சுயமரியாதை இயக்கப் பாதை எப்படிப்பட்டது?
கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றோம்!!
நம்முடைய வேல்.சோமசுந்தரம் இன்ைறய இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார்
சென்னை, ஏப்.12 ஒவ்வொரு சுயமரியாதைக்காரர்க ளுக்கும் நூறாண்டு விழாவினை ஏன் நடத்துகின்றோம் என்றால், அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக என்பது மட்டுமல்ல, இந்த இயக்கப் பாதை எப்படிப்பட்டது? கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், ஓராண்டில், பல நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்டிருக்கின்றோம். இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் நம்முடைய வேல்.சோமசுந்தரம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி
வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா!
வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா!
கடந்த 1.3.2025 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘சுய மரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில், நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கடைசிவரையில், தலைமைக்குக் கட்டுப்பட்ட ஒரு தொண்டர் அவர்!
வேல்.சோமசுந்தரம் அய்யா அவர்களுடைய சிறப்பு, தனித்தன்மை என்னவென்றால், மற்ற வர்களுக்கெல்லாம் அவர் ஏணியாக இருந்தார். கடைசிவரையில், தலைமைக்குக் கட்டுப்பட்ட ஒரு தொண்டனாக, எடுத்துக்காட்டான ராணுவத் தொண்டனாக இருந்தார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, நாங்கள் நடத்திய போராட்டத்தில் எங்க ளோடுதான் சிறைச்சாலையில் 15 நாள்கள் இருந்தார்.இயக்கக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வ தற்காக, கால்நடையாகவே பயணிப்போம். நேரி டையாக மக்களிடையே பிரச்சாரம் செய்வது. ஊர் ஊராகச் செல்வதற்குப் பேருந்திலோ, ரயிலி லோதான் சென்று பிரச்சாரம் செய்யவேண்டிய கட்டாயம்.
எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!
இப்போது டுவீலர்கள் ஏராளமாக இருக்கின்றன. நம்முடைய தோழர்கள் நிறைய பேர் கார் வைத்தி ருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இரண்டு நாள்களுக்கு முன்புகூட, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், மதுரை போன்ற இடங்களுக்குப் பிரச்சாரத்திற்காகச் சென்றபொழுது, தோழர்கள் சிலர் என்னிடம் வந்து, ‘‘கார் வாங்கியிருக்கிறேன், நீங்கள்தான் கார் சாவியைக் கொடுக்கவேண்டும்’’ என்று கேட்பார்கள்.
‘‘நான் ஏற்கெனவே, ஒவ்வொரு தோழருக்கும் சாவி கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன், நன்றாக வேலை செய்யவேண்டும்’’ என்பதற்காக என்றேன்.
இப்போது கழகத்திற்கு இது ஒரு ‘கார்’ காலம். அப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் ஒரு கார் கூட எங்களுக்குக் கிடையாது. யாராவது கார் வாங்கினால், மேலே இருக்கின்ற டாப்பை மடக்கி விடுவதுபோன்றுதான் இருக்கும். பழைய தோழர்களுக்குத் தெரியும்.
மாட்டுவண்டியிலும், ரிக்ஷாவிலும் பயணம் செய்தவர் தந்தை பெரியார்!
பெரியார் அய்யா அவர்கள், ரயில் நிலையத்திற்கு மாட்டு வண்டியிலோ, ரிக்ஷாவிலோ, கைவண்டியிலோதான் பயணம் செய்வார். செய்யாறில் உள்ள வாழ்குடை (வாக்கடை) என்ற ஊரில் மாட்டுவண்டியில்தான் பயணம் செய்தார். கூண்டு வண்டி என்று சொல்வார்கள், அதில் பெரியாரும், மணியம்மையாரும் சென்றார்கள் கிருஷ்ணசாமி வீட்டிற்கு.
அவர் எம்.ஏ., படித்தவர். ‘‘நான் எப்படி இந்தக் கூண்டு வண்டியில் வருவது’’ என்று சொல்லி, போய்விட்டார். படிக்காத பெரியார், கூண்டு வண்டியிலேயேதான் சென்றார்.
பிரச்சாரப் படைக்குத் தலைவராக இருந்தவர் வேல்.சோமசுந்தரம்!
இந்த இயக்கத்திற்காக கால்நடைப் பிரச்சார பயணங்களை நாங்கள் நடத்தியபோது, திருத்தணிக்குப் பக்கத்தில் உள்ள பொதட்டூர் பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், தா.பாண்டியன் உள்பட நானும் சென்றேன். அந்த பிரச்சார அணிக்குத் தலைவராக அய்யா வேல்.சோமசுந்தரம் அவர்கள்தான் இருந்தார்; இது பெரியார் காலத்திற்குப் பிறகு. 31 நாள்கள் அந்தப் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.
அவர் யாரிடமும் சமரசம் செய்துகொள்ளமாட்டார். ‘சோமு’ என்றுதான் தந்தை பெரியார் அழைப்பார். ‘சோமு அண்ணன்’ என்றுதான் செய்யாறு தாடி அருணாசலமும் அழைப்பார்.
அந்தப் பிரச்சார பயணத்திற்காக, இயக்கத்தில் உள்ள இளைஞர்களை அழைத்துச் சென்றார். ஓர் இளைஞர், குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை என்பதால், ‘‘நாளையிலிருந்து நீ வரவேண்டாம்’’ என்று சொல்லிவிட்டார். ராணுவக் கட்டுப்பாடு போன்று இயக்கத்தில் மிகத் தீவிரமாக இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ‘பிராமணாள் காப்பி கிளப்’ என்று இருக்கும் பெயரில், ‘பிராமணாள்’ என்பதை அழிக்கவேண்டும் என்று சில தோழர்கள் முடிவெ டுத்தார்கள்.
அய்யா அவர்கள், அப்படி ஒரு தீர்மானத்தைப் போடவில்லை. நடைமுறையில் என்ன சாத்தியமோ அதையொட்டித்தான் கொள்கைப் பிரச்சாரங்களைச் செய்வார். படிப்படியாக செய்யவேண்டும் என்று நினைப்பார்.
மிகத் தீவிரமாகப் பேசியவர்கள், கடைசிவரையில் இயக்கத்தில் இருந்ததில்லை!
ஆனால், எல்லா இயக்கங்களிலும் தீவிரமாக தீவிர வாதிகள் போன்று சிலர் இருப்பார்கள். மிகத் தீவிரமாகப் பேசியவர்கள், கடைசிவரையில் இயக்கத்தில் இருந்த தில்லை என்பதுதான் வரலாறு.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘பிராமணாள்’ என்று இருப்பதை அழிக்கவேண்டும் என்றும், ‘‘நான் பார்ப்ப னர்கள் சமைத்த உணவை சாப்பிடமாட்டேன்’’ என்றும் தீர்மானம் போட்டார்கள். அதில், சோமசுந்தரம் அவர்கள்தான் கையெழுத்துப் போட்டிருந்தார்.
அப்படி அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியதிலிருந்து, பல பேர் மாறிவிட்டார்கள். ஆனால், இவர் கடைசி வரையில் அப்படியே இருந்தார். நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றாலும், ‘‘அங்கே சமைப்பவர்கள் யார்?’’ என்று கேட்பார்.
‘‘பார்ப்பனர்கள் சமைத்ததை சாப்பிடமாட்டேன்’’ என்பதில் மிக உறுதியாக இருந்தவர்
குடும்பங்களோடு இயைந்த இயக்கம் இந்த இயக்கம். நூறு ஆண்டுகள் ஆனாலும், மறக்கமாட்டோம். அதனால்தான், அவருடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்கிறோம். ஏதோ சடங்கு, சம்பிரதாயம் என்று நாங்கள் கலந்துகொள்ளவில்லை.
நீரிழிவு நோய் அவருக்கு இருந்தாலும், பசியெ டுத்தாலும், ‘‘செத்தாலும் சாவனே தவிர, பார்ப்பனர்கள் சமைத்ததை சாப்பிடமாட்டேன்’’ என்று மிகத் தீவிரமாக இருந்தவர்.
