திருச்சி, மே 8- திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இது தரை மற்றும் முதல் தளம் என இரண்டு அடுக்குகளை கொண்டது. இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து 401 பேருந்துகளை நிறுத்த முடியும். மேலும், சுமார் 3,200 பேருந்துகளை ஒரு நாளைக்கு கையாளும் திறன் கொண்டது. இதில் 1,257 நகரப் பேருந்துகளும், 1,929 வெளியூர் பேருந்துகளும் அடங்கும். கூடுதலாக 280 பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்துவதற்கு இடவசதி உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் கடைகள், உணவகங்கள், தங்கும் அறைகள் போன்ற நவீன வசதிகளும் உள்ளன. தரை தளம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் மே 9ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.
இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டால், திருச்சியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையம் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.