நான்கு ஆண்டுகள் அதிகாரத்தில் இருப்பவருக்காக எங்கள் எதிர்கால வளர்ச்சியை காவுகொடுக்க முடியாது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்பின் அதிகார உத்தரவிற்கு இணங்காமல் நாங்கள் கல்வி அமைப்பு சுதந்திரமாக செயல்படுவோம் என்று கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவர். அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பெரும் செல்வந்தர்களின் லாபத்திற்கு எந்த ஒரு பாதகமும் நிகழாமல் இருக்க தன்னுடைய அரசு இயந்திரத்தையே அடிமட்டத்தில் இருந்து மாற்றும் மேதாவித்தனமான செயலைச் செய்துவருகிறார்.
இதனால் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சி திடீரென பின்னோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் டிரம்ப் அமெரிக்க கல்வி நிறுவனங்களும் முதலாளிகளின் துதிபாடவேண்டும். பெரும்பாலான இசுரேலிய யூத முதலாளிகளுக்கு சாதகமாகவே பல்கலைக்கழக நடவடிக்கை இருக்கவேண்டும் என்று மிரட்டுகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சுதந்திரம், ஆராய்ச்சி நிதி, அரசியல் தலையீடு, கொள்கை திணிப்பு என டொனால்ட் டிரம்ப் டிராய் போன்று தொடர்ச்சியாக ஏவுகனைகளை வீசி வருகிறார்.
டிரம்ப் அரசாங்கம், ஹார்வர்ட் போன்ற பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்குவதால், அப்படி பெறும் நிதியைப் பயன்படுத்துவதற்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. ஆராய்ச்சி நிதி ஒதுக்கீடு அல்லது மாணவர் உதவித்தொகை தொடர்பான விதிகள் நிறுத்தப்படுகிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கருத்து சுதந்திரத்தை மய்யமாகக் கொண்டு, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக பல விவாதங்களை நடத்தி வருகிறது. குடியேற்றக் கொள்கைகள், இனவெறி பிரச்சினைகள், அல்லது வெளிநாட்டு மாணவர்களின் விசா விதிகள் தொடர்பாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது. சமீபத்தில், ஹார்வர்ட் மீது அமெரிக்க அரசாங்கம் அல்லது தனியார் அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள், குறிப்பாக மாணவர் சேர்க்கை முறைகள் தொடர்பாக, மோதல்களை உருவாக்கியுள்ளன.
அமெரிக்க அரசாங்கம், குறிப்பாக வெளிநாட்டு ஆராய்ச்சி ஒத்துழைப்பு தொடர்பாக, பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. இது ஹார்வர்டின் ஆராய்ச்சி திட்டங்களில் அரசாங்கத்தின் தலையீட்டை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனா உள்ளிட்ட இடதுசாரி நாடுகளின் கொள்கைகளைக் கொண்ட நாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடாது – மாணவர்களுக்கு அந்த நாடுகள் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுகளை ஊக்குவிக்க கூடாது என்று கூறி வருகிறார்.
ஆனால் ஹாவர்ட் பல்கலைக்கழகம் அரசின் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்கும் ஒரு அதிபருக்காக மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கருத்து சுதந்திரத்தையும் பணயம் வைக்கமாட்டோம் என்று டொனால்ட் டிரம்பின் முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டது.