அக்கம் பக்கம் அக்கப் போரு!

2 Min Read

பங்குனி உத்திரம் – ஒரு கல்யாணக் கதை கேளீர்!

பண்டிகைகளுக்குக் குறைவில்லை. பக்தியின் பேரால் பகல் கொள்ளைக்கும் குறைவில்லை., இன்று பங்குனி உத்திரமாம்! பத்திரிகைகள், ஊடகங்களிலெல்லாம் ஏகப்பட்ட கதைகள்.
அநேகமாக மேலோக(!) ரிஜிஸ்டர் ஆபீசில் இன்று ஏக கிராக்கி போல! பல கடவுள்களுக்குத் திருமணம் நடந்த நாளும் இதுதானாம். அப்பா-அம்மா திருமண நாளில் நானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிலர் விரும்புவதில்லையா, அது போல இருக்குமோ? சிவன் – பார்வதி திருமணம், முருகன் – வள்ளி திருமணம், கள்ளழகர் திருமணம், இந்திரன் – இந்திராணி திருமணம் எல்லாம் இன்று நடந்தவை தானாம். ராமன்- சீதா, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்குத் திருமணம் நடந்த தினமும் இதுதானாம். ஆண்டாள் – ரங்க மன்னார் அதனால் திருமணமாகாதவர்கள் இன்று விரதம் இருக்க உகந்த நாளாம். மேட்ரிமோனியல் கம்பெனியெல்லாம் அடுத்தடுத்து இந்த நாளில் டிஸ்கவுண்ட் அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்த வரிசையில் ஒரு திருமணம் தான் பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கும் நடந்த திருமணம்.
பிரம்மன் யார்? ஹிந்து மதத்தின் படி படைப்புக் கடவுள். சரஸ்வதி யார்? பிரம்மனால் படைக்கப்பட்டவள் – பிரம்மனின் மகள்.
படைத்த கடவுள் சும்மா இருந்ததா? தான் படைத்த தன் மகள் அழகைக் கண்டு மோகித்ததாம். அவளையே அடைய வேண்டும் என்று விரும்பியதாம். இதனைக் குறித்து சிவனுடனும் கலந்துரையாடியதாம். இது சரியில்லை என்று சிவன் சொன்னாலும், அதைக் கேட்காமல் பிரம்மன் சரஸ்வதியையே அடைந்தானாம்.

இதையெல்லாம் பக்தி சிரத்தையுடன் பேசிப் புளகாங்கிதம் அடைந்துவந்தவர்களை நோக்கி, பெரியார் கேள்வி கேட்கத் தொடங்கியதும், புராண ஆபாசங்களை எடுத்து அடுக்கத் தொடங்கியதும், இப்போது என்ன சொல் கிறார்கள்.
“அதை அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. தத்துவார்த்தமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மன், சரஸ்வதியை ஞானத்தின் வடிவமாகப் படைத்தார். அவரைப் படைத்தபின், அதைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்பினார். ஞானத்துடன் உற்பத்தி நடக்க சரஸ்வதி பிரம்மன் இணைந்து படைப்புகள் தொடர்ந்தன. ஞானத்தை அடைந்ததையே இதிகாச, புராணங்கள் அப்படிக் கூறுகின்றன” என்று விளக்கம் கூறுகின்றார்கள் புதிய புளுகர்கள்.

இப்போது போய் பழைய புராணக் கதைகளையெல்லாம் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தால், ஆபாசம் என்று அறிந்துகொண்டுவிட மாட்டார்களா மக்கள்! அதனால் தான் புதிய வியாக்கியானங்கள்.
சரி, அவர்கள் சொல்படியே பார்த்தால், பிரம்மன் ஞானத்தை அடையாமல் தான் சிவன் தடுத்தானா? அல்லது சரஸ்வதியைப் படைத்து, அவள் ஞான வடிவு என்று தெரிந்து கொள்ளும் முன்பு வரை பிரம்மன் படைத்ததெல்லாம் அறிவற்றவர்களையா? பெண் மான் உருவு எடுத்துத் தப்பியோடிய சரஸ்வதியைப் பெண்டாள, ஆண் மான் உருவு எடுத்து பிரம்மன் ஓடிய கதையெல்லாம் ஞானத்தைத் தேடி ‘ரேப்’ செய்ய பிரம்மன் முயன்ற கதை என்று அடித்துவிடப் போகிறார்களா?
உலக மகா குப்பைக் கிடங்கப்பா இந்து மதப் புராணங்களும், இதிகாசங்களும்!

– குப்பைக் கோழியார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *