சுயமரியாதை இயக்கம்!
உலகத்தில் மதம் வளர்த்தும் சாதி சேர்த்தும்
உயர்வுதாழ் வினைச்செய்தும் சடங்கு கண்டும்
கலகத்தை நடத்துகின்றான்; பழநூற் கொள்கை
கதியென்றான்; உளறுகின்றான்; மூட எண்ணம்
இலகட்டும் என்கின்றான். அந்தத் தீய
இருளப்பன் விடை பெற்றான் திருமுகத்தில்
நிலாவீச ஒளிமங்கை எழுந்தாள்! அந்த
நேரிழை பேர் சுயமரியாதை இயக்கம்!
சுயமரியாதை உலகு!
ஜாதி மதபேதங்கள், மூட வழக்கங்கள்,
தாங்கி நடைபெற்று வரும் சண்டை உலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அைலக்கழிப்போம்! பின்னர்
ஒழித்திடுவோம்! புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசு சுயமரியாதை உலகு எனப் பேர்வைப்போம்!
ஈதே காண்! சமூகமே, யாம் சொன்ன வழியில்,
ஏறுநீ! ஏறுநீ!! ஏறுநீ!! ஏறே!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்