புதுடில்லி, ஏப்.30 ‘உலக முற்போக்கு சர்வதேச’ குழுவினர் சோனியா மற்றும் ராகுலை சந்தித்தனர். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக அளவில் முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்கும் மற்றும் பன்னாட்டு பிரச்சினைகளை விவாதித்து முடிவெடுக்கும் ‘முற்போக்கு சர்வதேசம்’ என்ற அமைப்பின் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த குழுவினர் நேற்று (28.4.2025) காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினர். சோனியா வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னர் பல்வேறு துணை அமைப்புகளை இணைத்துக்கொண்டு உலக அளவில் வீரியமாக செயல்பட்டு வருவதாக பிரதிநிதிகள் கூறினர். அதன் பின்னர், அனைத்து மக்கள் வசிக்கும் கண்டங்களிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 க்கும் மேற்பட்ட அமைப்புகளை உள்ளடக்கியதாக குழுவின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பான நிழற் படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் 2024-2025
மீண்டும் இடதுசாரிகள் வெற்றி
புதுடில்லி, ஏப்.29 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தல் 2024-2025-இல் இடதுசாரி கூட்டணி (AISA-DSF) வெற்றி பெற்று தொடர் சாதனை புரிந்துள்ளது.
ஆல் இந்தியா ஸ்டூடன்ட்ஸ் அசோசியேஷன் (AISA) மற்றும் டெமாக்ரடிக் ஸ்டூடன்ட்ஸ் பெடரேஷன் (DSF) இணைந்து, தலைவர், துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வென்றனர். AISA-குழுவைச் சேர்ந்த நிதீஷ் குமார் 1,702 வாக்குகளுடன் தலைவராகவும், DSF-குழுவைச் சேர்ந்த மனிஷா 1,150 வாக்குகளுடன் துணைத் தலைவராகவும், முன்தேஹா பாத்திமா 1,520 வாக்குகளுடன் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ்-ஆதரவு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இணைச் செயலாளர் பதவியை மட்டுமே வென்றது.
வைபவ் மீனா 1,518 வாக்குகளுடன் இந்தப் பதவியைப் பெற்றார். ஏப்ரல் 25, 2025 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகின.
தேர்தல்
வாக்குப்பதிவு: ஏப்ரல் 25, 2025 அன்று, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 2:30 மணி முதல் 5:30 மணி வரை இரண்டு கட்டங்களாக 17 மய்யங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில மய்யங்களில், குறிப்பாக ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜ் மய்யத்தில், வாக்குச் சீட்டுகளில் பெயர்கள் இடம்பெறாததால் தாமதங்கள் ஏற்பட்டன. வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 28, 2025 அன்று முடிவடைந்து, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
7,751 மாணவர்களில் சுமார் 5,500 பேர் வாக்களித்தனர், இது 70% வாக்காளர் பங்கேற்பைக் குறிக்கிறது.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல், இந்தியாவின் மிக முக்கியமான மாணவர் அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இடதுசாரி அமைப்புகள் (AISA, SFI, DSF, AISF) பல ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1974 முதல் 2017 வரை, SFI 22 முறையும், AISA 11 முறையும் தலைவர் பதவியை வென்றுள்ளன, அதேசமயம் ABVP வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஒரு முறை மட்டுமே மாணவர் சங்கத்தேர்ந்தலில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆண்டு, இடதுசாரி ஒற்றுமையில் ஏற்பட்ட பிளவு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் மனிஷா, “இந்த வெற்றி ஜேஎன்யு மாணவர்களின் ஆதரவுக்குக் கிடைத்த பரிசு. ஜேஎன்யு எப்போதும் சோசலிசம் சமத்துவத்திற்கு அடையாளமாக இருக்கும் என்று கூறினார்.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் 2024-25, இடதுசாரி ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது, ஹிந்துந்துத்துவ அமைப்பினர் நிர்வாகத்தில் பெரிய அளவில் தலையிட்ட போதிலும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் அவர்களது நெருக்கடிகளையும் மீறி மீண்டும் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளது