அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப்.27- சொத்து, பணம்தொடர்பான சிவில் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்த கோரும் (இ.பி.) மனுக்கள் விசாரணை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சொத்துகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குகளில் தொடர்புடைய சொத்துகளை மீட்டு சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும். இந்த இ.பி. மனு கீழ் நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் கிடப்பதாகவும், இதனால் கோர்ட்டில் சாதகமான தீர்ப்புகளை பெற்றவர்கள், அதன் பயனை அடைய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ள அனைத்து இ.பி. மனுக்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவேண் டும் என்று அனைத்து கீழ் நீதிமன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழ் நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். அதில், “பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து இ.பி. மனுக்களையும் 6 மாதங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தவறினால், உயர்நீதிமன்றத்தில் நிர்வாக தரப்புக்கு, சம்பந்தப்பட்ட நீதிபதி பதில் அளிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து நீதிபதிகளும் கவனத்துடன் தீவிரமாக பின்பற்றவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிக்க வேண்டும் உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஏப்.27 பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிப்பது கட்டாயம் என்ற இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மண்டி மாவட்டத்தில் உள்ள பங்க்னா கிராம பஞ்சாயத்து தலைவர் பசந்த் லால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
குற்றவியல் வழக்குகளை ஒரு வேட்பாளர் அறிவிக்காமல் இருப்பது சட்டவிரோதமானது என்று கூறும் இமாச்சலப் பிரதேச பஞ்சாயத்து ராஜ் சட்டம், 1994, அத்தகைய செயலை மீறுபவர்களின் வேட்புமனுவை செல்லாததாக்க போதுமான அடிப்படையாகும் என்று உயர் நீதிமன்றம் தனது 2024 தீர்ப்பில் தெரிவித்திருந்தது.