பெங்களூரு, மே 22 கருநாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து ஹிந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.அய். வங்கி மேலாளருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.அய். வங்கி மேலாளரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
ஹிந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.அய். வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாச்சார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை ஒன்றிய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.