பெங்களூரு, மே 25- மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என ஒன்றிய அரசிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் (23.5.2025) ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
சா.சி.சிவசங்கர் பங்கேற்றார்.
அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
மின்சார விநியோகம்
மின்சாரத்துறை, தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானது என்பதால், தமிழ்நாடு அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) மானியமாக சுமார் ரூ.53,000 கோடியும், இழப்பீட்டு நிதியாக ரூ.52,000 கோடியும் ஒதுக்கி ஆதரவளித்துள்ளது. இது, தமிழ்நாடு அரசு, தனது மக்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
முதல் மாநிலம் தமிழ்நாடு
நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணுடன் (CPI) இணைக்கப்பட்டு, அய்ந்தாண்டு களுக்குத் தானியங்கி ஆண்டுக் கட்டண உயர்வினைக் கொண்ட பல ஆண்டு கட்டண (Multi-Year Tariff) முறையை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப் பட்ட ஒரு முக்கிய சீர்திருத்தமாக, சிறந்த செயல்பாட்டு மற்றும் நிதித் திறன்களை அடையும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மறுசீரமைத்து, உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கென தனித்தனி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்பைக் குறைப்பதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 2017-2018ஆம் ஆண்டில் 19.47 சதவீதமாகயிருந்த இந்த இழப்பு, 2023-2024ஆம் ஆண்டில் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பெரும் சுமை
இந்த AT&C இழப்புக் குறைப் பானது, பெரிய அளவிலான நிதி சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டிச் செலவினங்கள், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) நிதி நிலையில் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. இச்சவாலினை எதிர்கொள்ளும் வகையில், தேவை மதிப்பீடு மற்றும் அடுத்த நாள் மின் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினை இக்கழகம் திறம்படப் பயன்படுத்தி வருகிறது.
மின்கலன் எரிசக்தி சேமிப்பு
மேலும், மாநில அரசு, சுமார் 20,000 மெகாவாட் அளவிலான நீரேற்று நீர்மின் திட்டங்களையும் (Pumped Storage Hydroelectric Projects), மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளையும் (Battery Energy Storage Systems) நிறுவுவதன் மூலம் எரிசக்தி சேமிப்புத் திறனைப் பெருமளவில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இம்முயற்சிகள், மாநில மின் தொகுப்பில் உபரியாகும் சூரிய சக்தியைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும், உச்ச நேர மின் கொள்முதலுக்கான செலவினங்களைக் கணிசமாகக் குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், உடன் பங்கேற்றனர்.