சமஸ்கிருதத்தை
உயிர்ப்பிக்க ஒத்திகை!
சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க உத்தரகாண்டை முன்மாதிரியாகக் கொண்டு சகல முயற்சிகளிலும் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமஸ்கிருத மொழியை மக்களிடையே கொண்டுசெல்லும் நோக்கிலும், மக்களின் அன்றாட வாழ்வில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு ‘எளிய’ சமஸ்கிருதத்தில் பேச பயிற்சி அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இணைய வழி மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படும்.
இந்த திட்டம் குறித்த விரிவான அறிக்கை, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற உத்தரகாண்ட் சமஸ்கிருத அகாடமியின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், சமஸ்கிருதத்தை ஒரு பேச்சு மொழியாக உயிர்ப்பிப்பதோடு மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புகளுடனும் இணைப்பதாகும். இந்த பயிற்சியானது பல கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளதாம்.
மாநிலத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் உள்ள நிலையில், இந்த பயிற்சி மூலம் இளைய தலைமுறையினர் சமஸ்கிருதத்தில் உரையாட ஊக்குவிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பயிற்சியைத் தவிர, சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த பல்வேறு கூடுதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. வேத ஆய்வு மய்யங்கள் அமைத்தல், சமகால தலைப்புகளில் சமஸ்கிருதத்தில் குறும்படப் போட்டிகள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமஸ்கிருதத்தில் விவாதம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்தல் மற்றும் அலுவலகப் பெயர் பலகைகளில் சமஸ்கிருதத்தில் எழுதுவதை கட்டாயமாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் பஞ்சாயத்தின் கீழ் வரும் கிராமங்களை ‘சமஸ்கிருத கிராமங்களாக’ மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் சமஸ்கிருதத்தில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.
மேலும், சமஸ்கிருதம் கற்கும் மாணவர்களுக்கு அரசு ஊதியத்திற்கு நிகரான ஊக்கத்தொகை திட்டங்கள் மற்றும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
ஆரம்பக் கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எளிய உரையாடல் சமஸ்கிருதம் மற்றும் 16 பாரம்பரிய மதவழிபாட்டுமுறை மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த முயற்சி சமஸ்கி ருதத்தை ஒரு சாத்தியமான தொழில் பாதையாக மாற்று வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பூசாரிகள் மற்றும் சடங்கு நிபுணர்களுக்கான பயிற்சிகளும் அடங்கும்.
இந்த திட்டம் தொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்க்கர் சிங் தாமி கூறும் போது ‘‘சமஸ்கிருதம் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியம், யோகா மற்றும் ஆயுர்வேதத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் நமது கலாச்சாரம் வறண்டு போனதற்குக் காரணம் சமஸ்கிருதம் மக்களிடையே பேசப்படாதது மட்டுமே. அனைவரும் சமஸ்கிருத்தில் உரையாடும் போது நமது கலாச்சாரம் மீண்டும் உயிர்பெறும்; இந்த திட்டம் சமஸ்கிருதத்தை இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, ஸ்மிருதி, மற்றும் இதர மந்திர நூல்களின் மொழியாக மட்டுமன்றி, அன்றாட தகவல் தொடர்பு மொழியாகவும் மக்களிடையே மீண்டும் கொண்டு சேர்க்கும்’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சமஸ்கிருத கல்வி மற்றும் உரையாடலில் சிறந்து விளங்குபவர்களுக்கும், சமஸ்கிருதத்தை மக்களிடையே கொண்டு செல்ல குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்பவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் கவுரவங்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசின் நிதி மற்றும் மாநில அரசு கலாச்சாரத்துறையும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
‘‘வரும் ஆண்டு முதல் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தில் உரையாட ஊக்குவிக்கும் விதமாக சமஸ்கிருதத்தில் உரையாடும் மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கி அரசு சார்பில் கவுரவிக்கப்படும்’’ என்றும் முதலமைச்சர் புஷ்க்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
சமஸ்கிருதத்துக்கு 1487.9 கோடி ஒதுக்கியுள்ளது. ஒன்றிய பிஜேபி அரசு என்றால், அதன் இரகசியம் இதுதான்.
மக்கள் தொகையில் 00.1 விழுக்காடு பேசப்படும் மொழிக்கு இவ்வளவுத் தொகை என்பதன் நோக்கமே சமஸ்கிருத, ஆரிய கலாச்சாரத்தை நாடெங்கும் நிலை நிறுத்துவதுதான்.
ஒரே மொழி, ஒரே நாடு என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை செயல்படுத்தும் அபாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.