உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
பாடம் 9
தன்னம்பிக்கையும் நினைவாற்றலும்
17.3.2025 அன்று காலை சற்று ஓய்வாக எழுந்து கோல்டு கோஸ்டு என்ற இடத்திற்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் மெல்பேர்னில் இருந்து வந்திருந்த தோழர் நந்தகுமாரை ஆசிரியருக்கு அறிமுகப்படுத்தினோம். அதுவரையில் தன்னை அறிமுகப்படுத்தக்கூடாது என்று நந்தகுமார் கேட்டுக் கொண்டார்.அதற்கான காரணத்தை அவரே ஆசிரியரிடம் கூறினார். “அய்யா நான் திராவிடர்கழகத்தில் முக்கியமானவராக இருந்த ஒரு தலைவரின் தங்கையின் பேரன். நான் இரண்டு குறிப்புகள் கொடுப்பேன். அவர் யாரென்று நீங்கள் சொல்லவேண்டும்” என்று புதிரைத் தொடங்கினார். ஆசிரியர் சிரித்தபடி இது என்ன நீங்களும் கோடீஸ்வரராகலாம் என்ற போட்டியா என்று கேட்டார். சிறிது நேரம் சிரிப்பலைகள் பரவின. “ தந்தை பெரியார் காலத்தில் அவர் ஒரு பெரிய மாவட்டத்தின் திராவிடர்கழகத் தலைவராக இருந்தார். நீங்கள் தலைமைப் பொறுப்பேற்றபிறகு அவர் விவசாய அணிச் செயலாளராக இருந்தார், அவர் உங்களைவிட வயதில் மூத்தவர். என்று புதிரைக் கூறினார் நந்தகுமார். நான் அவர் ஊர் திருத்துறைப்பூண்டியா என்று கேட்டேன். உடனே ஆசிரியர் அவர்கள் நீங்கள் மறைந்த சாந்தன் அவர்களைச் சொல்கிறீர்களா ? என்று கேட்டார். ஆம் என்றேன். அவர் அய்யா காலத்தில் மாவட்டத்தலைவராக இல்லை என்றார் ஆசிரியர். சில துணைக்கேள்விகளை எழுப்பி சற்று நேரம் சிந்தித்த பிறகு தோலி சுப்ரமணியமா ? என்று ஆசிரியர் கேட்டார். ஆம் அய்யா அவர்தான், என்று நந்தகுமார் மகிழ்ச்சியுடன் கூறினார்.
கூடியிருந்த எங்கள் அனைவருக்கும் வியப்பு, மகிழ்ச்சி. ஆனால் ஆசிரியர் அவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை. தனக்குள் சில நொடிகள் ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு சட்டென்று தெளிவானதைப் போன்ற உணர்வுடன் ஆசிரியர் கூறினார். தோலி ஆர் சுப்பிரமணியம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தலைவராக இருந்தார். கொள்கையில் மிக உறுதியாக இருப்பார். சிலகாலம் வேறு ஒரு பாதையில் பயணித்தார். மீண்டும் அய்யா அவர்கள் அவரை மண்டலத் தலைவராக்கினார். இறுதிக் காலத்தில் சில காலம்தான் விவசாய அணித் தலைவராக இருந்தார் . அதனால்தான் கொஞ்சம் யோசித்தேன்’’ என்று தனது நினைவுக் குறிப்பில் ஏற்பட்ட சில நிமிடத் தாமதத்திற்கான காரணத்தை விளக்கினார்.
ஆசிரியர் தன் இயக்க வாழ்வில் எத்தனை ஆயிரம் கழகத்தினரை சந்தித்திருப்பார்! கழகத் தலைவராக பொறுப்பை அவர் ஏற்று 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனை பொறுப்பாளர்களுடன் பயணித்திருப்பார். அவர்களில் ஒருவரது பெயரை அதுவும் மறைமுகக் குறிப்புகளில் இருந்து கண்டுபிடித்து சொல்வதற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது என்பது அவரது நினைவாற்றலுக்கு ஏற்பட்ட சவாலாக ஆசிரியர் நினைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். தான் சொல்லும் செய்திகளில் பிழை நேர்ந்து விடக்கூடாது என்பதில் எப்போதும் ஆசிரியர் தீவிரமாக இருப்பார். ஒரு செய்தியை அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல் மேடையில் பேசிவிட மாட்டார். யாரேனும் அளித்த தகவலால் பிழையாக எதையேனும் சொல்ல நேர்ந்து விட்டால் அதற்காக தன்மீதே மிகவும் கோபம் கொள்வார். இவையாவும் ஒரு நாளில் உருவாவதில்லை. தனிப்பட்ட இயல்பும் , சிறு வயது முதல் தந்தை பெரியாரின் மாணவராக, தொண்டராக, நம்பிக்கைக்குரிய தளபதியாக பணியாற்றிப் பக்குவமடைந்த பண்பாகும்.
