சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலனின் அறிவியல்பூர்வமான கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சரின் பதில் ஏற்கத்தக்கதல்ல!
தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!
‘‘இது தொடரும் கலைஞர் அரசு’’ என்று பிரகடனப்படுத்தும் நிலையில், பாதை மாறலாமா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலனின் அறிவியல்பூர்வமான கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சரின் பதில் ஏற்கத்தக்கதல்ல! ‘‘இது தொடரும் கலைஞர் அரசு’’ என்று பிரகடனப்படுத்தும் நிலையில், பாதை மாறலாமா? தவறுகள் திருத்தப்படவேண்டும்; மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்! தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் திரு.நா.எழிலன் அவர்கள் சட்டப்பேரவையில், மூடநம்பிக்கைகளைத் தடுப்பதுபற்றிய அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.
மிகுந்த வேதனையோடும், வருத்தத்தோடும்
பதிவு செய்ய விரும்புகிறோம்
பதிவு செய்ய விரும்புகிறோம்
அரசாங்கப் பொறுப்பேற்கும் குடியரசுத் தலைவர் முதல் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்வரை இந்திய அரசமைப்புச் சட்டப்படி கடமைகளை ஆற்றுவேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்து, பதவியேற்கும் நிலையில், அச்சட்டத்தின் 51–ஏ(எச்)–இன் பிரிவு அடிப்படையில் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதுபற்றிய பகுத்தறிவுக் கேள்வி ஒன்றுக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கூறிய பதில், பகுத்தறிவாளர்களாலும், விவரந்தெரிந்த கல்வியாளர்களாலும் ஏற்கத்தக்க பதில் இல்லை என்பதை மிகுந்த வேதனையோடும், வருத்தத்தோடும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
நம்பிக்கை என்பது வேறு;
மூடநம்பிக்கை என்பது வேறு!
மூடநம்பிக்கை என்பது வேறு!
‘மூடநம்பிக்கை’ என்ற சொல்லிலிருந்தே, (நன்)நம்பிக்கை என்பது வேறு; மூடநம்பிக்கை என்பது வேறு என்று தெளிவான பொருள் பிரதிபலிக்கவில்லையா?
அதுபற்றி, ‘‘இது அண்ணா, கலைஞர் அரசு என்ற அடிப்படையை’’ அறவே புறக்கணிக்கும் வகையில், சட்ட அமைச்சரின் பதில் அமையலாமா?
அமைச்சரது மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக நரபலி, மாந்திரீகம் என்ற பெயரால், குடும்பப் பெண்களின் நகைகளைப் பறிப்பது, ஏமாற்றுவது, பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடப்பது எந்த நம்பிக்கை அடிப்படையில்?
அவற்றை நியாயப்படுத்த முடியுமா?
இன்றைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி, கலைஞர் ஆட்சியின் மறுபதிப்பு – தொடர்ச்சி என்ற நிலையில், அமைச்சரின் இந்த விளக்கம் – பதில் பகுத்தறிவாளர்களால் ஏற்கத்தக்கதா?
கொள்கைத் துடிப்புடன் செயல்படும்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
கொள்கைத் துடிப்புடன் செயல்பட்டு, கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாது, விளைவுகளைச் சந்திக்கத் தயார் என்று முழங்கும், அதன்படியே நடக்கும் இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களுக்குப் பகுத்தறிவுப் பாசறை, பயிற்சி வகுப்புகள் முதலியன நடத்தி, வெளியீடுகள் வழங்கி பக்குவப்படுத்துவது பற்றியெல்லாம் சில அமைச்சர்களுக்குத் தெரியாதா, புரியாதா? போகிற போக்கில் பதில் கூறுவதா, இந்த முக்கிய கொள்கைப் பிரச்சினையில்?
தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமை!
எல்லாவற்றையும் தாண்டி, இதே பிரச்சினைபற்றி, கடந்த 2013 இல் நமது ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞர் அவர்கள் எழுதிய முக்கிய மடலை, சட்ட அமைச்சருக்கும் மற்றும் சில அமைச்சர்களுக்கும், சட்டப் பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இவ்வாட்சி யினைப் பாதுகாக்க என்றென்றும் பணி செய்யும் திராவிடர் கழகத்தின், தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!
மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்!
இந்தப் பிரச்சினையில், இக்கருத்தினை நமது முதல மைச்சர் ஏற்காமல், மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்.
தவறுகள் திருத்தப்படவேண்டும்.
‘‘இது தொடரும் கலைஞர் அரசு’’ என்று பிரகட னப்படுத்தும் நிலையில், பாதை மாறலாமா?
தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ‘‘கடவுள் பெயரால்’’ என்பதைத் தவிர்த்து, ‘‘உளமார’’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள்!
நமது முதலமைச்சர் ஆழ்ந்து சிந்தித்து, இதற்குத் தக்க பதிலும், பரிகாரமும் காணவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள்.
பிரபல கல்வியாளர் வேலூர் வி.அய்.டி. வேந்தர் விசுவநாதன் அவர்கள், இந்த வேண்டுகோளை பல மேடைகளில் வற்புறுத்தியுள்ளார் என்பதும் நாம் தரும் கூடுதல் தகவல் ஆகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.4.2025
குறிப்பு: 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று, நமது நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் எழுதிய மடலை அப்படியே பிரசுரித்துள்ளோம் (4 ஆம் பக்கம்), ஊன்றிப் படிக்க வேண்டுகிறோம்.