பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு
சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’ ஏற்பட்டிருப்ப தாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங்களைக் கற்பித்து பிராமணர்களும் பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் – பேசும் சிப்பந்தி கோடிகளும், அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய தொண்டை கிழிய எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹா ராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகாநாடுகள் என்றும் “வகுப்புத் துவேஷங்கள்” வளர்ந்து வருகிறது.பஞ்சாபிலும் கல்கத்தாவிலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லா விட்டால் அங்கும் பிராமணர்-பிராமணரல்லாதார் ‘வகுப்புத் துவேஷங்கள்’ வளரும்.
ஆதலால் இராமசாமி நாயக்கர் சென்னையில் மாத்திரம் இல்லை; இந்தியாவெங்கும் இராமசாமி நாயக்கர்மயமாய்த்தான் இருக்கிறது. சென்னையில் 4 பேர் கூலிக்கு மாரடிப்பதால் இராமசாமியை ஒழித்துவிட முடியாது. சின்னாட்களுக்கு முன் இவர்கள் சென்னையில் சில காலிகளை ஏவிவிட்டு ஸ்ரீமான் சர். தியாகராயச் செட்டியாரை அடிக்க முயற்சித்து அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் முதலியவற்றையும் உடைத்தார்கள். அதிலும் இந்த இயக்கம் அழிந்து விடவில்லை.
அதற்குப் பிறகு ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும் அடிக்கும்படி செய்தார்கள். அதனாலும் இவர்களுக்குப் பயந்துகொண்டு இயக்கம் போய்விடவில்லை. சமீபத்தில் பேரார் மாகாணத்தைச் சேர்ந்த அமராவதியில் 2-வது அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸின் காரியதரிசியாயும், பிராமணரல்லாதாரின் பேருழைப்பாளராகவுமிருக்கும் ஸ்ரீமான் அமிர்த்காரை சில காலிகளைக் கொண்டு பலமாய் அடித்து விட்டார்கள். இதனாலும் பிராமணரல்லாதார் இயக்கம் ஒழிந்து விடவில்லை. இவர்கள் கெட்ட எண்ணங்கொண்டு தூற்றத் தூற்ற, அடிக்க அடிக்க பந்து கிளம்புவதைப்போல் இயக்கம் இந்தியாவெங்கும் கிளம்பி பரவிக்கொண்டு தான் வருகிறது.
– குடிஅரசு – அறிக்கை – 09.05.1926