கிராமத்தில், திருமணங்களை வைத்திருந்தால், அந்தத் திருமணத்தில் பார்ப்பனர் சமைத்திருந்தால், அந்த நேரத்தில் எங்கே போய் சாப்பிடுவது?
அய்யா பெரியார்கூட ஒருமுறை கேட்டார், ‘‘சோமு சாப்பிட்டாரா?’’ என்று கேட்டார்.
அப்போது புலவர் இமயவரம்பன் அவர்கள், ‘‘அவர் சாப்பிடமாட்டார்’’ என்று சொன்னார்.
ஏன் சாப்பிடமாட்டார்? என்று அய்யா கேட்டார்.
புலவர் பட்டென்று சொன்னார், ‘‘அய்யா, அது வந்து…’’ என்று கொஞ்சம் தயங்கினார்.
அப்போது அன்னை மணியம்மையார் வந்து, ‘‘என்ன அண்ணே, சோமு அண்ணன்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘அய்யர் சமைக்கிறார் என்பதை பார்த்துவிட்டார். ஆகவே, பட்டினியாக இருந்தாலும், இந்த சமையலை சாப்பிடமாட்டார். 60 மைலுக்கு அப்பால் சென்றுதான் சாப்பிடவேண்டும் என்றாலும், இரண்டு வாழைப் பழங்களை வாங்கி சாப்பிடுவார்’’ என்றார்.
கொள்கை வீரராகவே வாழ்ந்தவர்!
கொள்கை வீரராகவே வாழ்ந்தார்; கொள்கையால் வளர்ந்தார்; கொள்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி யவர்.
அவருடைய பிடிவாதம்தான் கொள்கை. எந்த அள விற்கு என்றால், தன்னுடைய உடலை வருத்திக் கொள்ளக்கூடிய அளவிற்குக்கூட அந்தப் பிடிவாதம் இருந்தது.
இந்த இயக்கம் சாதாரணமாக வளரவில்லை. திடீ ரென்று, ‘மந்திரக் கோல்’ சுற்றியதால், வளரவில்லை. அதனால்தான், இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது என்று உறுதியாகக் கூறு கின்றோம்.
இன்றைக்கு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தி ருக்கின்றது என்றால், அடிக்கட்டுமானம் மிக பலமாக இருப்பதினால்தான்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒருவருடைய நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி யடைகின்றோம்.
எல்லாவற்றையும்விட, இயக்கத்தின் சார்பாக இந்தக் குடும்பத்தை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
கொள்கை மாறாமல் இருக்கக்கூடிய குடும்பம்!
பெரியாரிடம் படித்தவர்களின் பட்டியல் ஏராளம் உண்டு. அப்படிப்பட்ட பட்டியலில், கொள்கை மாறாமல், கடைசிவரைக்கும் அந்த நன்றி உணர்ச்சியோடு இன்றைக்கு இந்தக் குடும்பத்தினர் இங்கே சந்தித்திருக்கின்றார்கள் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
எல்லோரும் இன்றைக்குக் கொண்டாடக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள் என்று தளபதி அவர்கள் சொன்னது, எங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது
விழுதுகள் நன்றாக இருக்கின்றன!
‘‘கடவுள் இல்லை என்று சொல்பவர்கள்; அவர்கள் எல்லாம் எப்படி நன்றாக இருப்பார்கள்?’ என்று கேட்டவர்களுக்கு, ‘‘நன்றாக இருக்கிறோம்; ஒன்றாக இருக்கிறோம்; நன்றாகப் படித்திருக்கின்றோம்; வழிவழியாக விழுதுகள் நன்றாக இருக்கின்றன’’ என்பதுதான் பதில்!
எனவே, விழுதுகள் வளர்ந்த காரணத்தினால், விழுதுகள் வேரைப் பாராட்டுகின்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது என்பது மிகச் சிறப்பானதாகும்.
இந்தக் கொள்கையினால் யாரும் தாழமாட்டார்கள். இந்தக் கொள்கை என்பது அறிவியல் – விஞ்ஞானம். அறிவியலினால் பயன்படக் கூடிய அளவில்தான் இருக்கும்
கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றோம்!
