சென்னை, மே 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஆர்வம்
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நேற்று (மே 19) மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்
இதில் 46,691 மாணவர்கள், 75,959 மாணவிகள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 698 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே 27-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 165 உதவி மய்யங்கள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு சேவை மய்யங்கள் (Admission Facilitation Centre) நிறுவப்பட்டுள்ளன. அந்தந்த சேவை மய்யங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-24342911 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சுப் பணியாளர்களின்
வேலை நேரம் மாற்றம்
சென்னை, மே 20 பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் மீண்டும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.
வேலை நேரம் மாற்றம்
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பனுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி ஆணையிடப்பட்டது.
பல்வேறு சங்கங்கள் இந்த ஆணையை ரத்து செய்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்ததைபோன்று அமைச்சுப் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை மீண்டும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அத்துடன், அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணிநேரத்தை நிர்வாக நலன் கருதி ஒருங்கிணைக்க வேண்டியுள்ளதாலும் அமைச்சுப் பணியாளர்களின் வேலைநேரத்தை காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றியமைத்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குநரின் கோரிக்கை கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு, பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.