சென்னை, மே 14- தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாளையொட்டி, சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளினை செம்மொழி நாளாகக் கொண்டாடுவதை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
அந்த வகையில், சென்னை மாவட்டத்துக்கான இலக்கியப் போட்டிகள் சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கட்டுரைப் போட்டியில் சென்னை அசோக் நகா் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ம.ஜெ.அக்ஷயா – முதலிடம், சிறீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவா் மு.க.தா்ஷன் – இரண்டாமிடம், விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செள.நசிஹா பானு மூன்றாமிடம் பெற்றனா்.
அதேபோன்று பேச்சுப் போட்டியில் திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சீ.தனுசிறீ – முதலிடம், தண்டையார்பேட்டை முருகதனுஷ்கோடி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி வே.நெ.நைட்டிங்கேல் நிஷா – இரண்டாமிடம், வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.ஆா்த்தி மூன்றாமிடம் பெற்றனா்.
இரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அவ்வை ந.அருள் வழங்கினார்.
38 மாவட்டங்களிலும் முதல் பரிசு பெற்ற மாணவா்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மே 17-ஆம் தேதி மாநிலஅளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனா்.