ஒவ்வொரு சுயமரியாதைக்காரர்களுக்கும் நூறாண்டு விழாவினை ஏன் நடத்துகின்றோம் என்றால், அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக என்பது மட்டுமல்ல, இந்த இயக்கப் பாதை எப்படிப்பட்டது? கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், ஓராண்டில், பல நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்டிருக்கின்றோம்.
அறிஞர் அண்ணா அவர்கள் சென்னார், ‘‘பல நூற்றாண்டுகளை ஒரு குளிகைக்குள் அடைப்பதுபோன்றதுதான் பெரியாருடைய உழைப்பு’’ என்றார்.
ஒரு வாரம் திராவிடர்த் திருநாள் விழாவை நடத்திக் காட்டிய ஊர் திருவத்திபுரம்!
செய்யாறு மாவட்டமே இயக்க வளர்ச்சியில், குறிப்பிடத்தகுந்ததாகும்.
இந்தியாவில், தமிழ்நாட்டில், பொங்கல் விழாவை – தமிழர் விழா, திராவிடர்த் திருநாள், தமிழர் திருநாள் என்று கொண்டாடி, மற்ற பண்டிகைகள் எல்லாம் மூடத்தனங்கள் நிறைந்தவை என்று சொல்லி, ஒரு வாரம் திராவிடர்த் திருநாள் விழாவை நடத்திக் காட்டிய ஒரே ஒரு ஊர் செய்யாறில், திருவத்திபுரம்தான்.
அங்கே செல்லாத தலைவர்களே கிடையாது. தி.மு.க. பிரிந்த பிறகுகூட, நம்முடைய வேல்.சோமசுந்தரம் அவர்கள், தாடி அருணாசலம், காங்கன் போன்றோர் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
அண்ணா அவர்கள் முதன்முதலாக நாடகம் போட்டார். அதற்காக கைதானவர்கள் எங்கே இருந்த வர்கள் என்றால், செய்யாறிலிருந்தவர்கள்தான். ‘திராவிட நாடு’ பத்திரிகையில், இரணியன் கைது, பிரகலாதன் கைது – என்று வெளியிடும் அளவுக்கு நாடகத்தில் வேடம் போட்ட கையோடு பிடித்து வந்து காவல் நிலையத்தில் உட்கார வைத்தார்கள்.
ஒவ்வொரு வரலாறும், அற்புதமான கல்வெட்டுகள்!
‘விடுதலை’யில் பார்த்தீர்கள் என்றால், அந்தப் பட்டியலைப் போட்டிருப்போம். ஆகவே, ஒவ்வொரு வரலாறும், அற்புதமான கல்வெட்டுகள்.
கீழடியில் எப்படி தோண்டித் தோண்டி வரலாறுகளை எடுப்பதுபோன்று, மிகப்பெரிய வரலாறு இந்த இயக்கத்திற்கு உண்டு. அதை நீங்கள் நிலைநாட்டுகின்ற வகையில் இன்றைக்கு இந்த விழா அமைந்திருக்கின்றது.
ஆகவேதான், இது இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி விழா – வெறும் நூறாண்டு நிறைவு விழா என்பது மட்டுமல்ல – தனி நபர்களைவிட, தத்துவங்கள் வெற்றி பெறும் என்ற அளவிற்கு அவர் ஒரு சாட்சியம்.
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
இந்தக் குடும்பம் நல்ல குடும்பம் – பல்கலைக் கழகம். கொள்கைக் குடும்பம். இந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் இவ்வளவு அன்பாகவும், ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் இருந்து, பிள்ளைகள் வாழையடி வாழையென நல்ல விழுதுகளாகத் தயாரித்திருப்பதற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க அவருடைய வெற்றிகள்!
இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் நம்முடைய வேல்.சோமசுந்தரம்!
நினைவில் புகழ்வணக்கம் செலுத்தி, அய்யா வேல்.சோமசுந்தரம் அவர்களுடைய குடும்பத்தி னருக்கு வெற்றி வணக்கத்தைச் செலுத்தி, பலரும் கொள்கையாளர்களாக வாழும் நிலைக்கு இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் நம்முடைய வேல்.சோமசுந்தரம் என்று கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.