சென்னை, மே 7 நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனார் சிலை நெதா்லாந்தில் இருப்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கண்டறியப்பட்டு அந்தச் சிலை ஏலத்தின் மூலம் விற்கும் முயற்சியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தடுத்து நிறுத்தியது.
கோயில் சிலை
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயிலில் கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை கடந்த 2010-ஆம் ஆண்டு திருடப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்தச் சிலை, 64 செ.மீ. உயரம், 23 கிலோ எடை கொண்டதாகும். சிலை திருடப்பட்ட சம்பவம் குறித்து திட்டச்சேரி காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதேவேளையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவும் விரிவான விசாரணை மேற்கொண்டதில், திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை, நெதா்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருப்பதும், அந்த நாட்டின் மாண்டரிச் மாகாணத்தில் உள்ள அய்ரோப்பிய நுண்கலை கண்காட்சியில் ஏலத்தின் மூலம் விற்கப்பட உள்ளதும் தெரியவந்தது.
தடுத்து நிறுத்தம்
இதையடுத்து, ஏலத்தை தடுக்கும் வகையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தலைவர் பிரவேஷ்குமாா், நெதா்லாந்து காவல் துறையை மின்னஞ்சல் மூலம் தொடா்புகொண்டு ஏலத்தை நிறுத்துமாறும், அந்தச் சிலை திருடப்பட்டு கடத்தப்பட்டதையும் தெரிவித்தார். இதையடுத்து சிலை ஏலம் நிறுத்தப்பட்டு அந்தச் சிலையை நெதா்லாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். ஏலத்தை விரைந்து தடுத்த அதிகாரிகளை தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டினார்.
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின்
அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, மே 7 தமிழ்நாடு அரசால், மாற்றுத் திறனா ளிகள் நல வாரியம் 2007-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவ்வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டுள்ளது.
இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுவர். அதன்படி தற்பொழுது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பார்வையற்றோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், கை/கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் புற உலக சிந்தனையற்ற/மதி இறுக்கமுடையோர், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர், கற்றல் குறைபாடுடையோர், மனநல பாதிப்பு, இரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரையுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் வழியாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை-600 005, என்ற முகவரிக்கு 30.05.2025 தேதிக்குள் அனுப்பிவைத்திட ஏதுவாக விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 23.05.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது