புதுடில்லி, ஏப்.23- காசோலை மோசடி வழக்கில் தண்டிக்கப் பட்டதால் ஆத்திரமடைந்த குற்றவாளியும் அவரது வழக்குரைஞரும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் டில்லியில் அரங்கேறியுள்ளது.
டில்லி துவாரகா நீதிமன்றத்தில் 6 ஆண்டு கால காசோலை மோசடி வழக்கு ஒன்றில் குற்றவியல் நடுவர் ஷிவாங்கி மங்களா கடந்த 2-ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.
அதில் அவர், குற்றம் சாட்டப் பட்டப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியரை குற்றவாளி என அறிவித்தார்.
இதனால் அந்த ஆசிரியரும் அவரது வழக்குரைஞரும் நீதிபதி மீது ஆத்திரமடைந்தனர்.
அப்போது அந்த ஆசிரியர் நீதிபதியிடம் “நீ எப்படி உயிருடன் வீடு திரும்புகிறாய் என்று நாங்கள் பார்க்கிறோம்?” என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் கையில் இருந்த ஒரு பொருளை பெண் நீதிபதி மீது வீச முயன்றுள்ளார்.
இதுகுறித்து நீதிபதி ஷிவாங்கி மங்களா பிறப்பித்துள்ள உத்தரவில், “குற்றவாளியும் அவரது வழக்குரைஞரும் என்னை பதவி விலக வேண்டும் என்று கூறி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தினர், குற்றவாளியை விடுவிக்காவிட்டால் என் மீது புகார் அளித்து பணியை விட்டு விலகுமாறு செய்வோம் என்று மிரட்டினர்.
எனவே குற்றவாளி மீது தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வழக்குரைஞர் அதுல் குமாரின் தவறான நடத்தைக்காக அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க டில்லி உயர் நீதிமன்றத்திற்கு ஏன் பரிந்துரைக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அதுல்குமார் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 5-ஆம் தேதி காசோலை மோசடி வழக்கில் அந்த ஆசிரியருக்கு நீதிபதி ஷிவாங்கி 22 மாத சிறை தண்டனையும் ரூ.6.65 லட்சம் அபராதமும் விதித்தார்.