சட்டகத்தில் அடங்காத பெரியாரின் படம் ஒன்று, The Man who does not fit into frames’ என்ற குறிப்போடு புகழ்பெற்றது. அதன் அர்த்தமும் ஆழமானது. எந்தப் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆனாலும், அதை பெரியார் எப்படி அணுகுவார் என்பது பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. மறைந்து அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கருத்தியலாகவும், விவாதமாகவும் இருக்கும் பெரியார், இப்போது அழகியலாக ‘டிரெண்டிற்கு’ வந்திருக்கிறார்.
ஏ.அய்.-யில் உருவாக்கப்பட்ட பெரியார் படங்கள் பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. புரட்சியாளர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸோடு அமர்ந்து பேசுவது போலவும், மடிக்கணினி பயன்படுத்துவது போலவும், அம்பேத்கரை அமர வைத்து பெரியார் ‘புல்லட்’ ஓட்டிச் செல்வது போலவும், பள்ளிச் சிறுமியை அழைத்துச் செல்வதுபோலவும், பட்டம் வாங்கிய இளம்பெண்கள் பெரியாரைத் தூக்கிச் சுமந்து கொண்டாடுவது போலவும் என விதவிதமான பெரியார் படங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு சமூக ஊடக உலகில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் என எங்கு சென்றாலும் ஏ.அய். தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெரியாரின் படம் பார்வைக்கு வந்துவிடுகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரியார் இருந்தால் எப்படி இருப்பாரோ, அப்படியே அச்சு அசலாக, 94 வயது முதியவரின் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் கூட துல்லியமாய் தெரியும் அளவுக்கு டிஜிட்டல் உருவகமாகியிருக்கிறார். ‘நகல் எடுக்க முடியாத அசல்’ என்று பெரியாரைச் சொல்வார்கள். அவரை அசலை விட மிக நேர்த்தியாக நகலெடுத்து அசத்துகிறது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்.