சென்னை, மே 6- ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவையில்லை. பொதுமக்களே இனி பத்திரப்பதிவு செய்யலாம் என லஞ்சத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சுய சான்றிதழ்
தமிழ்நாடு அரசு, மக்களுக்கு வழங்கும் சேவைகளில் இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால் இடைத்தரகர்கள் இருப்பதால் லஞ்சம் தலைவிரித்தாடி, அது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. சில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் செய்யும் தவறுகள் அரசை நோக்கி மக்களை வசைப்பாட வைக்கிறது.
எனவே முதல்-அமைச்சர் உத்தரவின்படி பல்வேறு துறை களில் இடைத்தரகர்கள் இல் லாத நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக அனைத்து வருவாய்த்துறை சான்றிதழ்களையும் பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து தங்களது ஆவணங்கள் அடிப்படையில் எளிதாக பெற்றுக் கொள்ளும் நிலை உருவாக்கப் பட்டு உள்ளது. அடுத்ததாக கட்டட வரைப்படங்களை பொதுமக்கள் யார் தயவும் இல்லாமல் சுயசான்றிதழ் முறையில் பெறும் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தால் பலரின் வீடு கட்டும் திட்டங்கள் லஞ்ச லாவண்யம் இல்லாமல் நிறைவேறி வருகிறது. இந்த திட்டம் மூலம் தங்களது கட்டட பணி மனநிறைவோடு தொடங்குவதாக பயனாளிகள் கூறுகின்றனர்.
கதவு திறப்பு
அதேபோல் அரசு ஏற்கனவே எடுத்த ரகசிய சர்வேப்படி, பத்திரப் பதிவுத் துறையில் அதிக அளவு லஞ்சம் புரள்வது தெரியவந்தது. எனவே தமிழ்நாடு அரசு, நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை பத்திரப்பதிவு தலைவராக நியமித்தது. மேலும் அவர் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. அதன்படி இந்த துறையில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க கடந்த 2 ஆண்டுகளாக சத்தமில்லாமல் சில பணிகள் நடந்து வந்தன.
அதன்படி பொதுமக்கள் தற்போது 1975ஆம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ் மற்றும் 1950ஆம் ஆண்டு முதல் நகல் பத் திரங்களை எளிதாக https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் தாங்களாகவே பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல் திருமண பதிவு நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களே நேரடியாக விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் அடுத்தக்கட்டமாக தற்போது பொதுமக்களே ஆவணங்களை நேரடியாக தாக்கல் செய்வதற்கான கதவுகளை பத்திரப் பதிவுத் துறை தற்போது திறந்து உள்ளது. அதாவது இதுவரை நாம் நமது நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை பதிவு செய்ய பத்திர எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் மூலமே ஆவணங்களை பதிவு செய்யும் நிலை இருந்தது. ஆனால் இனி அந்த நிலை இல்லை. பொதுமக்களே நேரடியாகவே ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
முதலமைச்சர் எண்ணம்
அதற்கான சீரமைப்புகள் இணைய தளத்தில் செய்யப்பட்டு உள்ளன. அதாவது பொதுமக்களே எளிதாக ஆவணங்களை உருவாக்கலாம். ஆவணங்களின் வகை, அதாவது விற்பனை ஆவணம், கொடை செட்டில் மெண்ட், பாகப்பிரிவினை போன்றவற்றை முதலில் பதிவு செய்ய வேண்டும். அதனை அடுத்து விற்பவர் பெயர், வாங்குபவர் பெயர், நிலம் அமைந்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம், கிராமம், சர்வே எண், நிலத்தின் அளவு உள்ளீடுகளை பதிவு செய்தால் ஆவணம் தானாக உருவாகி விடும்.
அதில் பதிவு செய்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தர், வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு பதிலான சுய பதிவு என்பதனை குறிப்பிட்டால் போதும். ஆவணம் உருவாகி விடும். அந்த ஆவணத்திற்கு உரிய அரசு கட்டணத்தை செலுத்தினால் போதும். நாள், நேரத்தை முடிவு செய்த பின்னர் ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து ஆஜராகி வழக்கம் போல் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 18001025174 என்ற தொலைபேசி எண்ணை https://தொடர்பு கொள்ளலாம். இந்த பணிகள் அனைத்தும் பத்திரப்பதிவு துறையில் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகஅதிகாரிகள் கூறுகின்றனர்.