இந்தி எதிர்த்திட வாரீர்! – நம்
இன்பத் தமிழ்தனைக்காத்திட வாரீர்!
இன்னலை ஏற்றிட மாட்டோம் -கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்திஎன் றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் – வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்!
இந்த கம்பீர வரிகளை ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தி திணிப்பை எதிர்க்கும் இக்காலத்தில் மொழியுணர்வில் இறுதி எல்லையென பொங்கும் உணர்வுடையாருக்கு எங்கும் பொருந்தும் யாரும் எடுத்தும் பேசலாம் இதுபோலொன்றை எழுதிடவும் கூடும். ஆனால், இதனோடு சேர்த்து
“தென்னாடு தான்எங்கள் நாடு! -நல்ல
செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்!
புன்மைகொள் ஆரிய நாட்டை – எங்கள்
பொன்னாட்டி னோடு பொருத்துதல் ஒப்போம்!”
என்று ஆரியம்தான் அன்னைத்தமிழ் நிலத்தின் நேர் எதிரியென துணிந்து எழுதிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் முழு எழுத்தை அடிமாறமால் எடுத்துரைக்க அய்யா தந்தை பெரியாரின் கருப்புச்சட்டைத் தோழர்களால் மட்டுமே முடியும்.
கவி பல பாடியும் காலத்தே கொண்டாடாமல் நிராகரிக்கப்பட்டதற்கு பாரதிதாசனுக்கு இருந்த அடையாளம் அவர் பார்ப்பனிய எதிர்ப்பில்தான் தமிழை தமிழரை மீட்க முடியும் என்று எழுதியதுதான். மற்ற எல்லா இடது எழுத்தாளர்களினும் கூட இவர்போல் வேறுயார் என்று கேட்கும் அளவுக்கு இருந்தபோதும் மொழி,இனம்,பெண் விடுதலை,தொழிலாளர் விடுதலை, ஜாதி மதம் ஒழிந்த மானுட விடுதலை, தேச விடுதலை என பாடாத பொருள் எதுவும் இல்லை என்றாலும் பாரதியின் மீசைக்கும் முன்டாசுக்கும் கிடைத்த மரியாதை பாரதிதாசன் என்னும் பெரும் கவிஞனுக்கு நிராகரிக்கப்பட்டதற்கு மானுட விடுதலையை மறுக்கும் எவற்றிற்கும் அடிப்படையில் பார்ப்பனியம்தான் காரணம் என்று அவர் எழுதியதுதான்.
“ஒரே ஒரு புரட்சிக்கவிஞர் தான் இந்த உலகத்தில் கிடைத்தவர் என்ற அளவிலே தான், அவருடைய கருத்துகள் மற்றவர்கள் எட்டமுடியாத எல்லைக்கு, உயரத்திற்குப் போய் சேர்ந்திருக்கின்றன. மிகத் தேவையான ஒன்றை, துணிவாக சொல்லக்கூடிய அளவுக்கு இருந்த ஒருவர் என்ற பெருமை அவருக்கு என்றைக்கும் தனித்த முத்திரையைப் பதித்துக் கொண்டிருப்பதாகும்” என்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி. தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் பார்ப்பன ஆச்சாரியார் கையிலிருந்து திரவிடர்தம் கைக்குவந்து, இதுகாறும் தந்தை பெரியார் பெயர் நின்று செய்யும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டைகள் பார்ப்பன நாயகமாக கெட்டிப்போயிருக்கும் டில்லியில் இருந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.பெயருக்கேனும் தீண்டாமை ஒழிப்பை முன்வைத்த காந்தியின் கடந்தகால காங்கிரசின் தொடர்ச்சியாய் நேரு தலைமையில், அவர் மகள் இந்திரா காந்தியாரின் தலைமையிலும் இந்தியை காலத்தே திணிக்க முனைந்தாலும் இப்போது வரும் இந்தி ஜாதி பிரிவினை வளர்ப்பை உயிரெனக்கருதும் ஆர் எஸ் எஸ் – பாஜக ஆட்சிக்குட்பட்ட அதிகாரத்தின் கீழானது.
“கோட்சேக்கள் கூட்டம் கொணர்ந்தது இந்தி!
கொலைகாரர் கொள்கையை நடுங்கச் செய் முந்தி!
ஆட்பட்டிருந்திடோம்! அடிமைப்படோம் என்றே
ஆர்த்தெழு போர் தொடு அனல்காற்றாய் உந்தி!
ஆரிய மாயையால் அழிந்ததே நாடு!” என்று 1948 இல் பாரதிதாசன் எழுதியது இன்றைக்குத்தான் நூறு சதவிகிதம் பொருந்திப்போகும் காலத்தே வந்து நிற்கிறது.
சுயமரியாதை இயக்க வீரர்களென நடராசன், தாளமுத்து தொடங்கி மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி வரை 12 உயிர்களைப் பலிகொடுத்து காத்த தமிழை இந்துத்துவ பாஜக இன்னமும் அழிக்க முனைந்துகொண்டே இருக்கிறது. தமிழை பாதுகாப்போம் என்பது நம் எதிர்வினையாகவே இருப்பதில் தலைமுறை இடைவெளியிலும் தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் , அதன் அடிப்படையை விளங்கிக்கொள்வதற்கு பாரதிதாசனின் வரிகள்தான் இன்றும் தேவைப்படுகிறது. இந்தி திணிப்பை சமஸ்கிருத திணிப்பாக ஆரிய பண்பாட்டுத்திணிப்பாக முன்வைத்து எதிர்ப்பதுதான் தந்தை பெரியாரின் பார்வை அந்த பார்வையைத்தான் பாரதிதாசன் எழுத்தும் பிரதிபலித்தது.
இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாம் மும்மொழிக்கொள்கையை ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் முரண்டுபிடிப்பது ஏன் என்ற கேள்வியை ஒன்றிய அமைச்சர் தன்மேந்திர பிரதான் கேட்டார்.தேசியக் கல்விக் கொள்கை மும்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்குகிறது.மூன்றாம் மொழியென்றால் இந்தி இல்லை ஏதேனும் ஒருமொழி என்று இங்குள்ள பார்ப்பனர் அடிமைகள் சொல்லிவந்தபோது அதெல்லாம் ஒன்றுமில்லை இந்திதான் அந்த மூன்றாம் மொழி என மஹாராஷ்டிர பாஜக அரசு அறிவித்துவிட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்புவரை உள்ள பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என சட்டம் செய்துவிட்டார்கள். உண்மையில் இந்தி யாருக்கு யாரால் கொண்டுவரப்படுகிறது என்பதை விளக்கும் பாரதிதாசன்
“கொடியர் வடவர் இந்தியினைக்
குழந்தைக் கல்விக் கூடத்தில்
படிக்கச் சொல்லி நுழைக்கின்றார்
பாம்பின் நஞ்சை மறந்தழகு
வடிவில் மயங்கி வாழ்க்கையினை
மடித்துக் கொள்ளச் சொல்கின்றார்
ஓடிய அவர்தம் முயற்சிகளை
ஒடுக்கி நறுக்கித் துரத்திடுவீர்!
ஒத்துப் போகா உறவினர்கள்
உலகில் “நமக்கிங்கு ஆரியரே”
செத்துப் போன மொழியுடலில்
செழுமை யற்ற இந்திமொழி
பித்துப் பிடித்தே ஆட்சியினால்
பெருமைத் தமிழுக் கிடையூறாய்த்
தொத்திக் கொள்ளப் பார்க்கிறது
தொலைத்தல் தமிழர் கடனாமே!” என்கிறார்.
இந்தி திணிப்பு என்பது பார்ப்பனர் நலனே என்பதுதான் அடிப்படையில் உண்மை. ராஜாஜியும் அதற்குத்தான் முந்தினார். ” யார்தாம் தலைவர்? நல்வழி காட்டுவோர் யாவர்? இந்நாள் யார்தாம் தமிழரைக் காக்கப் பிறந்தார்? இனிப்பிறவார் யார்தாம்? அவர்நம் “பெரியார்தாம்” இல்லை எனில்பிறகு யார்தாம் புகலுவிர்? யார்தாம் புகலுவிர் இந்நிலத்தே! ” என்று பாரதிதாசன் அடையாளப்படுத்தும் அய்யா பெரியார் அதை முறியடித்தார்.
எதற்கெடுத்தாலும் தந்தை பெரியாரும் அவர் இயக்கமும் பார்ப்பனர்களையே குற்றம் சொல்லும் என்பது இன்றைக்கும் விமர்சனமாக விவாதமாக விதண்டாவாதமாக முன்வைக்கப்படுவதுண்டு எந்த சந்தேகமுமின்றி இப்போதும் திணிக்கப்படும் இந்திக்குப்பினாலும் பார்ப்பனர் சூழ்ச்சியே முந்தி இருக்கிறது என்பதையும் அந்த பார்ப்பனர் கால்பிடித்து கிடைக்கும் தமிழ்நாட்டின் பாஜக பிழைப்புவாதத்தலைவர்கள் பலரையும் சாடுகிற பாரதிதாசன்
“கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள்
சட்ட மியற்றுவதில் சம்மதமோ என்தமிழா!
‘தமிழழியு மானால் தமிழர் அழிவர்’ – இதை
நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா!
தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை
நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா!”
என்று தமிழர்க்கு அடையாளம் காட்டுகிறார்.
(தொடரும்…)