இப்படியாக மார்ச் மாதம் 17 ஆம் தேதி இந்தப் பாடத்துடன் தொடங்கியது.
அடுத்து தோழர்களுடன் திட்டமிட்டப்படி கோல்டு கோஸ்டு நகரத்திற்கு சென்றோம். அது ஒரு அழகிய கடற்கரை நகரம். அங்கு ஸ்கை பாயிண்ட் Sky point என்று ஒரு உயரமான வட்ட வடிவக் கட்டிடம். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஒரு அழகான இடம். கடலுக்கு அருகில் ,கடல் மட்டத்தில் இருந்து 270 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் 77 ஆவது மாடியில்தான் நாம் அமர்ந்து கடலை ரசிக்க முடியும். 77 ஆவது மாடியை அடைய மின்தூக்கி ( Lift) செலவிடும் நேரம் 42.7 விநாடிகள் மட்டுமே. அங்கு சென்று ஒரு மணிநேரம் அமர்ந்து தோழர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒரு விற்பனைக் கூடத்தில் அழகான சிம்மாசனம் போன்ற நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தன. அதனைப் பார்த்த உடன் ஆசிரியர் அவர்கள் இந்த நாற்காலியைப் பார்த்ததும் என்ன நினைவுக்கு வருகிறது? என்று கேட்டார். “சேலத்தில் தந்தை பெரியாருக்கு வழங்கப்பட்ட வெள்ளி சிம்மாசனம் நினைவிற்கு வருகிறது அய்யா” என்று பதில் கூறினேன் . மகிழ்ச்சியுடன் அதனை ஆமோதித்தார்.
கிளம்புவதற்கு சற்று நேரம் முன்பு ஆசிரியர் முகத்தில் சற்று களைப்பு தென்பட்டது. எனவே பழச்சாறு வாங்கி அருந்தச்செய்தோம். அங்கிருந்து புறப்பட்டு தோழர் கார்த்திகேயன் நாராயணன் அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம்.
பிரிஸ்பேன் ஓட்டலில் இருந்து ஸ்கை பாயிண்ட் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகவே ஆயிற்று. நேரம் பயணம். மீண்டும் அங்கிருந்து கார்த்திகேயன் நாராயணன் இல்லத்திற்குச் செல்ல 40 நிமிடங்கள். நாள்முழுதும் எங்களை காரில் அழைத்துச் சென்றவர் தோழர் பார்த்திபன். காரில் செல்லும்பொழுது ஆசிரியர் அவர்கள் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தபடியே பின்னிருக்கையில் இருந்த என்னிடம் தோழர் நந்தகுமார் குறிப்பிட்ட பெரியார் பெருந்தொண்டர் தோலி சுப்பிரமணியம் அவர்களைப் பற்றிய பல்வேறு செய்திகளை சொல்லிக்கொண்டு வந்தார். அதே காலகட்டத்தில் செயல்பட்ட மற்ற பெரியார் பெருந்தொண்டர்களைப் பற்றியும் அவர்கள் ஆசிரியரை அழைத்துச் சென்று நடத்திய கூட்டங்கள் பற்றியும் புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். அதே நேரத்தில் முன்இருக்கையில் அமர்ந்து திரும்பிப் பார்த்தபடியே பேசிக்கொண்டு வருவது மிகக் கடினம் . அதனால் ஆசிரியருக்கு கழுத்து வலி ஏற்படும் என்று நினைத்து “ அய்யா நீங்கள் நேராக பார்த்தபடியே சொல்லுங்கள் . நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினேன். அதன்பிறகு ஆசிரியர் நேராகப் பார்த்தபடி தன் நினைவலைகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் முகத்தைப் பார்த்துப் பேசுவது பண்பாடு. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிற சில மனிதர்கள் தங்களைவிட பணத்திலோ அதிகாரத்திலோ குறைந்த நிலையில் இருப்பவர்களிடம் அவர்கள் முகத்தை நிமிர்ந்து கூடப்பார்க்காமல் பேசுவதைப் பார்க்கிறோம். அந்த மேட்டிமைத் தனம் துளியும் தன்னிடம் அண்ட விடாத ஆசிரியரின் பண்பை எண்ணி நானும் மற்ற தோழர்களும் மிகவும் நெகிழ்ந்தோம்.
