எத்தனைப் பார்ப்பனர்களை அழைத்து வந்தும் கூட்டம் நடத்தலாம்; எத்தனைக் கூலிப் பட்டாளங்களையும் அழைத்து வரலாம்! எதை வேண்டுமானாலும் பேசலாம்- பெரியார் பிம்பத்தை உடைப்போம் என்று சொல்லலாம்!
பெரியாரை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது; ஏனென்றால், பெரியார் ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்படக்கூடியவர் – நாட்டிற்குப் பயன்படுவதைவிட, வீட்டிற்கு அதிகம் பயன்படுபவர்!
கும்பகோணம், ஜூன் 20 எத்தனைப் பார்ப்பனர்களை அழைத்து வந்தும் கூட்டம் நடத்தலாம்; எத்தனைக் கூலிப் பட்டாளங்களையும் அழைத்து வரலாம். பைத்தியக்காரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எதை வேண்டுமானாலும் பேசலாம். பெரியார் பிம்பத்தை உடைப்போம் என்று சொல்லலாம். ஆனால், பெரியாரை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஏனென்றால், பெரியார் அவர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்படக்கூடியவர். நாட்டிற்குப் பயன்படுவதைவிட, வீட்டிற்கு அதிகம் பயன்படுபவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்!
கடந்த 7.6.2025 அன்று மாலை கும்பகோணத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
14.6.2025 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
தந்தை பெரியார் என்ற
மாபெரும் தலைவருக்குத்தான்!
இப்படி நான் தயாராகி, இன்றைக்கு இந்த இயக்கத்தி னுடைய நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்த இடத்தில் நான் இருக்கின்றேன் என்று சொன்னால், அது எனக்குப் பெருமையல்ல – தந்தை பெரியார் என்ற மாபெரும் தலைவருக்குத்தான் அந்தப் பெருமை உரியதாகும்.
சாக்கோட்டை அன்பழகன் அவர்களுடைய தந்தையார் கணபதி, அய்யா ஆர்.கே.சுந்தரம் ஆகியோர் 1932 ஆம் ஆண்டு – நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள். கலப்புத் திருமணம் என்ற வார்த்தையைக்கூட தந்தை பெரியார் அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
வாரிசு அரசியல்பற்றி பேசுகிறார்கள் புரியாத பைத்தியக்காரர்கள் சிலர்!
ஒவ்வொரு குடும்பம்பற்றிய வரலாறு ‘பச்சை அட்டை குடிஅரசில்’ வெளிவந்தது. சித்தார்த்தனின் தந்தையார் ஆர்.பி.சாரங்கன். இப்படி குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். வாரிசு அரசியல்பற்றி பேசுகிறார்கள் புரியாத பைத்தியக்காரர்கள் சிலர். இதுதான் கொள்கை வாரிசு.
வாழையடி வாழையாக வந்ததொரு கூட்டம்!
இப்படி இந்த இயக்கம் இருப்பதினால்தான், யாரா லும் அசைக்க முடியாமல் இருக்கிறது.
அப்பா ஒரு கொள்கை; மகன் ஒரு கொள்கை என்று இருந்தால், அது சரியாக இருக்காது.
ஒரே கொள்கையில், அப்பாவும் – மகனும் இருந்தாலே சண்டை வருகிறது, அது வேறு விஷயம். ஆனால், அப்பாவும் – மகனும் ஒரே கொள்கையில் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
அந்தக் கொள்கையினால் நாம் என்ன பெறுகிறோம்? அந்தக் கொள்கையினால் என்ன கிடைக்கும்? இவர் (சாக்கோட்டை அன்பழகன்) அரசியலுக்கு வந்ததினால், சட்டப்பேரவை உறுப்பினராகிவிட்டார்.
ஏணி இல்லையென்றால்,
மேலே ஏறிச் செல்ல முடியாது
நாங்கள் எல்லாம் என்ன பெறுகிறோம்? எப்போதுமே படிக்கட்டு, படிக்கட்டாகத்தான் இருக்கும். ஆனால், படிக்கட்டு இல்லை என்றால், காலை வைத்து ஏறிப் போக முடியாது.
ஏணி, ஏணியாகத்தான் இருக்கும்; ஏணி இல்லை யென்றால், மேலே ஏறிச் செல்ல முடியாது.
அதேபோன்று, தோணி, தோணியாகத்தான் இருக்கும். அது மேலே வர முடியாது.
ஆகவே, தோணியும் தேவை, அதில் பயணம் செய்யும் பயணியும் தேவை.
அதுமாதிரி, இரட்டைக் குழல் துப்பாக்கியாக, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழக மும் என்றைக்கும் இருக்கும். சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா – வெற்றி விழா இது.
இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.
இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னை வந்து சந்தித்தார். அவர் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர்.
ஒரு குழு அமைத்தார்கள். அந்தக் குழுவினரின் அழைப்பின் பேரில், வெளி மாநிலத்திலிருந்து உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி வந்தார். அவரிடம், ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள். ஆங்கிலப் புத்தகம் அது. அந்தப் புத்தகத்திற்கு நான் அணிந்துரை கொடுத்திருந்தேன். அதில், பெரியார் படம் போட்டிருக்கும்.
பெரியாருக்கு எப்படி
இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது?
அதைப் பார்த்த அந்த நீதிபதி, ‘‘எனக்கு ஒரு சந்தேகம், அதை உங்களிடம் நான் கேட்கிறேன். பெரியாருக்கு எப்படி இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது? அவர் மந்திரியாகவோ, வேறு எந்தவிதமான அரசியல் பதவியிலேயோ இருந்ததில்லை. என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் – ஆனால், அவர்களுடைய பாட்சா தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. பெரியாருடைய கொள்கையை யாராலும் அசைக்க முடியவில்லையே, இதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார்.
தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஒருவர்கூட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களாக இல்லையே!
இன்னொரு சந்தேகமும் எனக்கு இருக்கிறது, ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்; அதில் ஒரு ‘பிராமின்’கூட இல்லையே! தி.மு.க.வை விடுங்கள்; கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஒரு ‘பிராமின்’கூட இல்லையே ஏன்?’’ என்று கேட்டிருக்கிறார்.
இதுதான் பெரியாரின் சாதனை!
அவருடைய நண்பர், அந்த நீதிபதியிடம் சொன்னார். ‘‘இன்னொன்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 234 பேர் இருக்கிறார்கள். அந்த 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் பல கட்சியினர் இருக்கிறார்கள். பி.ஜே.பி.யை சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்களோடு கூட்டணி சேர்ந்த கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒரு ‘பிராமின்’கூட இல்லை’’ என்றார்.
உடனே அந்த நீதிபதி கேட்கிறார், ‘‘என்ன சொல்றீங்க, ஒரு ‘பிராமின்’கூட இல்லையா?’’ என்று.
இதுதான் பெரியார் மண் – திராவிட மண்.
அதற்கு முன்பெல்லாம் பார்த்தீர்கள் என்றால், கும்பகோணம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிறீரங்கம் போன்ற தொகுதிகளை ஒதுக்கி வைத்தி ருந்தார்கள். நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பார்ப்பனர், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். ஆனால், இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், ஒரு பார்ப்பனர்கூட சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை. ஏன் இந்த நிலை வந்தது? என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். வரலாற்றினைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
அண்ணாவின் காலத்திலேயே அதற்குரிய அடித்தளம், கட்டுமானம் அமைக்கப்பட்டு விட்டது
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே, அதற்குரிய அடித்தளம், கட்டுமானம் அமைக்கப்பட்டு விட்டது. மேலே எழுப்பப்பட்ட கட்டடம் எவ்வளவு பலமாக இருக்கின்றது என்பதற்கு அடையாளம்தான் அது.
அடித்தளம் பலமாக இருந்ததால்தான், கட்டுமானம் பலமாக இருக்க முடியும். அதுதான் சுயமரியாதை இயக்கம் – அதற்கு நூற்றாண்டு விழா!
இன்றைய இளைஞர்கள் இதனை நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்; எதிரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இயக்கத்தை அசைக்க முடியாது.
பெரியார் பிம்பத்தை உடைப்போம் என்று சொல்லலாம்; ஆனால், பெரியாரை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது!
நீ, எத்தனைப் பார்ப்பனர்களை அழைத்து வந்தும் கூட்டம் நடத்தலாம்; எத்தனைக் கூலிப் பட்டாளங்க ளையும் அழைத்து வரலாம். பைத்தியக்கா ரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எதை வேண்டுமானாலும் பேசலாம். பெரியார் பிம்பத்தை உடைப்போம் என்று சொல்லலாம். ஆனால், பெரியாரை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது.
ஏனென்றால், பெரியார் அவர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்படக்கூடியவர். நாட்டிற்குப் பயன்படு வதைவிட, வீட்டிற்கு அதிகம் பயன்படுபவர்.
சமூகநீதி என்றால் என்ன?
எல்லாருக்கும் எல்லாமும் என்பதுதான்.
சிலர் புரியாமல் கேட்பார்கள், ‘‘சரிதான், ஏன் நீங்கள் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்கவில்லை’’ என்று.
இடம் கொடுப்பதா? வேண்டாமா? என்பதை மக்கள்தானே தீர்மானிக்கவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆண் நின்று கொண்டிருக்கும்போது, நாற்காலியில் பெண்கள் அமர்ந்திருந்தால், ‘‘நீங்கள் உட்காருங்கள்’’ என்று சொல்லமாட்டார்கள் நம் தாய்மார்கள்.
