ரயிலை கவிழ்க்க முயன்ற சாமியார் கைது

1 Min Read

சென்னை, மே 28 ‘பயணச் சீட்டு பரிசோதகர்கள் மீதான ஆத்திரத்தில், ரயில்களை கவிழ்க்க முயன்றேன்’ என, கைதான சாமியார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, மேல்பாக்கம் வளைவு பகுதியில், தண்டவாளத்தில் அய்ந்து இடங்களில், கற்கள், இரும்பு போல்ட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்கள் குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பதிவான, ‘சிசிடிவி கேமரா’ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், சாமியார் ஒருவர் சதிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், தெலங்கானா மாநிலம் கட்சேகுடா பகுதியில், தண்டவாள இணைப்புகளில் கற்களை வைத்து சதி செய்தது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஓம் என்ற பிஜயகுமார்,   என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்திருப்பது தெரியவந்தது. அவர், அரக்கோணம், ஆவடி, அம்பத்துாரில், ரயில் தண்டவாளங்களில் கற்களை வைத்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை, தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அவர்களிடம் பிஜயகுமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது: சாமியார் வேடம் போட்டு, 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். நாடு முழுதும் ரயிலில் பயணம் செய்வேன். பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்யும் பழக்கம் இல்லை. இதனால், பயணச்சீட்டு பரிசோதர்கள் என்னை, ஆங்காங்கே ரயில் நிலையங்களில் இறக்கி விட்டு விடுவர்.அவர்கள் மீது எனக்கு தீராத கோபம் இருந்தது. அவர்கள் மீதான ஆத்திரத்தில், ரயில் தண்டவாளங்களில் கற்கள், இரும்பு பொருட்களை வைத்து, ரயிலை கவிழ்க்க முயன்றேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *