ஊட்டி, மே 17– 2026இல் மட்டுமின்றி, 2031ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப் பயணமாக ஊட்டிக்கு வந்தார்.
மலர் கண்காட்சியால் மகிழ்ச்சி
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட யானைப் பாகன்களுக்கான குடியிருப்புகள், முதுமலை புலிகள் காப்பகத்தில் 15 கி.மீ. தொலைவுக்கு ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பி சேவை, வனச் சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2.93 கோடியில் 32 வாகனங்களின் சேவை உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127ஆவது மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, மலர் அலங்காரங்களைப் பார்வையிட்டார்.
இந்நிலையில், நேற்று (16.5.2025) காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊட்டியில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சி மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருந்தது.
முடிவெடுக்கப்படும்
மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியாது என்பது உள்ளிட்ட 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார். இது தொடர்பாக மற்ற மாநில முதலமைச்சர்களுடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஒன்றிய அரசு தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கை கடைப் பிடித்து வருகிறது. . 2026 மட்டுமின்றி 2031ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும். குன்னூரில் ஹாக்கி மைதானம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சருக்குப் பரிசு
இந்நிலையில், நேற்று காலை 10.30 மணி அளவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை முதலமைச்சர் சந்தித்து பேசினார். பின்னர் 11.30 மணியளவில் சென்னைக்குப் புறப்பட்டார். அப்போது, தமிழ்நாடு மாளிகை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு மாளிகை நுழைவுவாயில் பகுதியில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று பொதுமக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து கைகுலுக்கிச் சென்றார். அப்போது அங்கு காத்திருந்த தொண்டர்கள் அவருக்கு யானை பொம்மையைப் பரிசளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை சென்ற முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.