இதுதான் குடியரசுத் தலைவர் ஆட்சியின் உபயமோ? மீண்டும் மணிப்பூரில் வெடித்தது வன்முறை – கலவரம்!

3 Min Read

இம்பால், ஜூன் 10- மெய்தி இன தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் நடந்த போராட்டத்தால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதையடுத்து இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மோதல்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி இனக் குழுக்களுக்கு இடையே கடந்த 2023ஆம்ஆண்டு மாதம் மோதல் வெடித்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். இதனால் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக பா.ஜனதாவை சேர்ந்த முதலமைச்சர் பைரேன் சிங் பதவி விலகினார்.

இதனையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப் பட்டு உள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சற்று அமைதி திரும்பியது.

துப்பாக்கிச் சூடு

இந்நிலையில் மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கனன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தலைவரின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது. தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரி போக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதினர். இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள குராய் லாம்லாங்கில் சில வாகனங்களை ஒரு கும்பல் எரித்தது. குவாகிதெலில் துப்பாக்கி சத்தங்கள் கேட்டன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

கூடுதல் படைகள்

கைது செய்யப்பட்ட தலைவர் மாநிலத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவார் என்று தகவல் பரவியது. இதனால் இம்பால் விமான நிலைய வாயிலையும் போராட்டக்காரர்கள் முற்றுகை யிட்டனர்.

கைது செய்யப்பட்ட தலைவரை மாநிலத்திற்கு வெளியே அழைத்து செல்லும் முயற்சியை தடுக்கும் வகையில் அவர்கள் விமான நிலைய சாலை, தெருக்களில் இறங்கி சாலையின் நடுவில் தூங்கினர். கைதுக்கு எதிரான அடையாள போராட்டங்களில் அரம்பாய் தெங்கோலின் உறுப்பினர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொண்டனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, நிலைமையை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் உள்ள இம்பால் மேற்கு, கிழக்கு, தவுபால், பிஷ்ணுபூர், காக்சிங் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவையை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய்குமார் பல்லா உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4 பேருக்கு அதிகமாக ஒன்று கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

3 கிளர்ச்சியாளர்கள் கைது

மணிப்பூரில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.அய்.ஏ.) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதில் கடந்த ஆண்டு ஜனவரியில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த என்.அய்.ஏ. அதிகாரிகள், குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த பயங்கர தாக்குதலில் 2 காவல்துறை கமாண்டோக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமும் அடைந்திருந்தனர்.

தெங்நவுபல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 கிளர்ச்சியாளர்களை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான தங்மினிலெனை அசாமின் சில்சாரில் வைத்து கடந்த 19ஆம் தேதி கைது செய்ததாகவும், பின்னர் கவுகாத்தியில் உள்ள என்.அய்.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் என்.அய்.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *