மதம் எனும் விபரீதம்

viduthalai
7 Min Read

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.  அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறுவளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால், அவசரப்பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும் “பழக்கம்” “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாக கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்ற வில்லை.

விஷமப் பிரச்சாரம்

தனவைசிய நாடு என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நாட்டில் நாம் பிரசாரத்திற்குச் சென்றிருந்த காலையிலும் கூட நெற்குப்பை என்ற ஒரு ஊரிலுள்ள வைதிகச் செட்டியார்மார்களை இப்படித்தான் ஒரு பார்ப்பனன் சொல்லி ஏமாற்றி விட்டான்.  அதாவது ராமசாமி நாயக்கர் என்கிற ஒருவன் வந்து நாட்டையே பாழாக்குகிறான், கலி அவனால் தான் வெளியாகிறது, நாஸ்திகம் பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டால் சிறுபிள்ளைகள் எல்லாம் கெட்டுப் போவார்கள், பிறகு கோவில் போய்விடும், மடம் போய்விடும், விபூதி போய்விடும் என்பதான பலவிஷயங்களைச் சொல்லி ஏய்த்துவிட்டான்.  இந்தவார்த்தைகளை நம்பி அங்குள்ள சில கனவான்கள் கூட்டம் கூட்ட இடம் கொடுக்காமலும் கூட்டம் சேர்ப்பதற்காக செய்து வைத்து இருந்த சில ஆடம்பரங்களையெல்லாம் விரட்டி அடித்தும் கூட்டத்திற்கு யாரையும் வரவொட்டாமலும் செய்துவிட்டார்.  பிறகு நாமும் நம்முடன் கூட வந்திருந்த சில நண்பர்களும் கடைத்தெருவில் யாரையும் எதிர்ப்பாராமல் ஒரு காப்பிக்கடையில் போட்டிருந்த பெஞ்சு பலகையை எடுத்துவந்து வீதியில் போட்டு அதன்பேரில் நின்று பேச ஆரம்பித்தோம்.  முதலில் தெருவில் போகிறவர் வருகிறவர்கள் சற்று நின்று என்ன என்பதாக கேட்க ஆரம்பித்தார்கள்.

கூட்டம் கூடியது

பிறகு அப்படியே உட்கார்ந்தார்கள். இரண்டொரு விஷயங்களைக் கேட்டு அவர்கள் கைதட்டி சிரிக்கவும் அடிக்கடி இம்மாதிரி செய்யவும், மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கனவான்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள்.  பிறகு பெண்களும் தாராளமாய் வந்தார்கள்.  கூட்டம் யாரையும் அறியாமல் தானாகவே பெரிய கூட்டமாய் விட்டது.  பிறகு எங்களுக்குத் தெரியாமலே ஒருவர் விளக்குத் தருவித்து விட்டார்.  இரவு 9½ மணி வரையில் கூட்டம் நடந்தது.  கூட்டம் முடிந்து நாங்கள் திரும்பி ஊருக்குப் புறப்படுகையில் ஒரு செட்டியார், பெரியவர், நல்ல வைதிகக் தோற்றத்துடன் இருந்தவர், எங்கள் மோட்டார் வண்டிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, அய்யா பெரியவரே சில பார்ப்பனர்கள் எங்களிடம் தங்களைப் பற்றி தப்பும் தவறும் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்.  நாங்கள் தங்களைத் தப்பாய் நினைத்து விட்டோம், அதற்காக வருந்துகிறோம்.  இன்று இரவு இங்கேயே இருந்து நாளைக்கும் ஒரு உபன்யாசம் செய்துவிட்டுப் போக வேண்டும்.  நானே எல்லா ஏற்படும் செய்கிறேன்.  இன்னும் பல பேர்கள் வந்து கேட்க வேண்டும் என்று எவ் வளவோ தூரம் வேண்டிக்கொண்டார்.  எங்களுக்கு மறுநாள் வேறிடம் ஏற்பாடாயிருந்ததால் அவர் விருப்பத்திற்கு இணங்கமுடியாமல் போய் விட்டோம்.  புதுகையிலும் இம்மாதிரியாகவே செய்தார்கள்.  பிறகு அவர்களும் இப்படியே கூட்டமுடிவில் வந்தனோபசாரம் செய்யும்போது எடுத்துச் சொன்னார்.  கடை யூரிலும் இதுபோலவே நடந்தது.  கடைசியாக வாலிபர்களிட மாத்திரமல்லாமல் பெரியோர்களிடமும் மிகவும் திருப்தியுடனே வந்து சேர்ந்தோம்.