ஸ்கை பாயிண்ட்டில் இருந்து கார்த்திகேயன் வீடு சென்ற போது மணி இரண்டாகி விட்டது. அனைவரும் காரை விட்டு இறங்கும்போது ஆசிரியர் அவர்களின் நடை லேசாக தடுமாறியதுபோல் இருந்தது .அதை தோழர்களிடம் சுட்டிக் காட்டினேன். அவர்கள் ஆசிரியரை மெதுவாக அழைத்துச் சென்று வீட்டினுள் அமர வைத்தார்கள். அவர்கள் அருகில் செல்வதற்குள் ஆசிரியர் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மெதுவாக இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நேராக உயர்த்தி இறக்கினார். சில முறை இப்படிச் செய்தபிறகு மெல்ல நடந்தார். தோழர் கார்த்திகேயன் நாராயணன் இதய மருத்துவத்துறையில் பணிபுரிபவர் என்பது நல் வாய்ப்பாக அமைந்தது. அவர் உடனடியாக இரத்த அழுத்தத்தை சோதித்தார். அது 90/56 என்று காட்டியது. நாங்கள் பதறிவிட்டோம். மருத்துவர் உதவியை நாடலாமா என்று யோசித்தோம். ஆசிரியரோ அப்படி பயப்பட ஒன்றும் இல்லை. ஒரு மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். கையோடு கொண்டு சென்ற அவரது மாத்திரைப்பையில் இருந்து ஒரு மாத்திரை சாப்பிட்டபிறகு கொஞ்சம் பழச்சாறு குடித்து விட்டு சற்று நேரம் படுத்திருந்தார். ஒவ்வொரு முறை காரில் ஏறும்போதும் “என் புத்தகப் பை எங்கே , மருந்துப்பை எங்கே ? என்று கேட்பது ஆசிரியரின் வழக்கம். ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னும் தான் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை அவரே சரிபார்த்து எடுத்துக் கொள்வார். அதன் பயனை அப்போதுதான் உணர்ந்தேன்.
அரை மணி நேரம் கழித்து ஆசிரியர் தெளிவுடன் எழுந்தார். பசிக்கிறது, சாப்பிடலாமா என்றார். எங்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. கார்த்திகேயனும் அவரது இணையர் சூர்யாவும் அருமையான விருந்து தயாரித்திருந்தனர். அதனை இயற்கையோடு இணைந்தவாறு அமைக்கப்பட்டிருந்த உணவு மேசையில் வைத்து மகிழ்வாக அனைவரும் ஆசிரியருடன் சேர்ந்து உண்டோம்.
உணவு உண்ணும்போது ஆசிரியர் அவர்களிடம் உடல்நிலை பற்றி தோழர்கள் விசாரித்தனர். அப்போது ஆசிரியர் கூறினார். படுக்கையில் இருந்து எழுந்த உடனும், மற்ற நேரங்களில் இப்படி வெர்டிகோ மாதிரி தலை சுற்றல் வரும் போதும் நேராக நின்று கைகளை உயர்த்தியும் இறக்கியும் லேசாகப் பயிற்சி செய்தால் தலை சுற்றல் நின்று விடும் என்று மருத்துவர் கூறிய அறிவுரையை விளக்கினார். அதை ஆசிரியர் கூறிய விதம் யாருக்கோ நடந்ததைக் கூறுவது போல இருந்தது. சற்று நேரத்திற்கு முன்னால் நாங்கள் பயந்து கலக்கமுற்ற சூழ்நிலை தலை கீழாக மாறி விட்டது.
உணவுக்குப் பிறகு சற்று ஓய்வு. மாலை அதே பகுதியில் கொள்கைக் குடும்பங்களின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுடன் கூடியிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபின் நானும், ஆசிரியரும் உரையாற்றினோம். சுருக்கமான உரைகளுக்குப் பிறகு கேள்வி நேரம் தொடங்கியது . சில கேள்விகளுக்கு நான் பதில் கூறினேன். பல கேள்விகளுக்கு ஆசிரியரின் விடைகள் பகுத்தறிவு வாழ்வியல் பாடமாக அமைந்தன. நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மீண்டும் அறைக்குத் திரும்பியபோது வழக்கம்போல் மணி பதினொன்று.
(தொடரும்)