ஆசிரியர் விடையளிக்கிறார்

viduthalai
4 Min Read

கேள்வி 1: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியில் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் பணி வழங்கியது குறித்து தாங்கள் கூற விரும்புவது என்ன?

– இரா.முல்லைக்கோ, பெங்களூரு

பதில் 1: சிறப்பான செயலாக்கம். தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சருக்கும் நமது பாராட்டுகள். ஒரு முக்கிய வேண்டுகோள். இன்னும் சென்னையின் முக்கிய தெருக்களில் சிக்னல் நிறுத்தங்களின்போது, அங்கே வந்து “பிச்சை” கேட்டு வாக்குவாதம் செய்யும் சில திருநங்கைகளின் செயல்பாடுகளை முடக்க நடவடிக்கைகள் தேவை.

ஆசிரியர் விடையளிக்கிறார்

******

கேள்வி 2: ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுவதாக ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பதை ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு சமூகநீதியை நிலைநாட்டுமா?

– சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில் 2: ‘பச்சையான’ மனுவாதி ஆட்சியில் ஒன்றியத்தில் இடஒதுக்கீட்டை ஒடுக்கப்பட்டவர்களுக்குப் புறக்கணிக்கும் அரசு (மோடி-RSS) – எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்து தக்க பரிகாரம் காண முன்வர வேண்டும்.

ஆசிரியர் விடையளிக்கிறார்

*******

கேள்வி 3: நிதி வேண்டுமானால் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று தேசியக் கல்விக்கொள்கை விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்திருப்பது தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சிக்கும் செயல் அல்லவா?

– ச. சாந்தி, நாமக்கல்.

பதில் 3: தமிழ்நாட்டுக்கு அவர் வரும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் போன்ற பலவித எதிர்ப்பு நடவடிக்கைகள் தேவை – சட்டப் போராட்டமும் இன்றியமையாதவை.

*******

கேள்வி 4: பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலப் பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்திருப்பது, ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகாதா?

– எஸ்.ஆர்.வெங்கடேஷ், மேற்கு தாம்பரம்.

பதில் 4: நிச்சயமாக! மனிதநேயப் பார்வை மிக முக்கியம்.

******

கேள்வி 5: தமிழ்நாடு தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னிலையில் இருப்பதாக ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்திருப்பது, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பலாமா?

– ஜெ.பாபுஜெனார்த்தனன், பொத்தேரி.

பதில் 5: அதுதான் யதார்த்தத்தின் வெளிப்பாடு. கொள்கையற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணிகளைத் தோற்கடித்து, கொள்கைக் கூட்டணியாக திமுக நிச்சயம் பெரு வெற்றி பெறுவது உறுதி! அன்றாடம் மக்களைச் சந்திக்கும் நமது கணிப்பு – ‘ஆருடம்’ அல்ல!

ஆசிரியர் விடையளிக்கிறார்

******

கேள்வி 6: பன்னாட்டு யோகா விழாவுக்கு வைக்கப்பட்ட புதுவை அரசு விளம்பரப் பதாகைகளில் தமிழைப் புறக்கணித்து இடம்பெற்றிருந்த ஹிந்தி எழுத்துகளை தமிழ் ஆர்வலர்கள் கருப்பு மை பூசி அழித்திருப்பது, யோகா என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் அடாவடித்தனத்திற்கு எதிர்வினையாகப் பார்க்கலாமா?

– ரேவதி சுதாகர், புதுவை.

பதில் 6: பாராட்டு! தன் எழுச்சியின் உணர்ச்சிக் குவியலின் வெடிப்பாடு இது என்றே கொள்ளப்படல் வேண்டும்.

******

கேள்வி 7: அண்மையில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய முதல்நிலைத் தேர்வில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவியவர் யார்? என்ற வினா கேட்கப்பட்டு, அதற்கு கொடுக்கப்பட்ட நான்கு பதில்களில் ஒன்று ‘பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என்று ஜாதியை சேர்த்து  குறிப்பிடப்பட்டிருந்ததற்கு தேர்வாணையம் வருத்தம் தெரிவித்ததா?

– ஜே. விஜயகுமார், கிழக்கு தாம்பரம்.

பதில் 7: பண்புள்ளவர்கள் பழக்கம் அதுதான்! பொறுத்திருந்து பார்ப்போம்!

******

கேள்வி 8: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கை துரிதமாக நடத்தி, அய்ந்தே மாதங்களில் நீதியைப் பெற்றுத்தந்துள்ள ‘திராவிட மாடல்’ அரசை தமிழ்நாட்டு மக்கள் பாராட்டி மகிழ்வதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

– இரா. சித்ரா, கூடுவாஞ்சேரி.

பதில் 8: சில எதிர்க்கட்சிகளுக்கு இது அவர்களது அவதூறு பரப்பு “சார்”ரை  விழுங்கி விட்டதே என்ற விசாரம் இன்னும் போகவில்லை!

****

கேள்வி 9: இன்னும் பத்து மாதத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமான காவிக்கொடி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பறக்கும் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதை 2025ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளலாமா?

– இ.சுமதி, கோவை.

பதில் 9: அபத்தமான ‘அரசியல் ஞானசூன்ய’ உளறல் இது! எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்குப் போனாலும் தேசியக் கொடி மட்டும்தான் கோட்டையில் பறக்குமே தவிர, இப்படி உளறல் நாயகர்களின் உலகமறியும் அறியாமைக்கு பரிதாபம் தவிர வேறு விடையேது! இரண்டு முறை (தாராபுரம் சட்டமன்றம், நீலகிரி நாடாளுமன்றத் தேர்தல்) தோற்றும் கூட தெளிவு பிறக்கவில்லையே!

*****

கேள்வி 10: தமிழர் நாகரீகத்தைப் பறைசாற்றும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையைத் திருத்த பா.ஜனதா முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே! அத்தகைய முயற்சியைத் தடுப்பது எப்படி?

– ச.பிரபாகரன், மணிமங்கலம்.

பதில் 10: மக்கள் கிளர்ச்சிகள் – அறவழி ஆர்ப்பாட்டங்கள் நாடு தழுவிய அளவில் உருவாக்குதல் அவசரம் – அவசியம்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *