சென்னை, ஜூ4- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டது. மெட்ரோ ரயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது.
இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் (விமான நிலையம் அமையவுள்ளது) வரையில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பூந்தமல்லி-பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே முடிவு செய்யப்பட்டு அதற்கான கள ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பூவிருந்த வல்லி – பரந்தூர் வரையிலான 52.94 கி.மீ தூர மெட்ரோ ரயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூவிருந்தவல்லி – சுங்குவார்சத்திரம் வரை 27 கி.மீ. தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.