‘‘நாங்கள் எவ்வளவு காலம் நின்றிருந்தோம்; எவ்வளவு காலம் எங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். கொஞ்ச காலம் நிற்கட்டுமே!’’ என்கிறார்கள்.
குப்பனுக்கும், சுப்பனுக்கும்தான்
‘சாமி’ வரும்!
ஏன், திடீர் திடீரென்று பெண்கள் சாமி வந்து ஆடு கிறார்கள்? படித்தவர்கள்மீது சாமி வராது. எங்கேயாவது கேள்விபட்டிருக்கிறீர்களா? ‘‘மாவட்ட ஆட்சியர்மீது சாமி வந்து ஆடினார்; தாசில்தார் போய் பிடித்தார்’’ என்று. சாதா ரணமாக, குப்பனுக்கும், சுப்பனுக்கும்தான் சாமி வரும்.
அறிவைக் கொடுத்து, சமத்துவத்தைக் கொடுத்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!
திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதுகூட சாமி வந்து ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், கணவன் நீண்ட காலமாக ‘‘வாடி, போடி’’ என்று அழைக்கின்றானே, அவனை ஒரு நாளாவது பகிரங்கமாக ‘‘வாடா’’ என்று கூப்பிடவேண்டும்.
‘‘டேய், நான் யார் தெரியுமாடா?’’ என்று அந்த அம்மா தனது கணவனைப் பார்த்துக் கேட்கும்.
உடனே, இவனுடைய குரலே மாறிப் போய், ‘‘அம்மா, தாயே!’’ என்பான். நீண்ட நாள்களாக மனதில் தேக்கி வைத்திருந்த ஆசையை, மனைவி தீர்த்துக் கொள்கிறாள்.
இப்படி இருந்த பெண்களுக்கு அறிவைக் கொடுத்து, சமத்துவத்தைக் கொடுத்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.
பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
முடியுமா? என்று கேட்டார்கள்.
ஒன்றிய அமைச்சராக இருந்தவர் கேட்டார், ‘‘ஆண்கள் கோபப்படமாட்டார்களா?’’ என்று
ஏன் அவர்கள் கோபப்படப் போகிறார்கள்? என்று கேட்டார் பெரியார்.
பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர்; எனக்குப் பேராசிரியரான கார்த்திகேயன் சந்திரசேகர் அவர்கள். தந்தை பெரியார் அவர்களைப் பேட்டி எடுத்தார்.
‘‘ஆண் – பெண் பிரச்சினை வருகிறதே, அதற்குத் தீர்வுதான் என்ன?’’
உலகப் பொருளாதார மக்கள் தொகை நிபுணரான கார்த்திகேயன் சந்திரசேகர், ‘‘ஆண் – பெண் பிரச்சினை வருகிறதே, அதற்குத் தீர்வுதான் என்ன?’’ என்றொரு கேள்வி கேட்டார்.
அய்யா அவர்கள், ‘‘அனைத்துத் துறைகளிலும் 50 சதவிகிதம் இடம் பெண்களுக்குக் கொடுத்தால், பிரச்சினை தீரும் என்றார்.
பேராசிரியர் கேட்கிறார், ‘‘எனக்கு ஒரு சந்தேகம், அப்படி 50 சதவிகிதத்தைப் பெண்களுக்குக் கொடுத்தால், சண்டை வராதா?’’ என்று.
‘‘ஏன் சண்டை வரப் போகிறது? அவருடைய தங்கைக்கோ, மகளுக்கோ, அம்மாவிற்கோ, அக்கா விற்கோ கிடைக்கிறது அல்லவா. பிறகு ஏன் சண்டை வரப் போகிறது?’’ என்றார்.
பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பேராசிரியர், பேனாவை கீழே போட்டுவிட்டு, என்னைப் பார்த்து, ‘‘என்ன வீரமணி, நீங்களும், நானும் பல்கலைக் கழகத்தில் படித்திருக்கின்றோம். பெரியார் எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்? இப்படி டக்கென்று சொன்னார் பாருங்கள்’’ என்றார்.
இதுதான் சுயமரியாதை இயக்கம்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
இதோ என்னுடைய கையில் இருப்பது ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகம். இதை எழுதியவர் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்தான். இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்தான்.
சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்டவர் இவர். ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்துகொண்டிருந்த சங்கராச்சாரியார் அல்ல. பெரியவா, மகாபெரியவா என்று சொல்வார்களே, அந்த சங்கராச்சாரியாருக்கு நெருக்க மாக இருந்தவர்தான் இந்தப் புத்தகத்தை எழுதியவர்.