உண்மையை அறியுங்கள்

எனவே விஷயங்களைப் பகுத்தறிய சோம்பல் பட்டுக் கொண்டு தகுந்த அளவு மூளையைச் செலவு செய்வதில் சிக்கனம் காட்டியும் அவசரப்பட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்களே அல்லாமல் உண்மையை அறியமாட்டேன் என்கிறார்கள்.  இதற்காக நாம் இவர்கள் விஷயத்தில் பரிதாபப்படுவதல்லாமல் வேறு ஒன்றும் செய்யமுடியாதற்கு வருந்துகிறோம், இம்மாதிரி கூட்டத்திற்குள் இது சமயமும், வைதிகக்கூட்டத்தில் மிகுதியும் எங்கு பார்த்தாலும் “கலி வந்து விட்டான்” “மதம் போச்சுது” “கடவுள் போச்சுது” “புராணங்கள் போச்சுது” “நாஸ் திக மாச்சுது” என்கிற வார்த்தைகளே அடிபடுகிறதாக சேதிகள் வந்து கொண்டி ருக்கிறது.  இதுமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் கட்சியில் பாரம்பரியமாக இருந்து வருவதாக பெருமை பாராட்டிக் கொள்பவர்களும் இப்படியேதான் பேசுவதாக தெரிகிறது.  அதாவது “பார்ப்பனர்கள் அக்கிரமத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லட்டும், சர்க்கார் விஷயத்திலும், காங்கிரஸ் விஷயத்திலும் உள்ள புரட்டுகளையும் சொல்லட்டும். நமக்கு அதைப்பற்றி நல்லதுதான்.  ஆனால் மதத்தில் கைவைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்கிறதாகவே பேசுகிறார்கள்.  மற்றொரு கூட்டத்தினிடையிலோ பார்ப்பன மதம், புராணம் இந்த மாதிரி புரட்டுகளைக் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் காங்கிரசைக் கண்டித்து தேசியத்தைக் கெடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.

சுயநலம்

இதற்கெல்லாம் நாம் என்ன செய்யக்கூடும்?  அவரவர்கள் சபலமும் மூடபக்தியும் சுயநலமும் நம்மீது குற்றம் கூறச் செய்கிறதேயல்லாமல் வேறல்ல.  எப்படிச் சில பேர்வழிகள் தங்கள் சுயநலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் தேசத்தின் பேரால் “காங்கிரசையும்” “தேசியத்தையும்” உண்டாக்கி உபயோகித்துக் கொண்டார்களோ அது போலவே தான் சிலர் சுயநலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் கடவுள் பேரால் மதத்தையும் புராணங்களையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள்.  மனிதனுக்குக் கடவுளும், மதமும், புராணமும்  எதற்காக இருக்க வேண்டியது என்பதே நமது மக்களுக்கு ஏறக்குறைய முழுவதுமே தெரியாது என்றே சொல்லவேண்டியதாயிருக்கிறது.

மனிதன் ஜீவன்களிடத்தில் கூடுமானவரை அன்பாகவும் மனிதசமுகம் வாழ்க்கையில் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளுவதற்காகவே கடவுளை மனிதன் உணரவேண்டியவனாக இருக்கிறான்.  அதுபோலவே அவ்வன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற முறைகளைக் கற்பிக்கவே மதம் என்பதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய வனாக இருக்கிறான்.  அப்படி இருக்க கடவுளுக் காகவும், மதத்திற்காகவும் மனிதன் இருக்கிறான் என்பதாக மக்களுக்கு உணர்த்தப்பட்டு மக்கள் எல்லோரும் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற முயன்றுவிடுகிறார்கள்.  இதனால் கடவுளைக் காப்பாற்றுவதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? கடவுள் நம்மால் காப்பாற்றக் கூடியவராயிருந்தால் அவருக்குக் கடவுள் தன்மையேது என்பதாக யாராவது உணருகிறார்களா?  நாம் கடவுளைக் காப்பாற்றுவது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது! எவனோ தான் பிழைப்பதற்காகக் கடவுளைக் காப்பாற்றுங்கள்.  கடவுளைக் காப்பாற்றுவது என்பது எனக்குக் கொடுத்து என்னை யும் என் பிள்ளை குட்டிகளையும் காப்பாற்றுவதுதான் என்று சொல்லுவானானால் அதை நாம் நம்பிக் கொள்ளுவதா என்றுதான் கேட்கின்றோம்.  நம்மைக் கடவுள் காப்பாற்றுவதா நாம் கடவுளைக் காப்பாற்றுவதா என்பதே நமக்குப் புரியவில்லை.

என்ன பிரயோசனம்?

வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்குப் பயப்பட வேண்டுமே அல்லாமல், கடவுளைக் காப்பாற்றுவது அதற்குச் சோறு போடுவது, கல்யாணம் செய்வது, பிள்ளை குட்டி களைப் பெறச் செய்வது என்பது போன்றவைக ளெல்லாம் செய்வது எதற்கு?  என்றுதான் கேட்கி றோம்.  இம்மாதிரி செய்பவர்கள் கடவுளுக்கு பயப்படுகிறார்களா என்பதையும் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.  திருடுகிறவன், கொள்ளை அடிக்கிறவன், கொலை செய்கிறவன் மற்றும் வாழ்க்கையில் எத்தனையோ அக்கிரமங்கள், கூடா ஒழுக்கங்கள் செய்கிறவன் ஆகிய எல்லோரும் கடவுளைக் காப்பாற்றுவதாக, அபிஷேகம் செய்வதாக, திருடி பதில் அக்கிரமம் செய்து தப்புவழிகளில் சம்பாதித்த திரவியத்தில் பங்குதருவதாக, கோவில்கட்டுவதாக, மேளம் சதிர்க்கச்சேரி வைப்பதாக, தாசிகள் 10 பேரை நியமிப்பதாக சொல்லி அப்படியே செய்கிறான் என்றே வைத்துக் கொள்ளுவோம்.  இதனால் செய்தவனுக்காவது உலகத்துக் காவது என்ன பிரயோஜனம் என்றுதான் கேட்கிறோம்.

போலி பக்தி

கடவுள் என்பதையே மக்களுக்குச் சரியானபடி உணர்த்தாமல் சில சுயநலக் காரர்கள் போலிபக்தியை உண்டாக்கி எல்லோரையும் நாஸ்திகர்களாக்கி விட்டார்கள்.  கடவுள் தன்மையின் உண்மையையும் கடவுளிடத்தில் பயத்தையும் மக்களுக்கு உண்டாக்கி இருந்தால் நமது நாட்டில் இவ்வளவு அக்கிரமம் நடைபெறுமா?  என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.  இம்மாதிரியான பொய் பக்தி, புரட்டு பக்தி, வேஷபக்தி, மூட பக்தி ஆகிய நாஸ்திகத் தன்மைகள் நமது நாட்டைவிட்டு ஒழிந்தாலொழிய நாட்டில் அன்பும் சமத்துவமும் ஒழுக்கமும் ஏற்படப் போவதில்லை என்பதே நமது அபிப் பிராயம்.

கற்பிக்கப்பட்ட கடவுள்கள்

இதுபோலவே மதம் என்கிற விசயங்களும் நமக்குப் பெரிய ஆபத்தாகவே இருக்கிறது.  மதம் என்பதை ஒழுக்கத்திற்கான கொள்கைகள் என்பதாக எண்ணாமல் சில சடங்குகள் என்ப தாகவே கற்பிக்கப்பட்டிருக்கிறது.  மதத்தில் தீவிரப்பற்றுள்ள எவனாவது, பொய் சொல்லாமலிருக் கிறானா, அக்கிரமம் செய்யாமலிருக்கிறானா, என்பதைக் கவனித்தால் பெரிய பெரிய வைதிக வேஷக்காரர்களின் யோக்கியதை எல்லாம் விளங்கிவிடும்.  நமக்கு நேரில் அநேக சாஸ்திரியார்களின் யோக்கியதையும், பாகவதர் களின் யோக்கியதையும், சன்னியாசிகளின் யோக் கியத்தையும், தினமும் மூன்று வேளைக் குளித்து, ஆறு வேளை கோவிலுக்குப் போய் வாரத்தில் 7 நாள் விரதமிருக்கும் பெரியோர்கள், ஆசாரக்காரர்கள், பக்திவான்கள் என்கிறவர்கள் யோக்கியதையும் நன்றாகக் தெரியும்.  கடவுள் பக்தியும், மதமும் ஏன் இவர்களை இப்படி நடத்துகிறது என்று ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

பொதுவாக இவைகள் ஒருபுறமிருந்தாலும் நமக்குக் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் யாராய் இருக்கிறார்கள்.  பிறப்பு இறப்பு முதலிய வைகளில் ஈடுபடுத்தி மனித வாழ்க்கையில் உள்ள எல்லா காரியங்களும் ஒன்று கூட விலக்கில்லாமல் அதற்குக் கற்பித்து நம்ம தலையில் போடப்பட்டிருக்கிறதேயல்லாமல் உண்மைத் தத்துவத்துடன் கூடிய கடவுள் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறதா என்பதை யோசிக்கவேண்டும்.  வயோதிகர்கள் இதற்கு இடங் கொடுக்க மாட்டார்களானாலும் வாலிபர்கள் இதை உணர்ந்து பரிசுத்த வாழ்க்கையில் ஈடுபடவேண்டும்.

மனிதன் ஜீவன்களிடத்தில் கூடுமான வரை அன்பாகவும் மனிதசமுகம் வாழ்க்கையில் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளுவதற்காகவே கடவுளை மனிதன் உணர வேண்டியவனாக இருக்கிறான். அது போலவே அவ்வன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற முறைகளைக் கற்பிக்கவே மதம் என்பதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். அப்படி இருக்க கடவுளுக்காகவும், மதத்திற்காகவும் மனிதன் இருக்கிறான் என்பதாக மக்களுக்கு உணர்த்தப் பட்டு மக்கள் எல்லோரும் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற முயன்று விடுகிறார்கள். இதனால் கடவுளைக் காப்பாற்றுவதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? 

அதுபோலவே நமது மதம் என்பது என்னமா யிருக்கிறது?  இதைப்பற்றி பல தடவை எழுதி இருக்கிறோம்.  மறுசமயமும் எழுதுவோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 18.09.1927

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *