவுள்ளது.
இடைநிலை (6-8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (912 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள சிறீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் இப்போட்டியினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.