‘‘அதிகரித்து வரும் மத பதற்றங்கள், சிறுபான்மை யினரை நடத்துதல் மற்றும் இணைய தணிக்கை காரணமாக இந்தியாவின் உலகளாவிய பிம்பம் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெறும் எல்லை மோதல்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவையும் எதிர்மறையான எண்ணத்துக்கு வழி வகுத்துள்ளது.’’
இந்த அடிப்படையில் உலகளாவிய வெறுக்கப்படும் 10 நாடுகளின் பட்டியலில் ‘நியூஸ் லீக்’ என்கிற அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவும் அடக்கம்.
அதற்கான காரணங்கள்தான் மேலே குறிப்பிட்டி ருப்பவை!
அமெரிக்காவின் குடியரசு தலைவராகவிருந்த ஓபாமா இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடியை அருகில் வைத்துக் கொண்டு சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும்.
மதச் சார்பின்மையைப் பின்பற்றிய வரை இந்தியா வளர்ச்சி அடைந்தது – அமைதியும் நிலவியது என்ற ஒபாமாவின் கூற்றில் அடங்கியிருக்கும் கருத்து புரிந்து கொள்ளத்தக்கதே!
ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களே, வெளிப்படையாக ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறுவது – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு விரோதம் தானே!
450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்? பிஜேபியின் முக்கிய தலைவர்களின் நேரடி வழிகாட்டுதலில் தானே அந்த நாசகரமான அழிவு வேலை நடந்தது!
அந்த இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிற்காலத்தில் இந்தியாவின் உச்சபட்ச அதிகார மிக்க பதவியில் அமரவில்லையா?
இன்றைய பிரதமர் அன்றைய குஜராத் மாநில முதலமைச்சர் கோத்ரா ரயில் விபத்தை மய்யப்படுத்தி, குஜராத்தில் மதக் கலவரம் நடந்த போது எப்படி நடந்து கொண்டார் என்பது உலகத்துக்கே தெரிந்த ஒன்றாயிற்றே!
2005ஆம் ஆண்டு அமெரிக்கா, விசா கொடுக்க மறுத்தது. இது “International Religious Freedom Act” என்ற சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மதச் சுதந்திரத்தை மீறியதாகக் கருதப்படுபவர்களுக்கு விசா மறுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்தியப் பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 2014ஆம் ஆண்டு வரை இந்தத் தடை நீடித்தது.
பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேயியே மனங் குமுறி ‘நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளி நாடுகளுக்குச் செல்ல முடியும்?’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தாரே!
1998 ஜூன் 25 அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் என்ற இடத்தில் புதைக்கப்பட்ட கிறித் தவர் சடலத்தை சங்பரிவார்கள் தோண்டி எடுத்ததை மறக்கத்தான் முடியுமா?
1999 ஜனவரி 23ஆம் தேதி ஒடிசாவில் நடைபெற்ற ஒரு கொடூரம் இன்று நினைத்தாலும் உடலெல்லாம் நடுங்கக் கூடியது.
ஒடிசா மாநிலம் மனோகர்பூரில் தொழு நோயாளிகளுக்காகத் தொண்டு செய்து கொண்டிருந்தது ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து வந்த ஒரு குடும்பம்.
ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ், (வயது 58) அவரது அருமைச் செல் வங்கள் பிலிப்ஸ் (வயது 9), திமோத்தி (வயது 6) ஆகியோர் பதறப்பதற தீ வைத்துக் கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனரே!
அந்த நேரத்தில்கூட சங்பரிவார்க் கூட்டத்தின் முக்கிய அங்கமான பஜ்ரங்தள்ளின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஜெயின் கூறியது என்ன?
‘இந்துக்களை அழிக்க நினைப்பவர்கள் எங்களை நினைத்துக் கதி கலங்க வேண்டும். அவர்கள் எங்களை நினைத்துப் பீதி அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கமே எங்களைப் பார்த்துப் பயப்படுகிறது’’ என்று பேசவில்லையா?
அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி ‘திருவாய்’ மலர்ந்ததுதான் கொடுமையிலும் கொடுமை!
‘பஜ்ரங்தள்காரர்கள் மிகவும் நல்லவர்கள் – அவர்கள் இது போன்ற காரியங்களை செய்திருக்க மாட்டார்கள்’’ என்று சொன்னது மன்னிக்கத்தக்கதுதானா?
கோத்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்கள் எ்ணிக்கை எத்தனையோ ஆயிரம்.
பில்கிஸ்பானு என்ற 21 வயது பெண்ணின் குடும் பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில் 3 வயது குழந்தையும் அடங்கும் – 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலத்திற்கு முன்னதாகவே பிஜேபி அரசால் விடுதலை செய்யப்பட்ட தெல்லாம் சாதாரணமா?
மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததுதான் அமைந்தது. இஸ்லாமியர்களைக் குறி வைத்து எத்தனை எத்தனை சட்டங்கள்! ‘யுனிஃபாம் சிவில் கோட்’ குடியுரிமை சட்டம், வக்ஃபு போர்டு திருத்த சட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றை எல்லாம் கவனத்திலும், கணக்கிலும் கொண்டுதான், உலகளவில் வெறுக்கப்படும் நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்று ‘நியூஸ் லீக்’ என்கிற அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.