அவர் சொல்கிறார், பெண்கள் யார் என்றால், மனு தர்மப்படி, அது உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும் சரி. அவர்கள் சண்டாளர்கள்தான். பெண்களும் துவி ஜாதியினர்.
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் அதற்கும் கீழே யார் என்று சொன்னால், எல்லா ஜாதிப் பெண்கள். பார்ப்பனப் பெண்கள் உள்பட.
எல்லோருக்கும் சம வாய்ப்பு-
சம உரிமை கொடுக்கவேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கம்!
இன்றைக்குச் சுயமரியாதை இயக்கம், பெண்களுக்குச் சமத்துவம் வேண்டும் என்று சொல்லும்போது, பார்ப்பனப் பெண்களைத் தவிர என்று சொல்வதில்லை.
எல்லோருக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கவேண்டும்; சம உரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்வதுதான் சுயமரியாதை இயக்கம்.
இங்கே அதிரடி அன்பழகன் உரையாற்றும்போது, நாதசுரம் வாசிப்பதுபற்றி வேகமாக சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இந்த இயக்கம் என்ன செய்தது என்று புரியாமல் கேட்பவர்களுக்குச் சொல்கிறேன்.
நாயனம் வாசிப்பது என்பது அரிய கலையாகும். மூச்சுப் பிடித்து வாசிப்பது. சாமர்த்தியம் வாய்ந்த ஒரு பணியாகும் அது.
அதேபோன்று, கழுத்தில் மாட்டிக்கொண்டு, தவிலை அடிக்கவேண்டும். பயிற்சி எடுத்து, மூச்சுப் பயிற்சி எடுத்து செய்யவேண்டும்.
நாதசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்
அதற்கு மிகப்பெரிய ஆதாரமாக யாரைக் காட்ட வேண்டும் என்றால், திருவாவடுதுறை பக்கத்தில் உள்ள திருமருகல் ஊரில் பிறந்த டி.என்.ராஜரத்தினம்தான். நாதசுர சக்கரவர்த்தி என்று பெயர் பெற்றவர் அவர்.
இவருக்கு முன், மதுரையைச் சேர்ந்த நாதசுர வித்வான் சிவக்கொழுந்து. அவர்தான் செட்டிநாடு கானாடுகாத்தானில் நடைபெற்ற ஒரு மணவிழா ஊர்வலத்தில், சட்டை போடாமல் நாதசுரம் வாசித்துக் கொண்டே வந்தார். தோளில் போடப்பட்டிருந்த துணியால் வழிகின்ற வியர்வையைத் துடைத்துக் கொண்டே நாதசுரம் வாசித்து வந்தார் சிவக்கொழுந்து.
நாதசுர வித்வான் சிவக்கொழுந்து
அற்புதமான கலைகளைக்கூட கொச்சைப்படுத்தி, திறமையானவர்களை, ஜாதி சாயத்தைப் பூசி, கீழ்மக்கள் என்றாக்கிய கொடுமையைப் போக்கிய ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான்.
அந்த மணவிழா ஊர்வலத்தில் சிவக்கொழுந்து நாதசுரம் வாசித்து வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரி, அதனைக் கேட்பதற்காக அங்கே செல்கிறார்.
நாதசுர வித்வானான சிவக்கொழுந்து, வாசித்துக் கொண்டே வருகிறார். வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் இருக்கும் துணியைப் பயன்படுத்துகிறார். அப்போது ஒருவர், ‘‘சிவக்கொழுந்துவின் தோளில் இருக்கும் துண்டை எடுத்துவிட்டு நாதசுரம் வாசி’’ என்று சொல்கிறார்.
‘‘சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே!’’
உடனே ஒரு குரல், ‘‘சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே!’’ என்று வருகிறது.
யாருடைய குரல் என்று பார்த்தால், அது அழகிரி அவர்களுடைய குரல். துண்டு எடுக்காமல்தான் நாதசுரம் வாசிக்கவேண்டும் என்று அவர் சொல்கிறார்.
ஊர்வலம் போகக்கூடாது, நிறுத்து, நிறுத்து என்று சொல்லி, ஊர்வலத்தை நிறுத்திவிடுகிறார்கள்.
இந்தப் பஞ்சாயத்தைத் தீர்க்கவேண்டும் என்ப தற்காக, தந்தை பெரியாரிடம் செல்கிறார்கள்.
“அவரும் மனிதன்தானே; தோளில் துண்டு போட்டால் உங்களுக்கென்ன கெட்டுப் போயிற்று?’’ என்று கேட்டார் தந்தை பெரியார்!
துண்டைப் போட்டு வாசித்த பிறகுதான், பெண்ணும், மாப்பிள்ளையும் ஊர்ப் போய்ச் சேர்ந்தார்கள்.
(தொடரும்)