27.11.1927- குடிஅரசிலிருந்து…
எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இதுபோல் மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய்த் தீர்ப்பை எதிர் பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது.
இனியாவது, சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம்.