தமிழர் தலைவர்
பங்கேற்றுச் சிறப்புரை
சென்னை, மே 27 சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி. சபாபதி நூற்றாண்டு விழா நேற்று மாலை (26.5.2025) சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
புதுமை இலக்கியத் தென்றல் 1042ஆவது நிகழ்வாக நடைெபற்ற இவ்விழாவில் அவ்வமைப்பின் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் வரவேற்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இவ்விழாவிற் குத் தலைமை வகித்து உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.
கழகத் துணைத் தலைவர் உரை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையில், புதுமை இலக்கியத் தென்றல் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் வரலாற்று முத்திரை பதிப்பவையாகும். அந்த வகையில் இந்த நூற்றாண்டு விழாவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
தொடக்கத்தில் பி. சபாபதி அஞ்சல் துறையில் போஸ்ட்மேனாகப் பணி செய்தவர். ஒரு நாள் பணி முடித்துத் திரும்புகையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டதால் சிந்தனை வளம் பெற்று இன்றைக்கு அவரது நூற்றாண்டு விழா நடத்துமளவுக்கு உறுதியான கொள்கையாளராக வாழ்ந்தவர். தந்தை பெரியாரது உரையை கேட்டால், படித்து வந்தால் அவர்கள் தெளிவுற்றவர்களாக மாறுவார்கள் என்பதற்கு சபாபதி நல்ல உதாரணம் ஆவார்.
கல்வியில் சிறந்தவர்கள்
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள். 5 பெண் மக்கள், 2 ஆண்கள் என அத்தனைப் பேரையும் உயர் கல்வி படிக்க வைத்து சிறந்தவர்களாக்கியப் பெருமைக்குரியவர். அவரது பேரப் பிள்ளைகள் உள்பட கல்வியில் சிறந்தவர்களாக உள்ளனர். கல்வியறிவு ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதை உணர்ந்தவர் சபாபதி. கல்விக் கண்ணைத் திறந்தவர் காமராசர் என்பதால்தான் அவரைத் தந்தை பெரியார் உயர்த்திப் பிடித்தார்.
பி.சபாபதி மறைவுக்குப் பின்பும்கூட அவரது வாழ்விணையர் இந்திராணி பெரியார் திடலுக்குத் தொடர்ந்து வந்தவர். தந்தை பெரியார் வழியில் நடந்ததால் வெற்றி பெற்ற குடும்பம் இந்தக் குடும்பம். அத்தகைய சிறப்புக்கு இந்திராணி அவர்களது சலியா உழைப்பும் முக்கிய காரணமாகும். தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடிப்படையில் வாழ்ந்து வழிகாட்டியாய், ஒளியாய்த் திகழுகின்ற கொள்கையாளருக்கு வீர வணக்கம் செலுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் சிறப்புரை
கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
சுயமரியதைச் சுடரொளி, எடுத்துக்காட்டான கொள்கை யாளர் சபாபதி அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் பிறந்தவர். காஞ்சிபுரம் என்றாலே நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. சங்கராச்சாரியார் களது புகலிடமாக உள்ள அதே காஞ்சிபுரத்தில்தான் அறிஞர் அண்ணா அவர்களும் பிறந்தார்கள்.
குறிக்கோளோடு வாழ்ந்தவர்
தந்தை பெரியாரது கொள்கைகளை ஏற்று வாழ்ந்த சபாபதி அவர்கள் குறிக்கோளோடு வாழ்ந்து – பிள்ளைகள் அனைவரையும் நல்ல முறையில் படிக்க வைத்து எடுத்துக்காட்டான முறையில் வாழ்ந்தவர். பக்தர்களை எடுத்துக் கொண்டால் நீண்ட பல ஆண்டுகள் – 100ஆண்டுகள் வாழ்ந்தாலும்கூட ‘அவன் விட்ட வழி’ என்று கடவுளின்மீது பழி போட்டு தங்களது பொறுப்பினை உணராதவர்களாக இருப்பார்கள்.
சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து – பெரியார் கொள்கையை ஏற்று கெட்டுப் போனேன் என்று எவராலும் சொல்ல முடியுமா? தந்தைபெரியாரது தொண்டால் நேரடியாக – மறைமுகமாகப் பயன் பெறாத குடும்பம் என்று இந்தத் தமிழ்நாட்டில் எந்தவொரு குடும்பமாவது இருக்க முடியுமா?
திராவிட மாடல் ஆட்சியில்….
இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பார்ப்பனர்கள்கூட பாதுகாப்போடு பத்திரமாக உள்ளார்கள். மகளிர் – பார்ப்பன பெண்கள் உள்பட அனைவருக்கும் இந்த ஆட்சி பாதுகாப்பாக உள்ளது. 50– 60 ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியே இருந்த அக்கிரகாரங்களில் வெள்ளைச் சேலை அணிந்து – மொட்டைத் தலையோடு பார்ப்பனப் பெண்கள் ஏராளமாக இருந்ததுண்டு. இந்த சுயமரியாதை இயக்கத்தின் வீரியமான பணிகளால் அந்த நிலை மாறியது. இன்றைக்கு ‘மொட்டைப் பாப்பாத்திகள்‘ எனப்பட்டவர்களைக் காண முடிகிறதா?
‘சாபம்’ குறித்துக் கலைஞர்
தருமபுரியில் தந்தை பெரியார் சிலை சிறப்பு விழா நடைபெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள் திறப்பதாக இருந்த சிலையை அவர் மறைவுற்றதால்– தான் திறக்க நேரிட்டதை நினைத்து மன நெகிழ்ச்சியோடு முதலமைச்சர் கலைஞர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றுகையில்,
‘நான் மாணவப் பருவத்தில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து பணியாற்றிய அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப் பார்த்து ‘நீ உருப்படுவியா’ என்று ‘சாபம்’ விட்டார்கள். ஆனால் இன்றைக்கு நான் உருப்பட்டிருக்கின்றேனா இல்லையா – என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
கொள்கைக் குடும்பமாக…
அதே போன்று கொள்கைக் குடும்பமாக, நல்லதொரு பல்கலைக் கழகமாக மேம்பட்டுத் திகழ்வது சபாபதி அவர்களது குடும்பமாகும். தந்தை பெரியார் உரையைக் கேட்டது ஒன்றே அவரை சிந்தனையாளராக, சாதனையாளராக மாற்றியது. எழுதப் – படிக்கத் தெரியாத தம் வாழ்விணையர் இந்திராணி அவர்களுக்கு எழுதவும் – படிக்கவும் கற்றுக் கொடுத்தவர் சபாபதி அவர்கள்.
இன்னுஞ் சொல்வதென்றால், சபாபதியைவிட அதிகமாகப் பாராட்டப்பட வேண்டியவர் இந்திராணி அம்மையார் ஆவார். சபாபதி மறைவுக்குப் பின்பும் கூட, கழக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு, கழக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்.
ச. முகிலரசை இழந்த இந்தக் குடும்பத்தினர், தொடர் இழப்புக்கு ஆளான போதும்கூட அவற்றைத் தாங்கிக் கொண்டு அனைவருமே கொள்கைக் குடும்பத்தினராக வாழ்ந்து வருவது சிறப்புக்கும், பாராட்டுக்குமுரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. பி. சபாபதியின் மகள் பொறியாளர் ச. இன்பக்கனிக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் ெதரிவித்தார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, மோகனா வீரமணி, பொதுக் குழு உறுப்பினர்கள் சி. வெற்றிச்செல்வி, தங்க. தனலட்சுமி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வட சென்னை மாவட்ட செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மாநில கழக இளைஞரணி துணைச்செயலாளர் சோ. சுரேஷ், புதுமை இலக்கியத் தென்றல் நெறியாளர் புலவர் வெற்றியழகன், செயலாளர் வை. கலையரசன், பொருளாளர் மு. இரா. மாணிக்கம் மற்றும் பி. சபாபதி – இந்திராணி குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் அரங்கம் நிறைய பங்கேற்றனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
நிறைவாக பொறியாளர் ச. இன்பக்கனி நன்றி கூறினார்.