புதுடில்லி, மே 8- காரக்பூர் அய்.அய்.டி. மாணவர், கோடா நீட் பயிற்சி மாணவி ஆகியோரின் தற்கொலைகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.
தேசிய பணிக்குழு
உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கு, உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் காரணிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக்குழு அமைக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டு இருந் தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.பி.பர் திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (6.5.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சமீபத்திய 2 தற்கொலைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் கூறியதாவது:-
அய்.அய்.டி. மாணவர்
மேற்கு வங்காள மாநிலம் காரக்பூர் அய்.அய்.டி.யில் 3 ஆம் ஆண்டு கட்டட பொறி யியல் படித்து வந்த 22 வயது மாணவர், தான் தங்கியிருந்த விடுதி அறையில் கடந்த 4 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் பெயர் முகமது ஆசிப் காமர், பீகார் மாநிலம் சியோஹர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இறப்பதற்கு முன்பு அவர் டில்லியைச் சேர்ந்த நண்பருடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். இதுபோன்ற மோசமான தற்கொலைகளை தடுப்ப தற்குத்தான் தேசிய பணிக்குழுவை அமைக்க உத்தரவிட்டோம்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதா?
இந்த தற்கொலை குறித்து அய்.அய்.டி. நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டதா? வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்று அறிய விரும்புகிறோம்.
இதுபோல், ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள், நீட் பயிற்சி மய்ய மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுபற்றியும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்களா என்று அறிய விரும்புகிறோம். 2 கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் பதிவாளர் அறிக்கை கேட்டுப்பெற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
விசாரணையை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.