இந்நாள் – அந்நாள்

viduthalai
2 Min Read

கே. டி. கே. தங்கமணி பிறந்த நாள் இன்று (19.5.1914)

தனது இளமைக் காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பொருளாதார ரீதியாகச் செல்வாக்கு பெற்ற குடும்பத்தில் பிறந்தவரான கே. டி. கே. தங்கமணி மாணவப் பருவத்திலேயே  தந்தை பெரியாரின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

இது தந்தை பெரியாரின் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளும், சுயமரியாதை உணர்வும் அவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காட்டுகிறது. இதுவே பிற்காலத்தில் அவரை சாமானியர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பாதைக்கு திரும்ப காரணமாக இருந்தது

பள்ளிப்படிப்பை திருமங்கலத்தில் முடித்த இவர், சட்டப்படிப்பை லண்டனில் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் அரசியல் குறித்து அறிந்து வைத்திருந்தார்.

மதுரையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். குறிப்பாக மதுரை அய்க்கிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு தொழிற்சங்கங்களை அமைத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். இவரது போராட்டங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தன.

1957 ஆம் ஆண்டு மதுரை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 1974 முதல் 1976 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

தொழிற்சங்க மற்றும் அரசியல் பணிகளுக்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட இவர், மா சே துங் மற்றும் ஹோசிமின் போன்ற உலகத் தலைவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

மதுரை – திருமங்கலத்திலும் அவரது பெயரில் தெருக்கள் அமைந்துள்ளன. கோவையில் அவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தபோது, பிரபல பார்லிமென்டரியன் ஹிரேன் முகர்ஜியிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். ஒருமுறை ஹிரேன் முகர்ஜி, கே.டி.கே.தங்கமணியிடம் ஒரு கேள்வி கேட்டார். 500 ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டில் பேசப்படும் தலைவராக  யார் யார் இருப்பார்கள் என்று கேட்டார்.

அதற்கு கே.டி.கே.தங்கமணி பல்வேறு தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டார். ஹிரேன் முகர்ஜி அளித்த பதில் என்ன தெரியுமா? பெரியாரும், ம.சிங்காரவேலரும்தான் அப்படிப் பேசப்படக்கூடிய தலைவர்களாக இருப்பார்கள் என்று ஹிரேன் முகர்ஜி கூறினார் என்று கே.டி.கே.தங்கமணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். (தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர், 1998).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *