புதுடில்லி, மே 6 சர்பத் விளம்பரத்தில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட விவ காரத்தில், ‘ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்’ என, டில்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாமியார் ராம்தேவ்
பதஞ்சலி என்ற பெயரில் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து சாமியார் ராம்தேவ் விற்பனை செய்து வருகிறார். கரோனா காலத்தில், அதற்கு மருந்து இருப்பதாகக் கூறி பதஞ்சலி மருந்துகளை இவர் விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பதஞ்சலி தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுவதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் ராம்தேவை கண்டித்தது. இந்த சூழலில், வட மாநிலங்களில் பிரபலமான ரூஹ் அப்சா சர்பத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக காட்சிப் பதிவு விளம்பரம் ஒன்றை ராம்தேவ் நிறுவனம் வெளியிட்டது.
அதில், ‘ஒரு கம்பெனி சர்பத் விற்ற பணத்தில் மசூதி, மதரசா கட்டுகிறது. நீங்கள் அந்த சர்பத்தை குடித்தால் மசூதியும், மதரசாவும் கட்டப்படும். ‘பதஞ்சலியின் ரோஸ் சர்பத்தைக் குடித்தால் குருகுலம், பதஞ்சலி பல்கலை கட்டப்படும். லவ் ஜிஹாத், ஓட்டு ஜிஹாத் போலவே, ஒரு சர்பத் ஜிஹாத்தும் நடக்கிறது’ என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ரூஹ் அப்சா சர்பத் தயாரிக்கும் ஹாம்தார்த் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதாக ராம்தேவ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்த வழக்கு 2.5.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறுகையில், ‘சர்ச்சைக்குரிய வகையில் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என, ராம்தேவுக்கு நீதிமன்றம் ஏற்ெகனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறும் வகையில் அவர் மீண்டும் மீண்டும் செயல்பட்டு வருகிறார்.
‘சர்பத் விளம்பரத்தின் பின்னணியில் ராம்தேவ் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல், தனி உலகில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு நீதிமன்ற அவமதிப்புக் கடிதம் அனுப்பி, நீதிமன்றத்துக்கு வரவழைப்பதை தவிர வேறு வழியில்லை’ என, குறிப்பிட்டார். இதையடுத்து, ராம்தேவுக்கு நீதிமன்ற அவமதிப்புக் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.