ப |
ன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் 2023-இல் தொடங்கி, 69 போட்டிகளாக நடத்திய பன்னாட்டு டெஸ்ட் வாகையர் போட்டியில் 2025-ஜூன் மாதத்தில் நிறைவுபெற்று, அதன் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணி வெற்றிபெற்று வாகை சூடியுள்ளது. அந்த அணியின் தலைவர் டெம்பா பவுமா கோப்பையை வாங்கியதை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே நாடுகளை மறந்து கொண்டாடினர். அதற்கொரு காரணம் உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி, எல்லா தரப்பினராலும் வரவேற்கப்பட்டும், கொண்டாடப்பட்டும் வந்ததை ஊடகங்களில் காண முடிந்தது. அதற்கும் ஒரு காரணம் உண்டு!
கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!
தென்னாப்பிரிக்காவில் நிலவி வந்த நிறவெறி – இனவெறிக் கொடுமைகள் காரணமாக ஏறத்தாழ 20 ஆண்டுகள் பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்க அணி 1991-ஆம் ஆண்டு தான் மீண்டும் அய்.சி.சி.யில் இடம்பிடித்தது. எனவே 1975-இல் தொடங்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளில் முதல்முறையாக 1992-ஆம் ஆண்டுதான் தென்னாப்பிரிக்க அணி போட்டியிட்டு விளையாடியது. தொடக்க முயற்சியிலேயே உலகத்தோரின் கவனத்தை ஈர்த்தாலும், அரையிறுதிப் போட்டியில் மழை காரணமாக சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முறையில்லாத இலக்கை நிர்ணயித்ததால், தென்னாப்பிரிக்க அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த உலகக் கோப்பையின் போது தற்போதைய தலைவர் டெம்பா பவுமாவுக்கு இரண்டே வயது! அதன்பிறகு எத்தனையோ உலகக் கோப்பை போட்டிகள்; திறமை வாய்ந்த எத்தனையோ வீரர்கள்!
பெரும் திறமை வாய்ந்த அணியாக இருந்தாலும், உலகக் கோப்பைப் போட்டிகளில் முக்கியமான ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி, ரசிகர்களை ஏமாற்றியபடியே இருந்தது தென்னாப்பிரிக்கா! போட்டிகளில் முக்கியமான நேரத்தில் பதற்றத்தின் காரணமாகவே தோல்வியைத் தழுவும் திறமை யாளர்களை சோக்கர்ஸ் (Chokers) என்று அழைப்பார்கள். அப்படி பன்னாட்டுக் கிரிக்கெட்டில் சோக்கர்ஸ் என்றே அழைக்கப்படும் அணியாக மாறியது தென்னாப்பிரிக்கா! அப்படிப்பட்ட வரலாறு கொண்ட அணி வெற்றி பெற்றிருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
ஆனால், தமிழ்நாடு அதை வரவேற்பதற்கும், மகிழ்வதற்கும் கொண்டாடுவதற்கும் காரணம் அதையும் தாண்டியது! பெயர்தான் தென்னாப்பிரிக்க அணி – அப்போது இடம் பெற்றிருந்தோர் அனைவரும் வெள்ளையர்களே! ஒமர் ஹென்றி மட்டுமே வெள்ளையர் அல்லாத ஒரே ஒருவர்! 1998-ஆம் ஆண்டு தான் மகாயா நிட்டினி மூலமாக முதல்முறையாக கருப்பின வீரர்களுக்கு நுழைவு கிடைத்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில்! அதன் பிறகு 23ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிக்குத் தலைமையேற்ற முதல் கருப்பினத்தவர் என்ற பெருமை பெற்றார் டெம்பா பவுமா! இப்போது அவர் தலைமையில் தான் தென்னாப்பிரிக்கா தனது முதல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அவர் உயரம் குறைந்தவர் கூட, அதனாலும் உடல் ரீதியான இழுக்கு செய்யப்படுவதுண்டு. அதையும் தாண்டிய உயரத்தை எட்டியிருக்கிறார் பவுமா.
இந்தியாவிலும் ‘சப்பல சலபுல’ என்று ஆடி வந்த கிரிக்கெட் அணிக்குப் புயல்வேகத்தில் போராடிய கபில்தேவ் தலைமையேற்ற பின்னர் தான் புத்தெழுச்சி கிடைத்தது என்பது வரலாறு. இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றதும் அவர் தலைமையில் தான்! அதற்கு முந்தைய இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதும் வெஸ்ட் இண்டீஸ் கருப்பினத்தவர் தான்! இப்போது வரலாறு மீண்டும் ஒரு முறை வேறு வடிவத்தில் திரும்பியுள்ளது. டெம்பா பவுமா மட்டுமல்ல, இப்போது தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணியில் மேலும் இரண்டு கருப்பின வீரர்கள் உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல லட்சக்கணக்கான திறமையான கருப்பின வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் இருப்பர். அவர்களை முறைப்படி உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணியின் தேர்வின்போது இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படு கிறது என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.
தென்னாப்பிரிக் காவில் கிரிக்கெட் அணித் தேர்வுக்குப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறைக்கு ’மாற்றத்திற்கான கொள்கை’ ‘Transformation Policy’ என்று பெயர். அதன்படி, 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் வெள்ளையர் அல்லாத 6 பேர் இடம்பெற்றிருக்க வேண்டும். அதில் இரண்டு பேர் கண்டிப்பாக கருப்பினத்தவராக இருக்க வேண்டும். வெள்ளையர் அல்லாதவர் என்பதில் இந்திய வம்சாவளியினர் உள்பட பல்வேறு இனத்தவர் இடம்பெறுவர்.
இப்படி படிப்படியாக அனைவருக்குமான அணியாக, அனைவரும் இடம்பெற்றுள்ள அணியாக மாற்றும் செயல்பாடுதான் இன்று டெம்பா பவுமா, ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி ஆகிய வீரர்கள் இடம்பெறக் காரணம்.
திறமையாளர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கும் ஆதிக்கத்தை உடைக்க வேண்டுமானால், இத்தகைய இடஒதுக்கீடுகள் தான் பயன்படும். சமூகநீதி மண்ணான தமிழ்நாடு அதனால் தான் டெம்பா பவுமாவின் வெற்றியைக் கொண்டாடுகிறது.
இந்தியாவில் தனியார் நிறுவனமாக பிசிசிஅய்-யின் கிரிக்கெட் அணிதான் இந்தியாவின் அலுவல்பூர்வமான கிரிக்கெட் அணியாக முன்னிறுத்தப்படுகிறது. அதில் இடம்பெறுவோரில் நூற்றுக்கு 80 விழுக்காடு பார்ப்பனர்களே! ஒருவர் இஸ்லாமியர், ஒரு கிறித்துவர், ஒரு சீக்கியர் என்று போக்குக் காட்டுவார்கள். மற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களாக இருந்த நிலை உண்டு. படிப்படியாக மாற்றம் வருவது போல் தோன்றினாலும், மீண்டும் ஒடுக்கப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அதற்கான குரல் எழும்போதெல்லாம், இதிலுமா இடஒதுக்கீடு கேட்பீர்கள்? திறமைக்கு மரியாதையே இல்லையா? என்று அக்கிரகாரக் குரல்கள் கேட்கும்.
இதோ இப்போது கிடைத்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி, அழுத்திச் சொல்வதும் நாம் உரத்துச் சொல்வதும் இது தான் – “விளையாட்டுத் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்!”